கோட்டாபய ராஜபக்சவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கோட்டாபய-ராஜபக்சவுக்கு-நோட்டீஸ் !

கோட்டாபய ராஜபக்சவுக்கு  நோட்டீஸ்  அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு!

2022 மே 09 ஆம் திகதி காலிமுகத் திடல்  “கோட்டாகோ கம” போராட்ட முகாமின் மீது கும்பல்களால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, நாடு முழுவதும் பரவிய கலவரங்களில் அப்போதைய ஆளும் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளும் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

நாடு முழுவதும் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்காக, சட்டவிரோதமாக இழப்பீடு பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து அந்த இழப்பீட்டுத் தொகையை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு பரிசீலனைக்கு வந்தபோது, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரர் தரப்பினருக்கு அறிவுறுத்தியது.

சொத்து சேதம் தொடர்பான இழப்பீட்டுத் தொகைகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட இழப்பீடு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை அரசாங்கத்தின் மூலம் வழங்க அப்போதைய அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவு சட்டவிரோதமானது மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று கூறி, ஒரு குழுவினர் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு முந்தைய சந்தர்ப்பங்களில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், இன்று நீதிமன்றம் மீண்டும் அந்த நடவடிக்கையை நிறைவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.