மேற்கு - ஐரோப்பிய, இந்திய - சீன ஊடகங்களின் பார்வையில் தேரர்!!!  

ஊடகங்களின் பார்வையில் தேரர்!!!  

மேற்கு - ஐரோப்பிய, இந்திய - சீன ஊடகங்களின் பார்வையில் தேரர்!!!  
மேற்கு - ஐரோப்பிய, இந்திய - சீன ஊடகங்களின் பார்வையில் தேரர்!!!  
மேற்கு - ஐரோப்பிய, இந்திய - சீன ஊடகங்களின் பார்வையில் தேரர்!!!  

* மோடிக்கு தேரர் ஆசி, புதுடில்லி ஊடகம் சாடல்!

* மிகப் பொிய குற்றச் செயல் என்கிறது அமெரிக்க ஊடகம்...

* மூடி மறைக்காமல் பகிரங்கப்படுத்திய சீன ஊடகங்கள்...

--- --- ---. 

இலங்கைத்தீவின் பௌத்த மரபுரிமை பிரதேசமாகச் சித்தரிக்கப்பட்டு வரும் அநுராதபுரத்தின் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், 15 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான செய்திகளைக் கொழும்பிலிருந்து வெளிவரும் குறிப்பிட்ட சில பிரதான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் மூடிமறைத்தன.

ஆனால், இந்தத் தேரர் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டது வரையான செய்திகள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா - சீனா ஆகிய நாடுகளின் பிரதான ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன.

இந்திய ஆங்கில ஊடகங்கள் இச் சம்பவத்தை, இலங்கையின் பௌத்த மத வரலாற்றில் மிக உயர் நிலையில் உள்ள பௌத்த மதகுரு ஒருவர் செய்த காரியம் "மிகப்பெரிய கறை" என்று விமர்சிக்கின்றன. 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.  

இந்தியா டுடே (India Today), டெக்கான் ஹெரால்டு (Deccan Herald), தி டெய்லி பயனியர் (The Daily Pioneer) போன்ற பிரதான இந்திய ஊடகங்கள் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

"புத்தபெருமான் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையிலிருந்து வளர்ந்த, 2,500 ஆண்டுகள் பழமையான புனித போதி மரத்தின் பிரதான பாதுகாவலரான 72 வயது பௌத்த துறவி பாலியல் குற்றச்சாட்டில் கைது" எனக் குறிப்பிட்டு ஆன்மீக முக்கியத்துவத்தின் சீரழிவாக இந்தியா டுடே (India Today) செய்தி விமர்சனம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்தியப் பிரதான நாளிதழ்கள் நேரடியாகப் பிரதமர் மோடியின் பெயரையோ அல்லது அவர் காலில் விழுந்ததையோ நினைவுபடுத்தி, தற்போதைய பாலியல் குற்றச்சாட்டுச் செய்திகளில் குறிப்பிடவில்லை. 

மாறாக, கடந்த ஆண்டு மோடிக்கு ஆசி வழங்கிய "மிகவும் சக்திவாய்ந்த பௌத்த குரு அவமானப்பட்டார்" என்ற தொனியிலேயே செய்திகளை வெளியிட்டிருந்தன.

அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் (CBS News) இலங்கையில் பௌத்த மதகுருமார்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் விளைவுகளைச் சுட்டிக்காட்டி, உயர் பொறுப்பில் உள்ள பௌத்த குரு ஒருவரின் பாரிய குற்றச் செயல் (Highest-profile case) என்று விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் பிரதான நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டதை விமர்சித்துள்ளது. பௌத்த மதத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இலங்கையில் எழுந்துள்ள சமூக விவாதங்களையும், நீதிமன்றத்திற்கு வெளியே சிவில் அமைப்புகள் நடத்திய அமைதிப் போராட்டங்களையும் அது விவரித்திருந்தது.

பிரான்ஸ் சர்வதேச செய்தி நிறுவனமான ஏஎஃப்பி (AFP) இச்செய்தியை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளது. 

அநுராதபுரத்தின் யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தளங்களின் பிரதான பாதுகாவலரான 72 வயது துறவி, தனியார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட முழுப் பின்னணியையும் இந்தச் செய்தி நிறுவனம் உலகிற்கு பகிரங்கப்படுத்தியது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய ஊடகமான பிபிசி (BBC News) ஆங்கிலச் செய்திச் சேவை, பல்லேகம ஹேமரதன தேரர் பௌத்த உலகில் மிக மதிக்கத்தக்க ஒரு பொறுப்பில் இருந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்த வரலாற்றுத் துஸ்பிரயோக வழக்கில் சிறுமியின் தாயாரும் பணத்திற்காக உடந்தையாக இருந்து கைது செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலையும் உலக நாடுகளுக்குப் பகிரங்கப்படுத்தியது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) மற்றும் சிறுவர் உரிமைகள் எவ்வாறு பேணப்படுகின்றன என்பதை மேற்கு ஐரோப்பியப் பிரதான ஊடகங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 

ஆகவே, ஒரு சாதாரணக் குடிமகனைப் போன்று இல்லாமல், இலங்கை அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் பௌத்த குரு ஒருவர் மீது சட்டம் எவ்வாறு பாய்கிறது என்பதைச் சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காகவே அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் இச்செய்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதைத் தேரர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து அவதானிக்க முடிகிறது.

அதேவேளை, சீன - இலங்கை பௌத்த பீடங்களின் நீண்டகால மத, கலாச்சார உறவுகள் உள்ளதால், இச்செய்தியில் சீன ஊடகங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த கட்டமைப்பையோ விமர்சிப்பதைத் தவிர்த்தன. 

மாறாக, தனிநபர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகவும், இலங்கைச் சட்டத்துறையின் நடவடிக்கையாகவுமே இதனைக் கருதின.

இந்தியப் பிரதமர் மோடி இத்தேரருடன் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி இந்திய ஊடகங்கள் ஓரளவு விவாதித்தமை போன்று, சீனா தனது செய்திகளில் அரசியல் உள்நோக்கங்களை உள்ளடக்கவில்லை. 

சௌத் சைனா மோர்னிங் போஸ்ட் (South China Morning Post - SCMP) என்ற ஆங்கில நாளிதழ், தேரர் மீதான கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.

,

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்