அமெரிக்க - ஈரான் பேச்சு சாத்தியமில்லை!!!
அமெரிக்க - ஈரான் பேச்சு
*கப்பல் கைப்பற்றப்பட்டதால், ஈரான் பங்குகொள்ள மறுப்பு...
*இயேசுவின் சிலை உடைக்கப்பட்டதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டது...
*பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு
பேச்சுவார்த்தையில் பங்குபற்ற அமெரிக்க துணை ஜனாதிபதி, ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான அமெரிக்கக் குழு இஸ்லாமாபாத் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
'டூஸ்கா' (Touska) என்ற சரக்குக் கப்பலை, அரேபிய கடலில், அமெரிக்க ஏவுகணை கப்பல் தாக்கி கைப்பற்றியதால், இன்று 20 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சில் பங்குகொள்ள முடியாதென ஈரான் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இதனை ஈரான் பார்ஸ் செய்தி நிறுவனம் (Pars News Agency) உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், பேச்சு நடைபெறவுள்ள பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் இருக்கும் செரீனா ஹோட்டல் (Serena Hotel) பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிகப் போர் நிறுத்தம், நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ள நிலையில், உடன்பாடு ஏற்படவில்லையானால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் ஏலவே எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் உள்ள பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று அல் ஜசீரா (aljazeera) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹூதி கிளர்ச்சிக் குழு அறிவித்துள்ளது.
அதேவேளை, தெற்கு லெபனானில் உள்ள டெபல் (Debl) என்ற கிறிஸ்தவக் கிராமத்தில் இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஒருவர், இயேசுநாதரின் உருவச் சிலையை அடித்து நொருக்கியுள்ளார் என என்பிசி (nbcnews) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுத்தியலைப் (sledgehammer) பயன்படுத்தி, இயேசுவின் சிலையின் தலைப் பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இக் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
உருவச் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் உண்மை என்று இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் உண்மையான படங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் விழுமியங்களுக்கு எதிரானது என்றும், சம்பந்தப்பட்ட சிப்பாய் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன், இதனை உறுதிப்படுத்தியதாக என்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவத்தின் வடக்கு மண்டலக் கட்டளை (Northern Command) குற்றவியல் விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக என்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடைக்கப்பட்ட இயேசுவின் சிலையைச் சீரமைக்க உள்ளூர் கிறிஸ்தவச் சமூகத்திற்கு இஸ்ரேல் இராணுவம் உதவி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஹாரமூஸ் நீரிணை பகுதியில் இன்று பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 5% வரை உயர்ந்துள்ளதாக என்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அ.நிக்ஸன்- பத்திரிகையயளர்
Editor