தமிழ்நாட்டுத் தேர்தல் சீனாவுக்கு எதிரான மூலோபாயமும்!!!
தமிழ்நாட்டுத் தேர்தல் சீனாவுக்கு எதிரான மூலோபாயமும்!
* சீமான் - விஜய் ஆகியோரின் எழுச்சியால், திராவிட அரசியல் அழிந்து போவதை, மேற்கு - ஐரோப்பிய ஊடகங்கள் விரும்பவில்லை...
* தமிழ்நாட்டை ஒரு "புவிசார் அரசியல் போட்டி மையமாக நோக்கும் சீனா...
* ஈழத்தமிழர் ஆதரவை தவிர்த்து, தமிழ்நாட்டை பொருளாதார முதலீட்டில் ஊக்குவிக்கும் நியூயோர்க் ரைம்ஸ்...
இந்தியாவின் தமிழ் நாட்டு சட்ட சபைத் தேர்தலை, போட்டியிடும் திராவிட கட்சிகளுடனும் சீமான்- நடிகர் விஜய் ஆகியோருடனும் மாத்திரம் ஒப்பிட்டு, பிரதான ஈழத் தமிழ் நாளிதழ்கள், தமிழ் செய்தி இணைய ஊடகங்களும் செய்திகள், கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களிலும் சீமான் - விஜய் மற்றும் திராவிடக் கட்சிகளின் போட்டிகள் பற்றியே அதிகமாகக் காண முடிகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் அல்ல, அது இந்தியப் பெருங்கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதற்கான ஒரு முக்கிய குறிகாட்டியாக அமெரிக்க நியூயோர்க் ரைம்ஸ், சீன குளோபல் ரைம்ஸ் போன்ற செய்தி ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன.
தமிழ்நாடு ஈழத்தமிழர் விவகாரத்தில் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கும் போது, இந்திய மத்திய அரசு அதனை ஆதரித்தால், இலங்கை முழுமையாகச் சீனாவின் பக்கம் சென்றுவிடும்.
எனவே, தமிழ்நாட்டின் குரலை ஓரளவுக்கு மேல் எழும்ப விடாமல் கட்டுப்படுத்துவது, இந்திய புவிசார் அரசியலுக்குத் (Geopolitics) தேவையாக இருப்பதாக புதுடில்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்கள் கருதுகின்றன.
தமிழ்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, இந்தியாவின் பொருளாதார வலிமைக்கும், சீனாவிற்கு எதிரான ஆசியாவின் மூலோபாய வெற்றிக்கும், மிக அவசியம் என்ற நோக்கில் பிரித்தானியாவின் பிரதான ஊடகமான தி எக்கனாமிக்ஸ் (The Economist) விமர்சித்துள்ளது.
ஐஎஸ்ஏஎஸ் (isas.nus.edu) என்ற ஆய்வுத் தளத்தில் வெளியான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கத்தின் ஆய்வு அறிக்கை தமிழ்நாட்டுத் தேர்தல் திராவிட கட்சிகளுக்கான முக்கியமான திருப்பு முனைச் "சோதனை" என்று வர்ணித்துள்ளது.
சீமான், விஜய் ஆகியோரின் எழுச்சி மாநிலத்தின் நீண்டகால திராவிட ஆட்சி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருமா என்ற கேள்வியையும் அது முன்வைத்துள்ளது.
இந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ் நாட்டின் தேர்தலை, இந்தியாவின் உள்நாட்டு அரசியல் மாற்றமாக மட்டும் பார்க்காமல், சீன - இந்திய போட்டி மற்றும் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைத்து நோக்க வேண்டும் என்ற தொனியில் நியூயோர்க் ரைம்ஸ் (New York Times) விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டை, "இந்தியாவின் உற்பத்திப் போர்" (India’s Manufacturing War) எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவிலிருந்து வெளியேறும் அப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு, தமிழ்நாடு ஒரு மிகச்சிறந்த புகலிடமாக உள்ளது எனவும், தமிழ்நாட்டில் அமையவுள்ள புதிய அரசாங்கம், இந்தத் தொழில் கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவிற்கு மிக முக்கியமானது என்றும் நியூயோர்க் ரைம்ஸ் ஆராய்கிறது.
சீனாவின் ஐபோன் வணிகத்தை அதிகம் தமது உற்பத்தியாக மாற்ற ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவின் தமிழ் நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை கொண்டு வருகின்றன.
அதற்குரிய செமிகண்டக்டர் (Semiconductor) தொழிற்சாலைகள் அமையவுள்ளன.
ஆகவே, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பிரதான முதலீடுகளுக்கான பாதுகாப்பும் தொடர்ந்து கிடைக்குமா என்பதை உலகம் உன்னிப்பாக நோக்குகிறது.
இங்கே மிக முக்கியமான ஒன்றை ஈழத் தமிழர்கள் அவதானிக்க வேண்டும்,
2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இல்லாமல் ஒழிக்கப்பட்டமைக்கு அமெரிக்க, சீன, இந்திய அரசுகள் உள்ளிட்ட இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் அவசியத்தை உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், இலங்கைக்கு அப்போது ஒத்துழைத்தன என்ற உண்மை பகிரங்கமானது.
ஆனால், தமிழ்நாட்டை பிரதான மூலோபாய தளமாக அமெரிக்கா கருதும் அளவுக்கு இந்திய மத்திய அரசு கருதவில்லை. மோடி தலைமையிலான அரசாங்கம் மாத்திரம் அல்ல, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள், ஏனைய மாநிலங்கள் போன்று தமிழ்நாட்டு மாநிலத்தை கவனிப்பதில்லை.
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் (Policy Makers) அதிகாரவர்க்கம் (Bureaucracy) தமிழ்நாட்டின் மீது முழுமையான கவனத்தைச் செலுத்தத் தயங்குவதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் மிக நுட்பமானவை.
குறிப்பாக, தேர்தல் காலங்களில் ஈழத்தமிழர்கள் தொடர்பாக பேசுவது, சட்டசபையில் ஈழத்தமிழர்கள் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்ற செயற்பாடுகளில், புதுடில்லியில் உள்ள எந்த ஒரு தேசிய கட்சிகளுக்கும் உடன்பாடு இல்லை.
ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்திய மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப செயற்பட வேண்டிய கட்டாய அரசியல் உண்டு. அவ்வாறு ஆதரவாக செயற்பட்டாலும், மத்திய அரசு தமிழ்நாட்டை ஓரக் கண்ணால் பார்க்கும் ஆபத்தான நிலைதான் தொடர்கிறது.
தமிழ்நாடு, பொருளாதாரம் - கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ள போதும், மத்திய அரசு, தமிழ் நாட்டுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவதில்லை.
தற்போது, மத்திய அரசுக்கு, தமிழ்நாடு வழங்கும் வரி வருவாயுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்கும் நிதி மிகக் குறைவு என்ற ஆதங்கம் நீண்டகாலமாக உள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது தமிழகப் புறக்கணிப்பாகப் பார்க்கப்படுகிறது.
சிலிக்கானை (Silicon) பயன்படுத்தி மின் கடத்தி திறன் கொண்ட நுட்பமான மென் பொருட்களை உற்பத்தி செய்யும் செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் மற்றும் ஏர்பஸ் தொழிற்சாலை போன்ற பெரிய திட்டங்கள் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் நிறுவும் திட்டம் இருந்தது.
ஆனால், அந்த தொழிச்சாலைகள் தற்போது, குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு மாற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஈழத்தமிழர் விவகாரம், இந்திய மாநில அரசுகளில் அதிகாரப் பங்கீடு பற்றிய ஆர்வத்தை தூண்டிவிடும் என்ற அச்சம் காரணமாக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்போதும் ஒருவித எச்சரிக்கையுடன் நோக்குகின்றனர்.
தமிழ்நாடு பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அதிக வலிமை பெறுவது, எதிர்காலத்தில் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகிச் செல்லும் "பிரிவினைவாத" உணர்வைத் தூண்டி விடும் என்ற ஒரு வரலாற்று ரீதியான அச்சம் புதுடில்லி அதிகார வர்க்கத்திடம் உள்ளது.
அதாவது, ஈழத்தமிழர்களை மையப்படுத்திய துணை-தேசியவாதம் (Sub-nationalism) தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது.
"தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது" என்ற கருத்தை, இந்தியா ரூடே (India Today) பிபிசி (BBC) தி நியூஸ் மினிற் (The News Minute) என்ற ஊடகங்களில், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பல்வேறு நேர்காணல்களில் விளக்கியுள்ளனர்.
மாநில வரிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை தரவுகளுடன் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இக்கருத்துக்களை மையமாகக் கொண்டு, மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையே நிலவும் நிதி மற்றும் கலாச்சார மோதல்களை நியூயோர்க் ரைம்ஸ் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது.
அதாவது தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக ஊக்கப்படுத்தும் உறவை இந்திய மத்திய அரசு பேணினால் மாத்திரமே, இந்தோ - பசுபிக் விவகாரத்தில் சீனாவை ஒதுக்க முடியும் என்ற அளவுகோல் ஒன்றை நியூயோர்க் ரைம்ஸ் கொண்டிருக்கிறது போலும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவலைத் தடுக்க தமிழ்நாடு ஒரு மூலோபாயப் புள்ளியாக (Strategic Point) இருப்பதாக நியூயோர் ரைமஸ் குறிப்பிடுவது இப் பின்னணியில் தான் என்பது பகிரங்கமான உண்மை.
அத்துடன், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் இந்திய "கூட்டாட்சி தத்துவத்தின்" (Federalism) வலிமையை உலகுக்குக் காட்டும் ஓர் அடையாளமாக இருக்கும் என்று நியூயோர்க் ரைம்ஸ் பெருமிதம் கொள்கிறது.
ஆனால், இந்தியக் கூட்டாட்சி அல்லது இந்திய சமஸ்டி ஆட்சி முறைமை என்பது சமஸ்டிக்குள் ஒற்றையாட்சி என்று அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஈழத்தமிழ் தரப்பு இந்திய சமஸ்டி முறையை விரும்புவதுமில்லை.
இருந்தாலும், நியூயோர்க் ரைம்ஸ் போன்ற அமெரிக்க ஊடகங்கள், தற்போது நடைமுறையில் உள்ள இந்திய சமஸ்டி முறைமையை ஆதரிக்க காரணம், சீனாவை மையப்படுத்திய இந்தோ - பசுபிக் விகாரம் என்பது கண்கூடு.
ஆகவே, ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒரு 'உணர்ச்சிபூர்வமான' தடையாக இருக்கிறது.
பொருளாதார ரீதியாக தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து விடக்கூடாது என்ற அதிகாரவர்க்கத்தின் 'சமநிலைப்படுத்தும் தந்திரமே' (Balance of Power) இதற்குப் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம் என்பதை நியூயோர்க் ரைம்ஸ் போன்ற ஊடகங்கள் அறிய விரும்பவில்லை.
அல்லது அவ்வாறான சமஸ்டி முறைமை பிராந்திய பாதுகாப்புக்கு நல்லது என அமெரிக்கா கருதக் கூடும்.
இப் பின்புலத்தில்தான், சீமான், விஜய் போன்றவர்கள், மத்திய அரசின் நிலைப்பாட்டை தொடர மறுத்தால் ஏற்படவுள்ள ஆபத்துக்களை நியூயார்க் ரைம்ஸ் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் கடற்கரையோரப் பகுதி பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் திட்டங்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு வலிமை சேர்க்கும் எனவும், விஜய், சீமான் ஆகியோரின் எழுச்சி, பழமையான திராவிட அரசியலில் ஏற்படும் ஒரு "தலைமுறை மாற்றம்" எனவும் சுட்டிக்காட்டி மறைமுக எச்சரிக்கை ஒன்றை நியூயார்க் ரைம்ஸ் எடுத்துக் காண்பிக்கிறது.
அதாவது, ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை தேர்தல் காலங்களில் திராவிடக் கட்சிகள் முதன்மையாக எடுத்தாலும், இந்திய மத்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்ற நம்பிக்கையை நியூயார்க் ரைம்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
விஜய் திரையுலகப் புகழைப் பயன்படுத்தி இளைஞர்களை ஈர்க்கிறார், சீமான், தமிழ் தேசியத்தை விதைக்கிறார்.
ஆகவே, இந்த இருவரும் இயங்கும் தன்மைகள், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டிற்கும், குறிப்பாக அயல் நாடான இலங்கையுடனான உறவிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஓர் ஆய்வு கண்ணோட்டத்தை நியூயோர்க் ரைம்ஸ் எச்சரிக்கையோடு முன்வைக்கிறது.
அதாவது, தமிழ்நாட்டின் பழமையான திராவிட அரசியல் அழிந்து விடக் கூடாது என்பதை நியூயோர்க் ரைம்ஸ் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடுத் தேர்தல் என்பது "சீனாவின் உற்பத்தி ஆதிக்கத்தை இந்தியா முறியடிக்குமா?" - "தெற்காசியாவின் கடல்வழி பாதுகாப்பை இந்தியா எப்படித் தக்க வைக்கும்?" என்பதற்கான ஒரு முக்கிய தேர்வாகும் என்றும் நியூயோர்க் ரைம்ஸ் வர்ணிப்பதன் ஊடாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தை புறக்கணிக்காமல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஒன்றையும், நியூயோர்க் ரைம்ஸ் இந்திய மத்திய அரசுக்கு வழங்குகிறது.
அதாவது, இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து, அமெரிக்கா செயற்படுவதால், உள்ளக மாநில போட்டி மற்றும் ஈழத்தமிழர் விவகாரம் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மாநிலத்தை புறக்கணிப்பது, அமெரிக்க - இந்திய புவிசார் அரசியல் நலனுக்கு ஆரோக்கியமானது அல்ல என்ற தொனி அந்த ஆய்வில் வெளிப்படுகிறது.
ஆனால், இந்திய மத்திய ஆட்சியாளர்கள், இந்திய ஆங்கில ஊடகங்கள், இந்தியா என்ற ஒரு நாட்டை "வட இந்தியக் கண்ணோட்டத்தில்" (Hindi Heartland lens) மாத்திரம் நோக்குவதால், தமிழ்நாட்டு கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் தமிழக சாதனைகள் ஆகியவற்றை தேசிய மட்டத்தில் முன்னிறுத்த தவறுகின்றனர் என்பதை நியூயோர்க் ரைம்ஸ் போன்ற ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை.
பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் நேரடியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலம் இல்லாததால், அவர்கள் அதிக இடங்களை வெல்லக் கூடிய ஏனைய மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்பது தான் வெளிப்படையான உண்மை.
இதன் காரணமாக, தமிழ் நாட்டு கடல் வழி பாதுகாப்பு, தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்ற விவகாரங்களில் இந்திய மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பதை நியூயோர்க் ரைம்ஸ் போன்ற மேற்கு ஊடகங்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றன.
வெறுமனே, தமிழ்நாட்டை இந்தியாவின் "பொருளாதாரக் கோட்டை" என்று வர்ணித்து, இந்திய மத்திய அரசை உசுப்பேத்தி இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் தமக்குரிய பாதுகாப்பு தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்ய அமெரிக்கா முற்படுகின்றது என்பதை நியூயோர்க் ரைம்ஸின இந்த ஆய்வு காண்பிக்கிறது.
அதேவேளை, குளோபல் ரைம்ஸ் (Global Times) போன்ற சீன ஊடகங்கள் தமிழ்நாட்டை ஒரு "புவிசார் அரசியல் போட்டி மையமாக" (Geopolitical Rivalry Hub) அவதானிக்கிறது.
தமிழ்நாட்டில், ஈழத்தமிழர் ஆதரவும், தமிழ் தேசிய உணர்வும் அதிகரிப்பது, இலங்கையில் இந்தியாவின் பிடியை வலுப்படுத்தும் என சீனா அஞ்சுகிறது.
2026 இல் அமையும் தமிழ் நாட்டு அரசாங்கம், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தால், அது இலங்கையில் அம்பாந்தோட்டை உள்ளிட்ட சீனத் திட்டங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என குளோபல் ரைம்ஸ் கவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஒரு "உற்பத்தி மையமாக" (Manufacturing Hub) உருவெடுத்து சீனாவுக்கு போட்டியாக மாறுவதை சீன ஊடகங்கள் கவலையுடன் நோக்குகின்றன.
குறிப்பாக, தூத்துக்குடி- கன்னியாகுமரி துறைமுகங்களின் வளர்ச்சி சீனாவின் கடல் வழிப் பாதையை கட்டுப்படுத்தும் என்று சீனா கருதுவதை சீன ஊடகங்கள் காண்பிக்கின்றன.
ஆகவே, அமெரிக்க - சீன அரசுகளும் அதன் செய்தி ஊடகங்களும், தமிழ்நாட்டுத் தேர்தலை, இந்தோ - பசுபிக் விவகாரத்தை மையப்படுத்தி, தமது புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் அவதானித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈழத் தமிழ்த் தரப்பு தமிழ்நாட்டுத் தேர்தலை ஒரு நகைச்சுவையாகவும், பயனற்றது என்ற நோக்கிலும் அவதானிப்பதை சமூக வலைத்தள பதிவுகள் காண்பிக்கின்றன.
பிரதான தமிழ் நாளிதழ்களில் கூட, தமிழ்நாட்டுத் தேர்தலை ஈழத் தமிழர்களுக்கான புவிசார் அரசியல் மூலோபாயம் என்ற கருத்தை முன்வைக்கவில்லை.
இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டை தண்டிக்கிறது என்ற கருத்துகளை தமிழ் ஊடகங்கள், அறிவுபூர்வமாக முன்னிலைப்படுத்த வேண்டும்.
தமிழரசு கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின். பொருத்தமான ஈழத்தமிழ் நிலைப்பாடுகளை, இந்திய மத்திய அரசின், இலங்கை பற்றிய கொள்கைக்கு ஏற்ப மாற்ற முனைகின்றன.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார - இராணுவ மூலோபாய நகர்வுகளை முறியடிக்க, அமெரிக்க - இந்திய அரசுகள் வகுக்கும் புவிசார் அரசியலுக்கு ஏற்ப, தமிழ்த் தேசியக்கட்சிகள் வளைந்து கொடுக்கின்றன.
இதன் காரண - காரியமாகவே நியூயோர்க் ரைம்ஸ் போன்ற ஊடகங்கள் தமிழ்நாட்டுக்கு இந்திய மத்திய அரசு இழைக்கும் அநீதிகள் பற்றி அறிந்து கொண்டாலும், இந்திய மத்திய அரசின் இலங்கை பற்றிய கொள்கைக்கு ஆதரவான ஆய்வுகளை முன்வைக்கின்றன.
ஆகவே, ஈழத்தமிழர்களின் ”அரசியல் விடுதலை” விவகாரம், பொருத்தமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் - புரிதல்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமல், அமெரிக்க- இந்திய அரசுகள் சொல்வதை மாத்திரம் செயற்படுத்தும் சக்தியாக இயங்குவதை தமிழ்த் தேசியக் கட்சிகள் முதலில் தவிர்க்க வேண்டும்.
அதேநேரம், தமிழ்நாட்டுத் தேர்தலை தமக்குரிய மூலோபாய நோக்கில் சீனாவும் நோக்குவதால், சீனாவுடனும் உறவை தமிழ்த்தரப்பு பேண வேண்டும்.
அமெரிக்கா, இந்தியா, சீனா என்ற மூன்று நாடுகளையும் முத்தரப்பு வியூகத்தில், சிங்கள தலைவர்கள் 1970 களில் இருந்து கையாண்டு வரும் உத்திகளை, தமிழ் தரப்பு 2009 இற்கு பின்னரான சூழலில், அறிவுபூர்வமாக கையாண்டிருக்கலாம்.
தற்போது கூட காலம் சென்றுவிடவில்லை.
ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பால். ”ஒரு புள்ளியில்” ”ஒருமித்த குரலில்” தமிழ்த்தேசிய இயங்கு நிலையை உயிர்ப்பிக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கம் இன்றைய அவசர அவசியத் தேவையாகும்.
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor