தமிழ்நாட்டில் எவர் ஆட்சி அமைத்தால் என்ன? குத்தி முறிவது ஏன்?

தமிழ்நாட்டில் எவர் ஆட்சி அமைத்தால் என்ன?

தமிழ்நாட்டில் எவர் ஆட்சி அமைத்தால் என்ன? குத்தி முறிவது ஏன்?
தமிழ்நாட்டில் எவர் ஆட்சி அமைத்தால் என்ன? குத்தி முறிவது ஏன்?
* சீமான், விஜய், திராவிடக் கட்சிகள் இதற்கு கட்டுப்பட வேண்டும்..

* சீமான், விஜய், திராவிடக் கட்சிகள் இதற்கு கட்டுப்பட வேண்டும்..

* சென்னையை இணைக்கும் ரசிய அரசின் திட்டம்

* அமெரிக்க ஐ போன் நிறுவனங்கள், தமிழ் நாட்டில்

* சென்னையை நோக்கிய சீன மூலோபாயம்

* ஈழத்தமிழர் விடயத்தில் 13 தான்...

இந்தியாவில் உள்ள மாநில ஆட்சி முறைமை, அதாவது சமஸ்டி ஆட்சி முறை என்பது முழுமையானது அல்ல. அது சமஸ்டிக்குள் ஒற்றையாட்சித் தன்மை கொண்டது.

அதாவது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள், மத்திய அரசின் கொள்கையோடு இணைந்து தான் செயற்பட முடியும். 

மத்தியில், மோடி தலைமையிலான பாஜக, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் என, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அவர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இயங்க முடியாது.

ஆகவே, தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் படி மத்திய அரசின் கொள்கைகள் - சட்டங்களுக்கு உட்பட்டு இயங்க வேண்டும்... 

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, இராணுவம் போன்ற முக்கியமான துறைகள் முற்றிலும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால், மாநில அரசுகள் இதில் தனித்து செயல்பட இயலாது. 

மாநில அரசுகளுக்குரிய அதிகாரப் பகிர்வின் ஏழாவது அட்டவணை, இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரங்களை மூன்று பட்டியல்களாகப் பிரிக்கிறது: 

மத்திய பட்டியல் (Union List) இராணுவம், வெளியுறவுக் கொள்கை, நாணயம், அணுசக்தி, ரயில்வே போன்ற 100 துறைகளில் மத்திய அரசுக்கு மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் உண்டு.

மாநிலப் பட்டியல் (State List) சட்டம்-ஒழுங்கு, பொலிஸ் உள்ளூர் நிர்வாகம், சுகாதாரம், விவசாயம் போன்ற 61 துறைகளில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

பொதுப்பட்டியலில் (Concurrent List) கல்வி, வர்த்தகம், தொழிலாளர் நலன் போன்ற 52 துறைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றலாம். 

ஆனால், இரு சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசின் சட்டமே இறுதியானது.
 
தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு மாநில அரசுகளுக்கு, தனி வெளியுறவுக் கொள்கை கிடையாது.

இருப்பினும், அயல் நாடுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளில், உதாரணமாக ஈழத்தமிழர் விவகாரம், மீனவர் பிரச்சினை ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் சட்ட மன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். 

அல்லது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். 

ஆனால், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சிடம் மட்டுமே உள்ளது. 

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356 இன் பிரகாரம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளில் ஏதேனும் ஒரு மாநில அரசு, அரசியலமைப்புக்கு மாறாக செயல்பட்டால், அந்த ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. 

தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் அவ்வப்போது "மாநில சுயாட்சி" என்பதை முழுமையாக கோருகிறது. ஆனாலும், இந்திய மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டே நிர்வாகம் செய்ய முடியும். 

முன்பு ஜம்மு காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, மோடி அரசாங்கத்தால் 2019 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு, ஏனைய மாநிலங்களைப் போன்று பொதுவான சட்டங்களின் கீழ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகவே திராவிடக் கட்சிகள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடத்திய ஆட்சி முறையைப் போன்று தான், சீமான், விஜய் ஆகியோர், ஆட்சி அமைத்தாலும், மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்த வேண்டியிருக்கும்.

ஈழத்தமிழர் தொடர்பான விவகாரத்தில், இந்திய மத்திய அரசு, ”இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரமே வலியுறுத்தும். 

ஆகவே, இந்த நடைமுறையை கடந்து முறைமை மாற்றம் (System Change) ஏற்பட வேண்டுமானால், அது மிகப்பெரிய பலம் பொருந்திய, அதுவும் ஒருமித்த குரலில் நின்று இயங்கக் கூடிய ஆற்றல், அவசியமானது. 

ஆனால், அந்த ஆற்றல், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் இல்லவே இல்லை. எல்லோரும் வெறும் கவர்ச்சி அரசியலுக்குள் (Glamor Politics) மூழ்கியுள்ளனர்.

தமிழ்த்தேசிய கட்சிகளிடமும் பலம் இல்லை. வாக்கு அரசியல் மாத்திரமே அவர்களிடம் உள்ளது.
 
அதேநேரம், அமெரிக்கா, சீனா, ரசியா ஆகிய நாடுகள் இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரத்தில், தமிழ்நாட்டை ஒரு பிரதான புவிசார் மையப் புள்ளியாக கருதி, பல திட்டங்களை இந்திய மத்திய அரசின் ஒத்துழைப்புடன் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுத்த முனைகின்றன. 

அமெரிக்க -சீன வர்த்தக (Trade War) போரினால், பல சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் தங்கள் ஆலைகளை நிறுவி வருகின்றன. 

இது தமிழ்நாட்டின் 1 ரில்லியன் டொலர் பொருளாதார இலக்கை கொண்டது. 

இந்த லாபங்களை பெற மத்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்தி வரும் பின்னணியில், தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய அரசாங்கம், இதற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

சீன பிளஸ் ஒன் (China Plus One) திட்டத்துக்கு மாற்றாக தனது உற்பத்தித் தளங்களை இந்தியாவுக்கு மாற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதன்மை இடமாகத் திகழ்கிறது. 

குறிப்பாக ஐபோன் (iPhone) தயாரிப்பு போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

AI, விண்வெளித் தொழில்நுட்பம் - தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா திட்டமிடுகிறது.

இதனை in.usembassy.gov/chennai என்ற இணையத்தில் பார்க்க முடியும்.

அதேநேரம், சென்னையை, ரசியாவின் தூரக் கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக் பகுதியை இணைக்கும் நேரடி கடல் வழிப் பாதை (Eastern Maritime Corridor) பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரசியத் தூதரகத்தின் சென்னை இணையத் தளத்தில் (chennai.mid.ru) இது பற்றி விரிவாக உள்ளது.

ஆகவே, ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது என்ற விடயத்தில் வாதப்பிரதிவாதங்களை நடத்திக் காலத்தைக் கடத்த வேண்டாம். 

மாறாக, புவிசார் அரசியல் - பொருளாதார சூழலுக்கு ஏற்ப பலமான அரசியல் தளம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றிச் சிந்தியுங்கள் - வியூகம் ஒன்றை வகுக்க நேரத்தை செலவிடுங்கள். 

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்-