ஆபத்தான அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சு!! 

அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சு!! 

ஆபத்தான அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சு!! 
ஆபத்தான அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சு!! 
ஆபத்தான அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சு!! 
ஆபத்தான அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சு!! 

* இலங்கைப் பொருளாதாரத்தை மேலும் நெருக்கும்....

* அநுர அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? 

* வகிபாகத்தை மாற்ற வேண்டிய தமிழ்த் தரப்பு 

--- --- ---

இந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நிலவிய அமெரிக்க - ஈரான் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளதால், பிராந்தியத்தில் மீண்டும் கடுமையான பதற்றம் உருவாகியுள்ளது. 

ஆகவே, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இந்த மே மாத இறுதியில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு ஒரு புதிய போர்நிறுத்த நீட்டிப்பை (Ceasefire Extension) அமல்படுத்த, தீவிரப் பேச்சு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானது ஹார்முஸ் நீரிணை வழியாகவே இடம்பெறுகிறது. 

தற்போதைய போர்ச்சூழல் காரணமாக எண்ணெய் கிணறுகள் கடுமையாகச் சேதமடைந்து வருவதுடன், அவற்றுக்கான புனரமைப்புப் பணிகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவுமில்லை.

இப் பின்புலத்தில், கடல்வழிப் பாதைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. 

அமெரிக்க - ஈரான் போர் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது இரகசியமாகவோ இன்னும் முடிவுக்கு வரவில்லை. 

தற்போதைய நிலையில் அமெரிக்காவும் ஈரானும் "துப்பாக்கிகளைக் கையில் ஏந்தியபடியே" அமைதிப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றன.

ட்ரம்ப், ஈரானுடன் ஒரு இறுதிப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிரமாக முயற்சிக்கிறார். ஒப்பந்தத்தின் பெரும்பாலான பகுதிகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இத் தற்காலிக திட்டத்தின்படி, இரு நாடுகளும் மேலும் 60 நாட்களுக்குப் போரை நிறுத்தி, நிரந்தர அமைதிக்கான விதிமுறைகளை, குறிப்பாக அணுசக்திக் கட்டுப்பாடு மற்றும் ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பது குறித்து உரையாட ஒப்புக்கொண்டுள்ளன.

அதேநேரம், இந்த அமைதி முயற்சிக்கு அமெரிக்காவின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் தீவிரவாதிகள் (Hawks) மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

இதன் காரண-காரியமாகப் போர் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற சாத்தியங்கள் மிக அதிகமாகத் தென்படுகின்றன. 

மே மாத இறுதி வரை, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, அமெரிக்கா "தற்காப்பு நடவடிக்கை" என்ற பெயரில் ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் படகுகள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்துகொண்டே அமெரிக்கா குண்டு வீசுவது "நம்பிக்கைத் துரோகம்" என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் புதிய கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) விதைத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுவதால் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. 

அடுத்த சில நாட்களில் ஈரான், அமெரிக்காவின் புதிய தாக்குதல்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கிறது என்பதைப் பொறுத்தே, அமைதி திரும்புமா அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்பது தெரியவரும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

அமெரிக்கா, ஒப்பந்த நடைமுறைகளை மதிக்காத பட்சத்தில், தங்களின் அணுசக்தித் தளங்களை தற்காத்துக் கொள்ள "மீண்டும் போரை ஆரம்பிக்கத் தயங்க மாட்டோம்" என ஈரான் இராணுவமும் எச்சரித்துள்ளது.

அதேநேரம் இத்தகைய, உலகப் போர்ப் பின்னணி, இலங்கைக்குக் கடுமையான பொருளாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. 

இலங்கை மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் இருக்க வேண்டுமானால், அநுர அரசாங்கம், கடந்த கால ஊழல்களை ஒழித்து, எரிசக்திப் பாதுகாப்பில் (Energy Security) மிகக் கடுமையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய உடனடி நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

ஊழல் மோசடிகளும் அதிகாரத் துஷ்பிரயோகமுமே இலங்கைப் பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம் என்பது பட்டவர்த்தனம். 

ஆகவே, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை (Anti-Corruption Act) உடனடியாக நடைமுறைப்படுத்தி, அரச செலவுகளைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை (Transparency) அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு (Debt Restructuring) திட்டங்களை எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றித் தொடர்வதன் மூலம், உலக வங்கி - ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து அவசர நிதியுதவிகளைப் பெற முடியும். 

ஊழல் மோசடிக்கும், அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கும் இடமளித்தால், தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை தாக்குப் பிடிக்க முடியாத ஆபத்தான சூழல் உருவாகும்.

நீண்டகால இனநெருக்கடிக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாதவரை, இலங்கைத்தீவின் பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் வெகுதூரம் நோக்கிய சிந்தனையாகவே தொடரும். 

தமிழ்த்தரப்பும் இவ்விவகாரம் குறித்து உடனடியாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது. தற்போதைய அமெரிக்க - ஈரான் போர்ச்சூழலும், அதன் நீட்சியான இந்தோ - பசுபிக் பிராந்திய பதற்றங்களும் ஆரோக்கியமான புவிசார் அரசியல் சூழலைத் தோற்றுவிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

குறிப்பாக, தனிநபர் மோதல்கள், வசைபாடல்கள், கட்சி அரசியல் முரண்பாடுகள், தமிழ்த்தேசிய கருத்தியலை மலினப்படுத்தும் தரம் தாழ்ந்த விவாதங்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியலைக் கொச்சைப்படுத்தும் பொறுப்பற்ற நாடாளுமன்ற உரைகள் போன்றவற்றைத் தமிழ்ப் பிரதிநிதிகள் முற்றாகத் தவிர்க்க வேண்டும். 

உலகளாவிய இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், 'சுயநிர்ணய உரிமை' என்ற நியாயத்தை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்த, தமிழ்த்தரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளுடன் பேரம் பேசக்கூடிய ஒரு பலமிக்க இராஜதந்திர சக்தியாகத் தமது வகிபாகத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அ.நிக்ஸன்-- பத்திரிகையாளர்