அமெரிக்காவில் இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: புதிய தகவல்கள் வெளியீடு – டிரம்ப் விளக்கம்
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: புதிய தகவல்கள்
அமெரிக்காவில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு இரவு விருந்து நிகழ்ச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டிருந்த நிலையில், ஹோட்டல் வளாகத்திற்கு அருகில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பட்டு, டிரம்ப் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர் கருத்து தெரிவித்த டிரம்ப், சம்பவம் அரங்கத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் நடந்தது. ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தாலும், பாதுகாப்பு கவசம் காரணமாக உயிர் தப்பினார்” என கூறினார். மேலும், “தாக்குதலுக்குப் பின்னால் ஈரான் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. இது தனிநபர் செயல் இருக்கலாம்” என்றும் தெரிவித்தார்.
புதிய விசாரணை தகவல்கள்
கைது செய்யப்பட்ட நபர் கோல் டோமஸ் ஆலன் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் தாக்குதலுக்கு முன் சமூக வலைத்தளங்களில் சந்தேகத்துக்குரிய பதிவுகள் செய்திருந்தாரா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மாற்றி அமைக்கப்பட்ட துப்பாக்கி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஹோட்டலில் முன்கூட்டியே தங்கி இருந்ததால், பாதுகாப்பு சோதனைகளை தவிர்த்து உள்ளே நுழைய முடிந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் (CCTV )காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
அவர் தனிநபராக செயல்பட்டாரா அல்லது பின்னணியில் தீவிரவாத/அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் உள்ளனவா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
பாதுகாப்பு பலப்படுத்தல்
இந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்கா முழுவதும் முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் ஆயுத சோதனைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய தாக்குதல் முயற்சிகள்
டொனால்ட் டிரம்ப் மீது இதற்கு முன்பும் பல தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன:
2024 ஜூலை –பட்ட்லர், பென்சில் வேனியா (Butler, Pennsylvania)நகரில் தேர்தல் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு
2024 செப்டம்பர் – மேற்கு பாம் பீச், புளோரிடா (West Palm Beach, Florida) பகுதியில் ஆயுத நபர் காத்திருந்த சம்பவம்
மாரா-ஆ-லாகோ (Mar-a-Lago) வளாகத்திலும் ஆயுத நுழைவு முயற்சி
சர்வதேச எதிர்வினை
இந்த சம்பவத்திற்குப் பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என்று மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலை
சந்தேக நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் மேலதிக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்தடுத்த விசாரணைகள் மூலம் மேலும் பல முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Editor