தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ்
எம்எல்ஏ பல்லவிக்கு வக்கீல் நோட்டீஸ்
சென்னையில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனை தொடர்பாக திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, தவெக (TVK) திருவிக நகர் எம்.எல்.ஏ எம்.ஆர். பல்லவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். பல்லவி, சென்னையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நோட்டீஸில், பல்லவி வெளியிட்ட கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவை திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்; தவறினால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மின்வெட்டு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளால் திடீர் மின்தடைகளும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவகாரம் சட்டரீதியான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது
Editor