ஏப்ரல் 3-ல் ரிலீஸ்: 1000 கலைஞர்களுடன் பிரம்மாண்ட கிளைமாக்ஸில் மிரட்டிய 'லீடர்'!
ஏப்ரல் 3-ல் ரிலீஸ் லீடர்'!
லெஜண்ட் சரவணன் தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் மற்றும் விடாமுயற்சியால் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் , தற்போது தனது இரண்டாவது படமான 'லீடர்' மூலம் மீண்டும் திரையில் அதிரடி காட்டத் தயாராகிவிட்டார். வரும் ஏப்ரல் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் கோட், சூட் அணிந்து மாஸாகத் தோன்றிய லெஜண்ட் சரவணன், படத்தின் கதையையே ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்."ஒரு அப்பாவியான தந்தை மற்றும் மகள் - இவர்களின் அமைதியான வாழ்க்கையில் ஒரு கேங்ஸ்டர் நுழைகிறான். அதன் பிறகு நடக்கும் திருப்பங்களே படத்தின் கரு. இதனை இயக்குநர் துரை செந்தில்குமார் மிக நுணுக்கமாகவும், இளைய தலைமுறையினர் ரசிக்கும்படியும் இயக்கியுள்ளார்," எனப் புகழ்ந்து தள்ளினார்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.100 வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்கள் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இணையாக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த சண்டைக் காட்சியின் போது லெஜண்ட் சரவணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், "நமக்காக இத்தனை பேர் காத்திருக்கும் போது ஓய்வெடுக்கக் கூடாது" என்ற வைராக்கியத்துடன் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, கேமரா முன் 'தீயாக' நடித்து முடித்திருக்கிறார். இவரது இந்த அர்ப்பணிப்பை படக்குழுவினர் வியந்து பாராட்டினர்.
படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் படத்தை முதலில் பார்த்துவிட்டு இயக்குநரை அரை மணி நேரம் பாராட்டியுள்ளார். அதைவிட முக்கியமாக, திரையுலகின் 'நடிப்பு ராட்சசன்' தனுஷ் மற்றும் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் படத்தைப் பார்த்துவிட்டு "பிரமாதம்" என பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் அறந்தாங்கி நிஷா லெஜண்டை திட்டும் ஒரு காட்சி உண்டு. நிஷா அந்தப் பாத்திரத்தில் ஒன்றிப்போய் லெஜண்டை பயங்கரமாக வசைபாடியுள்ளார். எதிர்பாராத இந்தத் திட்டால் லெஜண்ட் ஷாக்கானாலும், பிறகு அது காட்சியின் தேவைக்காக என்று புரிந்து கொண்டு சிரித்துவிட்டாராம்.
"கமலின் விக்ரம், ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ போன்ற மெகா ஹிட் படங்களின் வரிசையில் 'லீடர்' படமும் இடம் பெறும்" என மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறினார் லெஜண்ட். கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை. எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாகவே நடக்கும். நாம் அவர்களை நம்பணும். நீங்க என்னை நம்புங்க... உங்கள் நம்பிக்கை வீண் போகாது!"
2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக லீடர் அமையும் என்று லெஜண்ட் சரவணன் கொடுத்திருக்கும் 100% கேரண்டி, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Editor