பாகிஸ்தான் குவெட்டாவில் ரயில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி!
பாகிஸ்தான் குவெட்டாவில் ரயில் குண்டுவெடிப்பு:
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டா பகுதியில் இன்று (24) இடம்பெற்ற பயங்கர ரயில் குண்டுவெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் இடம்பெற்ற ரயிலில் 5 பெட்டிகள் இருந்ததாகவும், அதில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலர் பயணம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பின் தாக்கத்தால் ரயிலின் 3 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவற்றில் 2 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற பிரிவினைவாத ஆயுதக் குழு, தங்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. குண்டுவெடிப்பிற்கு பின்னர், ஆயுததாரிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனால் பலர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்குப் பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஷெஹ்பாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பலுசிஸ்தான் மாகாணம், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் முக்கிய பிராந்தியமாகும். பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 44 சதவீதத்தை கொண்டிருந்தாலும், மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள மாகாணமாக இது கருதப்படுகிறது
இப்பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வரும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், பலுசிஸ்தான் தனிநாடு ஆக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இயற்கை வளங்களில் செழிப்பான இந்த மாகாணத்தில், அரசின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Editor