நிலத்தடி ஏவுகணை தளங்களை வலுப்படுத்தும் ஈரான் : அம்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள் !

நிலத்தடி ஏவுகணை தளங்களை வலுப்படுத்தும் ஈரான் !

நிலத்தடி ஏவுகணை தளங்களை  வலுப்படுத்தும் ஈரான் : அம்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள் !

ஈரானில் சமீபத்திய தாக்குதல்களால் சேதமடைந்த நிலத்தடி ஏவுகணைத் தளங்களை அந்நாடு மீண்டும் அணுகும் வசதியை விரிவுபடுத்துவதோடு, அவற்றின் அளவையும் கூட்டி வருவதாக சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இராணுவப் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.

பல மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது மூடப்பட்டிருந்த பல சுரங்க நுழைவாயில்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் பல புதிய நுழைவாயில்களில் அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையும் அவை வெளிப்படுத்துகின்றன.

இராணுவ வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த நிலத்தடி வளாகம் ஈரானின் மூலோபாய பாதுகாப்பு அமைப்பின் முக்கிய உறுப்பாகும். மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பகுதிகளில் ஆழமாகக் கட்டப்பட்டுள்ள இம்மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளை சேமித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் ஏவுதல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டவை. வழக்கமான வான்வழித் தாக்குதல்களிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் தன்மை கொண்டவை.

ஈரானின் இந்த நிலத்தடி ஏவுகணை வலையமைப்பு நாடு முழுவதும், குறிப்பாக மூலோபாய முக்கியத்துவம் மிக்க ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் விரவிக் காணப்படுவதாக இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வளாகத்தில் ஏவுகணைக் கிடங்குகள், ஏவுதல் தயாரிப்புப் பகுதிகள், கட்டளை மையங்கள் மற்றும் பாதுகாப்பான விநியோகப் பாதைகள் அடங்கும்.

தெஹ்ரான் ஆட்சி, தனது ஏவுகணை உள்கட்டமைப்பை முழுமையாக இயங்கு நிலைக்குக் கொண்டுவரும் செயல்முறையை வேகப்படுத்தியுள்ளதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரான், அமெரிக்கா மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கிடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடாவில் எதிர்கால இராணுவ மோதல் ஏற்பட்டால் இந்த நிலத்தடி ஏவுகணை வலையமைப்பு முக்கியப் பங்காற்றும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பல மையங்களின் சரியான இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் முழு இயக்க நிலை குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், தொடர்ந்து வரும் இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நீண்ட தூர ஏவுகணைப் படையின் தயார் நிலையைப் பேணுவதற்கு ஈரான் முதன்மை அளித்து வருகிறது என்பதை இந்தச் சமீபத்திய வளர்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.