ஸ்டாலின் நட்பு அரசியலைத் தாண்டியது — விஜய் வெற்றி ஆச்சரியமான மகிழ்ச்சி: ரஜினிகாந்த்
ஸ்டாலின் நட்பு அரசியலைத் தாண்டியது — விஜய் வெற்றி ஆச்சரியமான மகிழ்ச்சி:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு சென்னை — போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியல் குறித்தும் முதலமைச்சர் விஜய் குறித்தும் வெளிப்படையாக கருத்துகளை பகிர்ந்தார்.
ஸ்டாலினை சந்தித்தது பற்றி விளக்கம்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "ஸ்டாலின் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர். எங்கள் நட்பு அரசியலைத் தாண்டியது. கொளத்தூரில் அவர் தோல்வியடைந்தது என்னை வருத்தப்படுத்தியது; நண்பராகச் சென்று பார்த்தேன். அதை தவறாக விமர்சித்தனர்" என்று தெளிவுபடுத்தினார்.
"விஜய் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காக ஸ்டாலினை சந்தித்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அப்படிப்பட்ட தரம் குறைந்த செயலுக்கு ரஜினிகாந்த் தயாராக மாட்டார்" என்று உறுதியாக கூறினார்.
விஜய் மீது பொறாமையா? — நேரடி மறுப்பு!
விஜய் மீது பொறாமை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நேரடியாக மறுத்த ரஜினிகாந்த், "நான் அரசியலில் இல்லை. அப்படியிருக்கும்போது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை இருக்க வேண்டும்? இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனியாக வெற்றி பெற்றது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது" என்றார்.
"விஜய் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன். மக்கள் அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்; அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியலில் இருந்திருந்தால் வெற்றி நிச்சயம் — ரஜினி
"எனக்கும் விஜய்க்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தலைமுறை வித்தியாசம் உள்ளது. நான் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்; அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தன்னம்பிக்கையோடு கூறிய அவர், உடல்நலக் காரணங்களாலும் திரைத்துறை பொறுப்புகளாலுமே அரசியலிலிருந்து விலகி நின்றதாக விளக்கினார்.
விஜய் அரசுக்கு இரண்டு ஆண்டு அவகாசம் வேண்டும்
"மக்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அதன் விளைவாகவே விஜய் முதலமைச்சராகியுள்ளார். அரசை தேவையற்ற அழுத்தங்களுக்கும் தொந்தரவுகளுக்கும் உள்ளாக்காமல், மக்கள் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
Editor