இரு மாதங்களில் சீன வர்த்தகம் அதிகரிப்பு
சீன வர்த்தகம் அதிகரிப்பு
*அமெரிக்கவுக்கான ஏற்றுமதி சரிவு
*ஐரோப்பிய - ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி உயர்வு
சீனாவின் வர்த்தகம் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐந்தில் ஒரு பங்காக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வை மக்குப்பிஸ்னஸ் (macaubusiness) என்ற சீன அரச செய்தி நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை பிரசுரித்துள்ளது.
இந்த ஆய்வின் பிரகாரம், 2026 ஆம் வருடத்தின், முதல் இரண்டு மாதங்களுக்கான அதிகாரபூர்வ புள்ளி விபரங்கள், ஈரான் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன் வலுவானதாக இருந்தது.
இந்த மதிப்பீட்டின் படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் சரிவு உள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு மாதங்களிலும் சீனாவின் வர்த்தகம் உயர்வடைந்துள்ளது.
ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 21.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்களின் மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட 7.2 சதவீதத்தை முறியடித்துள்ளதாக சீன சுங்கத்தின் பொது நிர்வாகம் கூறியுள்ளது.
ப்ளூம்பெர்க் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்ட ஏழு சதவீதத்தை விடவும் இறக்குமதிகள் 19.8 சதவீதம் உயர்ந்துள்ளன.
9 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான அதிகாரபூர்வ தரவுகளின் பிரகாரம், இறக்குமதி அதிகரிப்பு நுகர்வோர் விலைகள் மூன்று ஆண்டுகளில் மிக விரைவான வேகத்தில் உயர்ந்ததைக் காட்டுகிறது.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 11.0 சதவீதம் சரிந்தன, வோஷிங்டனுடனான வர்த்தக முரண்பாடுகள் நீடித்தமை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டண பிரச்சாரத்தை (tariff campaign) முன்னெடுத்தமை ஆகிய காரணங்களினால் இச் சரிவு ஏற்பட்டது.
சென்ற ஜனவரி - பெப்ரவரி மாதங்களில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மொத்தம் $67.24 பில்லியன்களாக இருந்தாக புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் $75.56 பில்லியனாக இருந்தது.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 27.8 சதவீதம் உயர்ந்ததுள்ளது.
ஆசியான் (ASEAN )நாடுகளுக்கான ஏற்றுமதி 29.2 சதவீதம் உயர்ந்ததுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவன ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அ.நிக்ஸன்
பத்திரிகையாளர்-
Editor