திமுக- அதிமுக கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை...
.திமுக-அதிமுக-கூட்டணி
* காங்கிரஸ் - விஜய் கூட்டு! மோடி விரும்பவில்லை...
* ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு - 6 அல்லது ஒரு வருடத்தில் மீண்டும் தேர்தல் வரலாம்!!
* ஆட்சி அமைக்க விஜய் இராஜதந்திர முயற்சி...
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதைத் தடுக்க, நீண்டகால அரசியல் பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் திரைமறைவில் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக புதுடெல்லி ஆங்கில ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
இருப்பினும், இரு கட்சிகளும் தங்களை திராவிடப் பாரம்பரியத்தின் நேரடி வாரிசுகளாக முன்னிறுத்துவதால், அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படுவது குறித்த தயக்கம் நீடிக்கிறது.
ஆனால், காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி விஜய்யுடன் இணைவது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்பதால், இத்தகைய கூட்டணியை மோடி அரசாங்கம் விரும்பாமல் போகலாம் என்ற விவாதங்களும் மேலெழுந்துள்ளன.
இப் பின்னணியில் தான், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த எச்சரிக்கைகள் ஒரு அரசியல் உத்தியாக (Political Strategy) முன்வைக்கப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அல்லது முந்தைய அரசாங்கம் கலைக்கப்பட்ட சில நாட்களுக்குள் புதிய அரசாங்கம் பதவியேற்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஆளுநர் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி அல்லது கூட்டணிகளை ஆட்சி அமைக்க அழைப்பார்.
பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு பொதுவாக 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.
தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் (Hung Assembly) அமையும் சூழலில், கட்சிகளிடையே இணக்கம் ஏற்படவில்லை என்றால் சட்டமன்றம் முடக்கப்படலாம்.
இத்தகைய இக்கட்டான நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்படுவது தற்காலிகத் தீர்வாக அமையும்.
இது ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடும்.
இந்தக் காலக்கெடுவிற்குள் நிலையான அரசாங்கம் அமைய வாய்ப்பில்லாத பட்சத்தில், தேர்தல் ஆணைக்குழு மீண்டும் ஒரு புதிய தேர்தலை (Fresh Elections) நடத்தும்.
அதாவது, ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில், அரசியலமைப்புச் சட்டப்படி அடுத்த ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டிற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு உண்டு.
இதேவேளை, விஜய் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கான வியூகங்களை திமுக - அதிமுக தரப்பினர் வகுத்து வருகின்றனர்.
கொள்கை ரீதியாக இருவேறு துருவங்களாக இருந்தாலும், இதில் மட்டும் அவர்களுக்குள் ஒரு 'முரண்பாட்டில் உடன்பாடு' நிலவுகிறது.
ஆனால், அதைக் கடந்து, 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிருபிக்க விஜய், இராஜதந்திர முயற்சிகளை கையாளுகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
அ.நிக்ஸன்-பத்திகையாளர்
Editor