தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டி: பெரம்பூர், திருச்சியில் வேட்புமனு தாக்கல்
தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டி:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் முதன்முறையாகப் போட்டியிடும் நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பிரமாணப் பத்திரங்களில் குற்ற வழக்குகள் மற்றும் வயது தொடர்பாக முரண்பாடுகள் இருந்தன. இதனைச் சரிசெய்து, இன்று (04)பெரம்பூர் தொகுதிக்கான திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை தேர்தல் அதிகாரியிடம் அவர் சமர்ப்பித்தார்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியிலும், ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பெரம்பூர் மனுவில் தன்மீது எந்தக் குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரு மனுக்களிலும் விஜய்யின் வயதும் முரணாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அதன்படி, இன்று பெரம்பூர் வந்த விஜய், திருத்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் லகபா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மெர்லின் சுகந்தி ஆகியோர் விஜய்யை எதிர்கொள்கின்றனர். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவின் நடப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதன்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள தவெக காரணமாக தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது.