விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: உர மானியம் ஹெக்டேருக்கு ரூ.30,000 ஆக உயர்வு!
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: உர மானியம் ஹெக்டேருக்கு ரூ.30,000 ஆக உயர்வு!
விவசாயிக்களுக்கு இதுவரை ஹெக்டேருக்கு ரூ.25,000 ஆக வழங்கப்பட்டு வந்த உர மானிய உதவித் தொகையை ரூ.30,000 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
கமலநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க இன்று (ஜூன் 5) அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 5,02,836 பயனாளிகளுக்கு இந்த உர உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென ரூபா.10,947 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இம்முறை உர உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்.
விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தைக் கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏப்ரல் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் அன்று விசேட உரையாற்றிய போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நெல்லுக்கான உர மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பயிர்ச்செய்கைகளில் (உருளை, மிளகாய், பெருங்காயம், புகையிலை போன்றவை) ஈடுபடும் விவசாயிகளுக்கான மானியம் 15,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்தே, தற்போது ஆணையாளர் நாயகம் மூலம் நெல் விவசாயிகளுக்கான மானிய உயர்வு (ரூ.30,000) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.