அமெரிக்க சீனா வர்த்தக பேச்ச

அமெரிக்க சீனா வர்த்தக பேச்ச

அமெரிக்க சீனா வர்த்தக  பேச்ச

பரிஸ் நகரில் இன்று (15)நடந்த உரையாடல்

ட்ரம்ப் இரண்டு வாரங்களில் சீனா செல்வார்!

அன்ரோபிக் AI நிறுவனத்துடன் ட்ரம்ப் மோதல்!

ஈரான் மீதான போர் என்பது, சீனாவின் உலகளாவிய பொருளாதார இராணுவ வளர்ச்சிக்கு எதிரான அமெரிக்க வன்மம் என்பதே உண்மை. ஆனாலும் பொருளாதார படிநிலையில் அமெரிக்கா சீனாவிலும், சீனா அமெரிக்காவிலும் தங்கியிருக்கிற ஒரு முறைமையும் உண்டு.

ஆனாலும் பொருளாதார துண்டிப்புகளும் (economic decoupling) இந்த இரு நாடுகளிடையேயும் உண்டு. 

இருந்தாலும், உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார சக்திகள், தங்கள் பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்காக இன்று(15) ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சந்தித்துப் பேசியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக, சீன அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua News Agency) பரிஸ் சந்திப்புக்குப் பின்னர் செய்தி வெளியிட்டுள்ளது. பீஜிங்கில் இச் சந்திப்பு இடம்பெறும் எனவும் கூறுகிறது. 

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) சீன துணை பிரதமர் ஹீ லைஃபெங் (He Lifeng) ஆகியோர் தலைமையிலான குழுக்கள் சந்தித்துப் பேசியதாக சீன செய்தி நிறுவனத்தை மேற்கோள் காண்பித்து, அமெரிக்க செய்தி நிறுவனமான ஏபிசி நியூஸ் (apnews) செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க, பிரித்தானிய நாடுகளை மையமாக் கொண்ட சர்வதேச செய்தி ஊடகங்கள் சில, சீன செய்தி நிறுவனத்தை ஆதாரமாகக் கொண்டே இச்செய்திக்கு முக்கியம் கொடுத்துள்ளதை அவதனிக்க முடிகிறது. 

சீனா- அமெரிக்க நாடுகளுக்கு இந்த ஆண்டு "பெரிய ஆண்டாக" இருக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, (Wang Yi) கடந்த வாரம் கூறியதாக ஏபிசி நியூஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆனால் ட்ரம்பின் சீனா பயணம் பற்றி வாங் யீ உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் உறவுகள். "உயர்மட்ட பரிமாற்றத்தின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே மேசையில் உள்ளது" என்று வாங் யீ, சுட்டிக்காட்டினார். 

அதேவேளை, "பரஸ்பர அக்கறை கொண்ட வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள்" குறித்து சீன - அமெரிக்க அரசுகள் விவாதிக்க உள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

முதல் பதவிக் காலமான 2017 ஆம் ஆண்டு, தென் கொரிய நகரமான பூசானில் சந்தித்து சீன ஜனாதிபதியுடன் ட்ரம்ப் உரையாடியிருந்தார். வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கும் ஒப்புக் கொண்டிருந்தனர். 

ஈரான் போரினால் எண்ணெய் விலைகள் மற்றும் விநியோகங்கள் குறித்து உலக அளவில் பிரச்சினைகள் எழும்போது சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா மற்றும் பிற நாடுகள் ஒன்றிணைந்து ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக வைத்திருக்க போர்க்கப்பல்களை அனுப்பும் என்று ட்ரம்ப் சென்ற சனிக்கிழமை நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

அதேவேளை, AI வழங்குநரான அன்ரோபிக் ( Anthropic) நிறுவனம், தனது செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளை ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் இராணுவ மூலோபாய கண்காணிப்புக்கு எல்லை மீறி (red lines) பயன்படுத்துவதாக, அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் (U.S. Department of Defense -Pentagon) மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

ஈரான் போரில் AI பயன்பாடு குறித்து பென்டகனுடன் அன்ரோபிக் நிறுவனம் முரண்பட்டுள்ளது.  

இதனால் அன்ரோபிக் நிறுவனத்தை 'தீவிர இடதுசாரி' (radical left) என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப், ரசிய - சீன நிறுவனங்களுடன் இணைந்து அன்ரோபிக் நிறுவனம், செயற்கைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் உற்பத்திகளில் ஈடுட்டு வருகிறது என்ற தொனியில் (supply chain risk) என திட்டியதாக சாதம் ஹவுஸ் வெளியிட்ட செய்தி (chathamhouse) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் மற்றும் அமெரிக்க - சீன முரண்பாடுகள் என்பது, அவர்களுடைய புவிசார் அரசியல் - பொருளாதார நலன் நோக்கிலானவை என்பது பட்டவர்த்தனமாகிறது...

இதற்காக இலங்கை போன்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நாடுகளின் இளைஞர்கள் - பெண்கள் ஆளுக்கு ஆள் போட்டியிட்டு வாதிடுவது - ஆதரிப்பது - எதிர்ப்பது என்ற முறைமைகளை தவிர்த்து, தத்தமது நாடுகளை எப்படி முன்னேற்ற முடியும் என்று சிந்திப்பதே மேல்... 

ஏனெனில் பிரித்தானிய - அமெரிக்க சிந்தனை மைய சாதம் ஹவுஸ், அமெரிக்க - சீன - ரசிய நாடுகளின் AI தயாரிப்பு நிறுவனங்களின் நிபுணர்களை அழைத்து தொடர் உரையாடல் ஒன்றை நடத்தி வருகிறது. 

இந்த இடத்தில் வல்லரசு நாடுகளின் மூன்று வகையான உறவுகள் பற்றி அவதானிக்க வேண்டும்... 

ஒன்று - வல்லரசுகளும் அதன் அரசியல் - இராணுவ உத்திகள் - மூலோபாயங்கள் என்பது வேறு - 

இரண்டாவது - வல்லரசுகளுக்குரிய ஆயுத உற்பதி, AI உற்பத்திகள் என்பது மற்றொரு வகை. 

மூன்றாவது - வல்லரசுகளின் பொருளாதார மூலோபாயங்கள்- உறவுகள் என்பது இன்னொரு வகை. 

ஆனால் இப் போரால் பாதிக்பப்பட்டுக் கொண்டிருப்பது இலங்கை போன்ற வறிய நாடுகள் தான்.

அதே நேரம் அமெரிக்க - சீன, அமெரிக்க - ரசிய போட்டிக்குள் இந்தியா இல்லை என்பதும் இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரத்தில் கூட இந்தியா இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகின்றன.

இந்தியா, தமக்கு போட்டியே இல்லை. அமெரிக்கா மாத்திரமே தமக்குப் போட்டி என்று தான், சீன அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) அடிக்கடி கூறி விமர்சித்து வருகிறது...

ஆனால் ஒன்று, சீனாவுக்கு எதிரான இந்தோ - பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில், அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதன் காரண - காரியமாகவே அணிசேரா கொள்கை என்ற பெயரில் இந்தியா, சர்வதேச கொள்கையில் இரண்டு வகையான கருத்தை கொண்டிருக்கிறது. 

அதாவது அமெரிக்கா விரும்பாதா, ரசிய - இந்திய கூட்டு, சீன - இந்திய கூட்டு. 

இந்தியாவின் இக் கூட்டுத் தான் இலங்கைக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

ஆனால், ஈரான் போரின் பின்னர் இந்தியா, இந்த இரண்டு வகையான கூட்டு என்ற முறைமையை தொடர முடியுமா என்பதே இங்கு கேள்வி.  

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்