மத தலைவர்களின் பாலியல் குற்றங்களும் சர்வதேச பொது நீதிச் சட்டங்களும்.

மத தலைவர்களின் பாலியல் குற்றங்களும் சட்டங்களும்.

மத தலைவர்களின் பாலியல் குற்றங்களும்  சர்வதேச பொது நீதிச் சட்டங்களும்.
மத தலைவர்களின் பாலியல் குற்றங்களும்  சர்வதேச பொது நீதிச் சட்டங்களும்.
மத தலைவர்களின் பாலியல் குற்றங்களும்  சர்வதேச பொது நீதிச் சட்டங்களும்.

* சமயத் தலைவர்கள் இருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இந்த மாதம் வழங்கிய தீர்ப்பு, இலங்கைக்கு சிறந்த உதாரணம்

* தேரருக்கு பௌத்த சங்க நீதிமன்றத்தில் விசாரணை!! நீதித்துறையை இரண்டாம் தரமாக்கும் செயல்...

* 2021 இல் போப் முன்வைத்த திருத்தம்.

ஆன்மீகத் தலைவர்கள் ஆன்மீக ரீதியில் எவ்வளவு செல்வாக்கு உள்ள தன்மையோடு வாழ்ந்தாலும், குற்றவியல் சட்டத்தின் பார்வையில் அவர்கள் "சாதாரண குடிமக்களாகவே" நடத்தப்படுகிறார்கள்.

மதத் தலைவர்கள் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், எந்தவித மதவிலக்கும் இன்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதற்கு அமெரிக்க நீதிமன்றம்,இந்த ஆண்டு மே மாதம் 6- 7 ஆம் திகதிகளில் வழங்கிய தீர்ப்பு - அறிவிப்புகள் கட்டியம் கூறுகின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், மிகப் பெரிய ஆன்மீகவாதியாக திகழ்ந்த கிறிஸ்தவ மிஷனரி அமைப்பின், டேனியல் சவாலா (Daniel Savala) என்பருக்கு, இந்த மே மாதம், 7ஆம் திகதி பொது மன்னிப்பு இல்லாத 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்மீகத் தலைவர் சிறுவர்கள் மீதான தொடர் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

மூன்று ஆண்டுகளில் வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டு இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் மற்றொரு ஆன்மீகவாதியான டெர்ரி ரீட் (Terry Reed) என்பவர் 16 வயதுக்கு உட்பட சிறுவர்களை பைபிள் வசனங்களைக் கூறி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் இந்த மே மாதம் 6 ஆம் திகதி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இவருக்கான இறுதித் தண்டனை 2026 ஜூன் மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் பிரபல்யமான இந்த இரண்டு வழக்குகள் பற்றி, நியூயோர்க் ரைம்ஸ் (The New York Times) யுஎஸ் மகசீன் (usmagazine) என்ற செய்தி ஊடகங்கள் மற்றும் சரோன் (Chron) என்ற பிரபல்யமான அமெரிக்க சமூக ஊடகம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் அமெரிக்க நீதிமன்றங்களால் ஐந்து மதத் தலைவர்கள் தண்டனை பெற்றுள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களில், பிரித்தானியாவில் 45 இற்கும் அதிகமான மதத் தலைவர்கள், இத்தாலியில் 35 இற்கும் அதிகமான மதத் தலைவர்கள் தண்டனை பெற்றுள்ளதாக, ஐஐசிஎஸ்ஏ (iicsa.org.uk) என்ற கிறிஸ்தவ மத ஆய்வுத் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கும் இந்திய நாட்டின் ஆசாராம் பாபு, குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் முன்னாள் பிஷப் பிராங்கோ மூலக்கல் போன்ற பல ஆன்மீக மற்றும் மதத் தலைவர்கள் மீதான பாலியல் முறைப்பாடுகள், பொதுவான இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

ஆகவே, 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கொள்கையை தீவிரமாக வலியுறுத்தி வரும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.

அட்டமாஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, இலங்கை பொதுச் சட்டத்திற்கு மாறாக பௌத்த சங்க ஒழுக்க விதியின் கீழான தனி நீதிமன்ற ஏற்பாட்டை அநுர கைவிட வேண்டும்.

கத்தோலிக்க திருஅவை மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அங்கலிக்கன் திருஅவை (Church of England) ஆகியவற்றின் மதத் தலைவர்கள் தவறு செய்தால், அவர்களை விசாரிக்கத் தனித்தனியான திருச்சபைச் சட்டங்கள் (Ecclesiastical / Canon Law) நடைமுறையில் உள்ளன.

ஆனாலும் நிதி மோசடி, பாலியல் குற்றங்கள் போன்ற பொதுவான குற்றவியல் செயல்களுக்கு சாதாரண மக்களை விசாரணைக்கு உட்படுத்தும் பொதுவான நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்களின் ஊடாகவே விசாரணைகள் நடத்தப்படும்.

இந்த நவீன உலகப் பொதுமுறையைத் தற்போது பிரித்தானியாவும் இத்தாலியும் 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியுள்ளன.

பேராயர்கள் (Archbishops), ஆயர்கள் அல்லது குருக்கள் மதக் கோட்பாடுகளை மீறினாலோ, சபை ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறினாலோ அல்லது திருஅவைச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தினாலோ இந்தச் சபை நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடக்கும்.

ஓர் அங்கலிக்கன் மதத் தலைவர் பிரித்தானியப் பொதுச் சட்டத்திற்கு மாறான கொலை, கொள்ளை, நிதி மோசடி, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் (Criminal) செயல்களில் ஈடுபட்டால் அவருக்குச் சபைச் சட்டம் பாதுகாப்பு வழங்காது.

பிரித்தானியாவின் சாதாரண சட்டத்தின்படி அந்நாட்டின் பொலிஸ் துறையும் நீதிமன்றங்களும் நேரடியாக அவர்களைக் கைது செய்து பிரித்தானிய பொதுச் சட்டத்தின் கீழ் விசாரித்துத் தண்டனை வழங்கும்; சிறையிலும் அடைக்கும்.

அதேபோன்று, வத்திக்கானில் திருஅவை நிர்வாகம் மற்றும் ஆன்மீகக் கடமைகளை ஒழுங்குபடுத்த 'கத்தோலிக்க திருஅவைச் சட்டம்' (Canon Law) என்ற மரபு வழிச் சட்டம், நடைமுறையில் உள்ளது.

கடந்த காலங்களில், கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் (Bishops) ஏதேனும் தவறு செய்தால் அவர்களைச் சாதாரண நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது என்ற சிறப்புச் சலுகை இருந்தது.

குற்றம் இழைத்த கர்தினால்களை மற்றொரு கர்தினால் தலைமையிலான உயர்மட்டக் குழுவே விசாரிக்க முடியும் என்ற விதி இருந்தது.

ஆனால், முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் 2021 இல் நடைமுறைப்படுத்திய புதிய சட்ட சீர்திருத்தத்தின் படி இச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது, கர்தினால்கள் நிதி மோசடி போன்ற பொதுவான குற்றங்களைச் செய்தால், வத்திக்கானின் சாதாரண நீதிமன்றத்தில் உள்ள சாதாரண பொதுமக்களான (Lay Judges) நீதிபதிகளே இவர்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

உதாரணமாக, 2023 இல் கர்தினால் ஆன்ஜெலோ பெச்சு (Cardinal Angelo Becciu) என்பவருக்கு நிதி மோசடி வழக்கில் வத்திக்கான் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.---

மத அல்லது ஆன்மீகத் தலைவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களைத் தண்டிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் தனிப்பட்ட சிறப்புச் சட்டங்கள் எதுவும் இல்லை என்பது உண்மை தான்.

ஆனாலும், அனைத்து மனிதர்களும் சட்டத்திற்கு முன் சமம் என்ற பொதுவான சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையில் மதத் தலைவர்கள் மீதான விசாரணைகளும் தண்டனைகளும் அமைகின்றன.

ஓஎச்சிஎச்ஆர் (ohchr.org) என்ற ஐ.நா வின் அதிகாரபூர்வ இணையத்தளம் இந்த விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் (பிரிவு 7), ஐசிசிபிஆர் எனப்படும், குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றுக்கு ஏற்ப, மதத் தலைவர்கள் தங்களின் ஆன்மீக அந்தஸ்தைக் காட்டி குற்றவியல் விசாரணைகளில் இருந்து விலக்கு (Immunity) பெற முடியாது.

ஆகவே, அதற்கு அமைவாக அமெரிக்க நீதிமன்றங்கள் இந்த மாதம் வழங்கிய தீர்ப்புகள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் உதாரணமாக அமைகின்றன.

இலங்கையிலும் பௌத்த சங்க முறை விசாரணை என்பது மத ஒழுங்கு தொடர்பானது மாத்திரமே தவிர, அது இலங்கைத்தீவின் பொதுவான நீதிமன்ற விசாரணைகளுக்கு மாற்றீடாகவோ அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரணாகவோ இருக்க முடியாது.

இதனை அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பௌத்த சங்க முறையின் (Kathikawath) கீழ் விசாரணை நடத்தப்படும் என்ற அநுரவின் அறிவிப்பு, இலங்கையில் சட்ட ஆட்சி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அதுவும், கண்டி மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பௌத்த சங்க விசாரணை முறைமையைக் கொண்டுவரவுள்ளதாக அநுர கூறியமை, இலங்கை நீதித்துறை இரண்டாம் தர நிலையில் தான் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை நிரூபித்துள்ளது. 

அத்துடன், இலங்கை அரசியல் யாப்புக்கு உட்பட்ட நீதித்துறைக் கட்டமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம் - பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பிரதான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை அதிகாரங்கள் ஆகியவற்றை கேள்விக்கு உள்ளாக்கும்.

குற்றம் செய்தவர் ஒரு மதத் தலைவராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி நாட்டின் பொதுவான சட்டத்தின்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரகாரமும் பொலிஸாரும் சிவில் நீதிமன்றங்களுமே விசாரிக்க வேண்டும்.

கதிகாவத்' (Kathikawath) எனப்படும் பௌத்த குருமார் பின்பற்றுவதற்காக தங்களுக்குள் வகுத்துக்கொள்ளும் "மத ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிக் கோவை" என்பதற்கு அமைவாக மாத்திரம், இத்தகைய குற்றங்களை விசாரித்து முடிவு எடுக்க முடியாது.

இந்த நடைமுறை சமகால நவீன சட்ட முறைமைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற உலகப் பொது நீதியின் (Rule of Law) அடிப்படையில் இந்த விவகாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்