தந்தை செல்வா காலத்தில் இருந்து பாடம் கற்க மறுக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள்...
தந்தை செல்வா காலம் இருந்து பாடம் கற்க மறுக்கும் சிங்கள தலைவர்கள்
* ஒற்றையாட்சி அரசியல் யாப்பு - விமர்சனங்களும் யதார்த்தமும்!
* 2009 மே முதல் இன்று வரையான கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளும் தற்போதைய கைதும்..
* யாப்பு உருவாக்க முறைமை ஜனநாயக விரோதம் - கலாநிதி அஸங்க வெலிகல...
தந்தை செல்வா உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் 1960 - 1970களில் முன்னெடுத்த சத்தியாக்கிரகம் மற்றும் சட்ட மறுப்புப் போராட்டங்கள், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நிராகரித்தே நடத்தப்பட்டன.
ஒரு இனம் தனது சுயநிர்ணய உரிமை நியாயத்திற்காக போராடும் போது, தங்களை ஒடுக்கும் அரசு ஒன்றின் சட்டங்களை, அவர்கள் தார்மீக ரீதியாக நிராகரிப்பது உலகளாவிய விடுதலைப் போராட்டங்களின் பொதுப் பண்பு...
அந்த அந்த அடிப்படையில் தான், 2009 இற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடி வருகின்றனர்.
ஆனால், ”பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் 6 ஆம் திருத்தச் சட்டத்துக்கும் நீ கட்டுப்பட்டே ஆக வேண்டும்” என்ற தொனியில், இலங்கை அரச கட்டமைப்பு முறைமை அவ்வப்போது, அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவுறுத்தல் விடுக்கிறது.
அதேநேரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படும் இளைஞர் - பெண்களைக் காப்பாற்ற தமிழ் சட்டத்தரணிகள் அதே நீதிமன்றத்திற்குச் சென்று வாதிட வேண்டிய தேவை உள்ளது.
அது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு இளைஞனுக்கு வழங்கப்படும் தற்காப்பு - மனித உரிமைப் பணியாகும்.
அத்துடன், நீதிமன்றங்களை ஒரு சட்டப் போராட்டக் களமாகப் பயன்படுத்தி, அரசின் சட்டங்கள் எவ்வளவு ஜனநாயக விரோதமானவை என்பதை சர்வதேச அரங்கிலும், மக்களுக்கும் அம்பலப்படுத்த நீதிமன்ற வாதங்கள் உதவுகின்றன.
ஆனால், ஒடுக்குமுறைச் சட்டங்களுக்குப் பயந்து ஒரு இனம் தனது அரசியல் உரிமை நியாயங்களைக் கைவிட்டு முற்றிலும் முடங்கிப் போக வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தாலும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் நிதானமும் அவசியமானது.
தற்காப்பு அல்லது முன்னெச்சரிக்கை இல்லாத அசட்டுத் துணிவு பலனைத் தராது.
ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றங்கள், நடைமுறையில் 20 திருத்தங்களுடன் உள்ள 1978 ஆம் ஆண்டு இரண்டாவது யாப்புச் சட்டங்களுக்கு ஏற்பவே வகுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, தீவிரமான சட்ட மறுப்பு போராட்டங்களின் போது, நீதிமன்றங்கள் அச் சட்டத்தின் படியே தீர்ப்பு வழங்கும்.
மாறாக, அரசியல் நியாயங்களின் பிரகாரம், தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்க முடியாது. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்குப் பல தீர்ப்புகளை உதாரணம் காண்பிக்க முடியும்.
சர்வதேச அரசியலமைப்புச் சட்ட அறிஞரான கலாநிதி அஸங்க வெலிகல (Dr. Asanga Welikala) போன்ற ஆய்வாளர்கள், இலங்கையின் 1972 - 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புகள் உருவாக்கப்பட்ட முறைமையே ஜனநாயக விரோதமானது என்று வாதிடுகின்றனர்.
அரச நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்பு முறைமைகளும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தங்களின் தவறான செயல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லாதவாறு (Not accountable) சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என, இலங்கை அரசியல் யாப்புச் சட்ட நிபுணர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு என்பது 'மக்களுக்கான ஜனநாயகம்' என்ற தத்துவத்தின் கீழ் கட்டப்படாமல், 'பெரும்பான்மை இனவாதத்தை சட்ட பூர்வமாக்கும்' மற்றும் 'அரசின் அடக்குமுறைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும்' ஒரு கருவியாகவே பேராசிரியர்கள் சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
அரசியல் யாப்புச் சட்டங்கள் முரணாக இருக்கும் பட்சத்தில், சிங்கள மொழியே இறுதியானது (Sinhala text prevails) என்ற விதி, தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நோக்குகிறது.
அந்த நோக்கு நிலையானது, அரசியல் யாப்பு ரீதியான இனப் பாகுபாடு என்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையாளரின் அறிக்கைகள் - தீர்மானங்கள் பலவற்றிலும், இலங்கை நீதித்துறை மற்றும் சட்டங்கள் மீதான நம்பிக்கையற்ற தன்மைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தந்தை செல்வா காலத்தில், அல்லது தமிழ்த் தேசியம் என்ற சிந்தனை உருவாவதற்கு முன்னரான 1920களில் ஆரம்பித்த சிங்கள - தமிழ் முரண்பாட்டுக் காலத்தில் இருந்து இன்று வரை, சிங்களத் தலைவர்கள் எவரும் பாடம் கற்றதாகத் தெரியவில்லையே?
அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்
Editor