புலிகள் பெயரைச் சொல்லி இன்னமும் சீவியம் நடத்தும் மகிந்த
புலிகள் பெயரைச் சொல்லி சீவியம் நடத்தும் மகிந்த
* ஜனநாயக போர்வைக்குள் ஊழல் மோசடிகளை அனுமதிக்கும் ஆதரவாளர்கள்...
* நீதிமன்றம் - பொலிஸ் கட்டமைப்புகளை விடவும் மகிந்தவை நம்பும் மக்கள்...
* 2009 இற்கு முன்னர், பின்னர் என இரு வகை ஊழல் மோசடி
போர் வெற்றி என்பது மகிந்த ராஜபக்சவை ஒரு "தேசிய நாயகனாக" மாற்றியது மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் ஒரு போர்வையாகவும் மாறியுள்ளது.
போரின் மூலம் கிடைத்த பலமான மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி, மகிந்த மீதான விசாரணைகளை "நாட்டிற்கு எதிரான சதி" என்று ஆதரவாளர்களும், சில ஊடகங்களும் மிக எளிதாகத் திசைதிருப்புகின்றன.
ராஜபக்ச குடும்பம் மற்றும் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும், ஊழல் மோசடி - அதிகாரத் துஷ்பிரயோகங்களை இரு பிரதான கால பகுதிகளாக வகைப்படுத்தலாம்.
(A) 2009-க்கு முற்பட்ட போர்க்காலம்
அதாவது இக்காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவுகள் - பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளில் நடந்த பாரிய மோசடி குற்றச்சாட்டுகள்...
(B) 2009-க்குப் பின்னரான காலம் --
அதாவது, போர் வெற்றியினால் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டு, பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு போன்ற ஒப்பந்தங்களில் மில்லியன் கணக்கான டொலர் மோசடி குற்றச்சாட்டுகள்...
அதேவேளை, வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் போர்க் காலத்திலும், அதன் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், நில அபகரிப்பு மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பிற்குள் முன்னெடுக்க முடியாது.
ஐநா சர்வதேச விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்தும் வருகிறது.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சில விவகாரங்களில் மாத்திரம் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் சிலர் கைதாகின்றனர்.
ஆனால், அந்த விசாரணைகளும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக, வடக்கு கிழக்கு வெளியே இடம்பெற்ற ஊழல் மோசடி - அதிகார துஸ்பிரயோகம் - மனித உரிமை மீறல் விவகாரங்களில் மாத்திரமே விசாரணை நடக்கிறது.
மகிந்த போன்ற உயர் அரசியல் அதிகார வர்க்கங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டாலும், கைது செய்து தடுத்து வைத்தல் - தண்டனை வழங்கள் ஆகியவை சாத்தியப்படக் கூடியது அல்ல.
ஏனெனில், போர் வெற்றி முன்னுக்கு வரும்.
ஆகவே, தற்போது மாத்திரம் அல்ல, எப்போதுமே, புலிகளை வைத்து ராஜபக்ச குடும்பம் மற்றும் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் பலரும், காலம் காலமாகச் சீவியம் நடத்துவர் என்பது பட்டவர்த்தனமாகிறது.
அ.நிக்ஸன்-,பத்திரிகையாளர்
Editor