ஈரான் போர் - சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் நிலை என்ன?
ஈரான் போர் - சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்
* 2027 வரை நீடிக்கப்பட்ட ஐ.நா தீர்மானங்கள் மீண்டும் நிராகரிப்பு!
* குழம்பியுள்ள புவிசார் அரசியல் சூழலை நன்கு பயன்படுத்தும் அநுர...
* அரசாங்கம் தற்போது பொருளாதார இராஜதந்திரத்தை மையப்புள்ளியாக மாற்றியுள்ளது.
* தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலினால் உலகில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் - பொருளாதார சுமைகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) தீர்மானங்கள் - சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இந்த ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற ஐ நா மனித உரிமை சபையின் 61 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கை பிரதிநிதிகள், இலங்கையின் இறையாண்மைக்கு முரணான சர்வதேச அழுத்தங்களை நிராகரிப்பதாக துணிவோடு, மீண்டும் அறிவித்திருந்தனர்.
அதேநேரம், சென்ற மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஈரான் தொடர்பான ஐ நா தீர்மானம் சமச்சீரற்றதாக இருப்பதாகக் கூறி இலங்கை அதற்கு ஆதரவளிக்கவில்லை.
இப்பின்னணியில், பொறுப்புக் கூறல், போர்க் குற்ற விசாரணைகள் போன்றவற்றை உள்ளக பொறிமுறைகள் ஊடாக நடத்த முடியும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றொரு அறிக்கையை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சென்ற ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நீடிக்கக் கோரும் HRC/60/L.1/Rev.1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தின் முன்னேங்களை இந்த ஆண்டு ஐ.நா எதிர்பார்த்தது.. ஆனால் இந்த முன்னேற்றங்கள் பற்றி எதுவுமே கூறாமல், இந்த ஆண்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதுவும் மத்திய கிழக்குப் போர் சூழலில் அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா பிரதிநிதிகளுடன் சென்ற வாரம் சந்தித்து உரையாடியதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழல் உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.
இதன் காரணமாக ஈழத்தமிழர்களின் விவகாரம் சர்வதேச அரங்கில் முற்றாகக் கைவிடப்படும் என்ற ஒரு நம்பிக்கை அநுர அரசாங்கத்திடம் பலமாக உள்ளது என்பதையே விஜித ஹேரத்தின் சந்திப்பு எடுத்துக் காட்டுகிறது.
இருந்தாலும், சர்வதேச நீதிப் பொறிமுறை கட்டமைப்புகள் - சர்வதேச முன்னுரிமைகள் மாறியுள்ளதால், தமிழர்களுக்கான நீதி கோரும் நகர்வுகள் புதிய சவால்களை எதிர் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.
மத்திய கிழக்கு போரினால், வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்கள் பொருளாதார நெருக்கடிகள். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்குரிய பரிகாரங்களை செய்வது தொடர்பாக, அநுர அரசாங்கம் பெரிய அளவில் கவனம் செலுத்தியதாக கூற முடியாது.
ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்தை முடிந்த வரை, சர்வதேச அரங்கில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்பதற்குரிய ஏற்பாடுகளை மாத்திரம் மிக நுட்பமாக அநுர கையாளுகிறார்...
உக்ரெய்ன் மற்றும் ஈரான்-இஸ்ரேல் போர்கள் போன்ற பாரிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அரசுகளின் உடனடி முன்னுரிமைப் பட்டியலில் இருந்து பின் தள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.
ஆனாலும், இக்கட்டான உலக அரசியல் பின்னணியிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சென்ற ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதி குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழர் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற “இன அழிப்பு” குறித்த விவகாரங்களும் அவ்வப்போது சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ நா-வின் கண்காணிப்பு மற்றும் தீர்மானங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவை இலங்கையில் நிலவும் நீதி மறுப்பு மற்றும் சித்திரவதை குறித்துத் தொடர்ந்து அறிக்கையிட்டு வருகின்றன.
புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இலங்கைத் தீவின் அமைவிடம், குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேச அமைவிடம் காரணமாக, இந்து சமுத்திர பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த விரும்பும் இந்தியா - அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு இன்றும் ஒரு முக்கியமான கருவியாகவே உள்ளது.
அதற்காக தமிழர்கள் பெருமளவில் விரும்பாத 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுக்கிறது. அமெரிக்காவும் அதற்கு ஒத்தூதுகிறது.
ஆனால், இவை எதனையுமே கணக்கில் எடுக்காமல் அநுர அரசாங்கம், ஜ. நா மனித உரிமைத் தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
முன்னைய அரசாங்கங்களும் ஐ.நா தீா்மானத்தை அவ்வாறு நிராகரித்திருந்தது.
இருந்தாலும், ஈரான் மீதான போர் சூழலில், சர்வதேச நீதி கட்டமைப்புகளின் கவனம் திசை திரும்பி, ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் பின்னணியில், அநுர அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை மீண்டும் நிராகரித்து அறிக்கை அனுப்பியுள்ளமை ஆபத்தான ஒரு செய்தி.
இந்த ஆபத்தை தமிழ்த்தரப்பு இலகுவாகக் கடந்து செல்ல முடியாது...
ஏனெனில் சர்வதேச நீதிமன்றங்களுக்கு செல்வதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியை ஐ நா தற்போது செய்து வருகிறது.
குறிப்பாக தீர்மானம் 51/1-இன் கீழ் உருவாக்கப்பட்ட ஒஸ்லாப் (OSLAP), எனப்படும் 'இலங்கை அரசு பொறுப்புக்கூறல் திட்டம்' இலங்கையில் நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களை சர்வதேச தரத்தில் சேகரித்து வருகிறது.
சென்ற 2025 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத தீர்மானம் 60/1-இன் மூலம், இந்த ஆதாரங்கள் சேகரிக்கும் பணிக்கான காலக்கெடு, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது, 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர மிக முக்கிய அடிப்படையாக அமையும்.
ஆனால் ஒஸ்லாப் விசாரணை கூட மேலும் நீடிக்கப்படக் கூடாது எனவும், உடனடியாக 'ஒஸ்லாப் ' எனப்படும் விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அதன் அடிப்படையில் இன அழிப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தமிழரசுக் கட்சி கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆனால், ஈரான் போர்ச் சூழல் உருவாகி உலக அரசியல் குழம்பியுள்ள பின்னணியில் அநுர அரசாங்கம் சென்ற மார்ச் மாதம், ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நிராகரித்தமை குறித்து தமிழ்தரப்பு எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காமல் அமைதி காக்கிறது.
இதன் காரணமாக, தமிழர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன் தமது போராட்ட உத்திகளை வகுக்க வேண்டிய காலமிது என்பதை அநுர அரசாங்கத்தின் நிராகரிப்பு எடுத்துக் காண்பிக்கிறது.
டொனால்ட் ட்ரம்பின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நீதி கட்டமைப்புகள் குழப்பமடைந்துள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை.
அத்துடன் அந்த நீதிக் கட்டமைப்புகள் மீதான நம்பிக்கை அற்ற செயல் முறைமைகள் பற்றி ஏற்கனவே உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக வல்லரசுகளின் நலன் சார்ந்து ஐ.நா இயங்குகிறது என்ற குற்றச் சாட்டுகள் இல்லாமலில்லை.
இருந்தாலும், பாதிக்கப்பட்ட ஒரு அரசு அற்ற தேசிய இனமாக, சர்வதேச சட்டப் பொறிமுறைகளை பயன்படுத்தும் உத்திகளை தமிழ்த்தரப்பு சமகால புவிசார் சூழலுக்கு ஏற்ப கையாள வேண்டும்.
ஒரு சிறிய அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு, இலங்கை அரசாங்கத்தினால், அவ்வாறு செயற்பட முடிகிறது என்றால், ஏன் தமிழர்களினால் அது முடியாமல் உள்ளது என்ற கேள்வி நியாயமானது.
இலங்கை உள்ளக நீதி பொறிமுறைகளில் தமிழர்கள் நம்பிக்கை இழந்த நிலையில், சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஊடாக நீதியைப் பெறுவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகத்திற்கு தமிழ்த் தரப்பு தொடர்ந்து வழங்க வேண்டும்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற வல்லரசுகளுக்கு பிராந்திய பாதுகாப்பில் உள்ள அக்கறையை தமிழர்களின் அரசியல் உரிமைகளுடன் இணைத்துப் பேச வேண்டும்.
வடக்கு கிழக்கு பிரதேச மூலோபாய முக்கியத்துவத்தை குறிப்பாக திருகோணமலையை (Trincomalee) ஒரு பேரம் பேசும் சக்தியாக மாற்ற முயற்சிக்கலாம்.
புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்கள் அந்தந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, ஈழத்தமிழர் விவகாரத்தை உலக அரங்கில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் - முரண்பாடுகள் ஆகியவற்றை கைவிட்டு ஒருமித்த குரலில் சர்வதேசத்தை அணுக வேண்டும்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள, வடகிழக்கு பிராந்தியத்தில் சுயாதீனப் பொருளாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
ஈரான் போர் போன்ற உலகளாவிய நெருக்கடிகள் தமிழர்களின் கோரிக்கைகளை தற்காலிகமாக மறைக்கலாமே தவிர, அவற்றின் நியாயத்தன்மையை குறைத்துவிடாது.
கால மாற்றத்திற்கு ஏற்பத் தந்திரோபாயங்களை மாற்றி அமைப்பது தான், தமிழர்களின் தற்போதைய அவசர - அவசியத் தேவையாகும்.
அநுர அரசாங்கம் தற்போது "பொருளாதார இராஜதந்திரத்தை" (Economic Diplomacy) தனது வெளியுறவுக் கொள்கையின் மையப்புள்ளியாக இணைத்துள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் போன்ற வல்லரசுகளுடன் “சமாந்தரமான உறவைப் பேணுதல்” என்ற வெளியுறவுக் கொள்கையை மேலும் மேலும் மெருகூட்டி வருகிறது.
இக் கொள்கை பண்டாரநாயக்க - ஜேஆர் காலத்தில் இருந்து பின்பற்றி வந்தாலும், தற்போதைய உலக அரசியல் குழப்பங்கள் மற்றும் ஈரான் போரின் பின்னரான நிலைமைகள் எவ்வாறு அமையும் என்பதை இப்போதே மதிப்பிட்டு, அநுர அரசாங்கம் எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.
பொருளாதார ரீதியான முன்னேற்றம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற உத்தியை அநுர அரசாங்கம், வல்லரசு நாடுகள் மத்தியில் ஆதாரங்களுடன் முன்வைக்கிறது.
ஆகவே, இதனை எதிர்கொள்ளக் கூடிய ”ஏற்பாடுகள்” ”தயார்படுத்தல்கள்” உடனடியாக தமிழர் தரப்பில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அ.நிக்ஸன்- பத்திகையாளர்
Editor