ஊடகங்களையும் குடிமக்களையும் மௌனமாக்க அரசு முயற்சி – SLWJA
ஊடக சுதந்திரம் ஆபத்தில் !
இலங்கையில் ஊடக சுதந்திரம், அரச அதிகாரிகளின் சுயாதீனம் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீது அதிகரித்து வரும் அரச ஒடுக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் (SLWJA) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ரங்க பண்டாரநாயக்க மற்றும் பொதுச் செயலாளர் மிதுன் ஜயவர்தன ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை ஒடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, சிறுவர் துஷ்பிரயோக வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், அந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட பிபிசி சிங்கள சேவை ஊடகவியலாளருக்கு எதிராக நாடாளுமன்ற சலுகை விவகாரத்தை முன்வைப்பதாக சமூக ஊடகங்கள் வழியாக எச்சரித்ததாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்தையும், மக்களின் தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் ஜனநாயக விரோத செயல்களாகும் என சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள் தங்களின் தவறுகளை மறைக்கவும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும் நாடாளுமன்ற சலுகைகள் சட்டத்தை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள சங்கம், அந்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, "விகல்ப" இணையத்தளத்தின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான சம்பத் சமரகோன் மீது பொலிஸார் மேற்கொண்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களையும் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக மவுண்ட் லவினியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட சம்பத் சமரகோன், பல மணிநேரங்கள் மனஅழுத்தம் ஏற்படுத்தும் வகையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த மே 9 ஆம் திகதி ரத்மலானையில் பேருந்துக்காக காத்திருந்தபோது, சாதாரண உடையில் வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவரை சோதனை செய்ததுடன், எந்தவித சட்ட அடிப்படையும் இன்றி அவரது வாயைத் திறக்குமாறு கட்டளையிட்டு அவமரியாதைக்குரிய உடல் பரிசோதனையையும் மேற்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை என சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சம்பவம் தொடர்பாக உடனடி மற்றும் சுயாதீன விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் ஒடுக்குமுறை சட்டங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் பயன்படுத்தி விமர்சனக் குரல்களை அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக சுதந்திரம் மற்றும் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து முன்னணியில் செயல்படுவதாகவும், ஜனநாயக உரிமைகளை காக்க அனைத்து குடிமக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.
Editor