ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் – உலகச் சாதனை படைத்த லாரா கார்டோசோ!

ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் – உலகச் சாதனை

ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் – உலகச் சாதனை படைத்த லாரா கார்டோசோ!
ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் – உலகச் சாதனை படைத்த லாரா கார்டோசோ!

2025 ஆம் ஆண்டு பூட்டான் அணியின் சோனம் யேஷே ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது சர்வதேச T20 கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது பிரேசில் மகளிர் அணியின் இளம் நட்சத்திரம் லாரா கார்டோசோ முறியடித்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

பிரேசில் மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 21 வயதான லாரா கார்டோசோ, சர்வதேச இருபதுக்கு இருபது (T20) போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக உலகச் சாதனையை பதிவு செய்துள்ளார்.

இந்த அபார சாதனை லெசோதோ அணிக்கு எதிரான போட்டியில் நிகழ்ந்தது. அந்தப் போட்டியில் லாரா கார்டோசோ வெறும் 3 ஓவர்களை மட்டுமே பந்துவீசி, 2 மெய்டன் ஓவர்களுடன் 4 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது T20 வரலாற்றிலேயே சிறந்த பந்துவீச்சு செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

போட்டியின் போது, தனது முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்த லாரா, இரண்டாவது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை சிதறடித்தார். தொடர்ந்து மூன்றாவது ஓவரிலும் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சாதனையை நிறைவு செய்தார்.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய பிரேசில் அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி 203 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. இதனைத் துரத்திய லெசோதோ அணி, லாரா கார்டோசோவின் அதிரடியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6.2 ஓவர்களில் வெறும் 13 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் பிரேசில் அணி 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றி, கால்பந்தில் உலக அரங்கில் ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ள பிரேசில், தற்போது கிரிக்கெட்டிலும் புதிய சாதனைகள் மூலம் முன்னேறி வருவதை காட்டுகிறது. மேலும், இந்த சாதனை பிரேசில் மகளிர் கிரிக்கெட்டிற்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.