விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை எவ்வாறு? சீனாவின் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்!!!

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை எவ்வாறு?

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை எவ்வாறு? சீனாவின் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்!!!
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை எவ்வாறு? சீனாவின் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்!!!
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை எவ்வாறு? சீனாவின் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்!!!
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை எவ்வாறு? சீனாவின் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்!!!

* அன்றைய புவிசார் அரசியல் சூழலை வெளிப்படுத்திய கடற்படைத் தளபதி...

* யதார்த்த அரசியல் என்று பேசும் தமிழர்கள் புரிய வேண்டிய கசப்பான உண்மை.

* சர்வதேச நீதி எட்டாக்கனியா?

--- --- ---

போர்க் காலத்தில் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருந்த காலப்பகுதியில் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் அமைக்கப்பட்ட இரண்டு களஞ்சிய வளாகங்கள் ஊடாக சீனா ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் நியூஸ்பெஸ்ட் (Newsfirst) செய்திப் பிரிவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார். 

2006 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில், அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதத் தடைகளை விதித்திருந்தன. 

அந்த இக்கட்டான சூழ்நிலையில், சீனா, கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் ‘தீர்வையற்ற களஞ்சிய வளாகங்களை’ (Bonded Warehouses) அமைத்தது. 

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதத்துடன் (Letter of Authorization) செல்லும் இலங்கை இராணுவ அதிகாரிகள், அங்கிருந்து தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் கூறுகிறார். 

இது ஒரு ஆயுத பல்பொருள் அங்காடி போலச் செயல்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

போர்க் காலத்தில் கொழும்பு மற்றும் காலியில் ஆயுதங்களை விநியோகிப்பதில் ஈடுபட்டிருந்த சீன அரசுக்குச் சொந்தமான பல நிறுவனங்கள் (State-owned Enterprises) போர் முடிவடைந்தவுடன் உடனடியாகத் தங்களை கட்டுமான மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களாக (Construction Companies) மாற்றிக்கொண்டன.

போரின் பின்னர் மேற்கத்திய முதலீடுகள் இல்லாத ஒரு சுழல்நிலை (Vacuum) இலங்கையில் நிலவியது. 

ஏற்கனவே இலங்கையில் தளங்களை அமைத்திருந்த சீன நிறுவனங்கள், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் (Port City) போன்ற பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்களை மிக வேகமாகக் கைப்பற்றிச் செயற்படுத்தின.

ஆகவே, வலுவாக இருந்த விடுதலைப் புலிகளை முறியடிக்க, இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் உளவு, ஆயுதம் மற்றும் இராஜதந்திர உதவிகளை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை அட்மிரல் கொலம்பகேயின் இந்த புதிய வெளிப்பாடுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றது. 

இந்த விடயங்கள் ஏற்கனவே பகிரங்கமாக கசிந்துள்ள தகவல்கள் தான். 

ஆனாலும், இந்த நேர்காணல் மூலம் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ள இத் தகவல்கள், இலங்கையின் இறுதிக்கட்ட போரின் பின்னணியில் இருந்த முக்கியமான பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்பு உத்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.  

அதேநேரம். 2009 இல் போர் நிறைவடைந்தவுடன், அப்போதைய பிரதமர் அமரர் ரட்ணசிறி விக்கிரமரட்ன, அமெரிக்க - சீனா - இந்தியா - ரசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

உலக வல்லரசுகள் உட்பட ஏறத்தாழ 22 நாடுகளின் அதிநவீன ஆயுத உதவி, உளவுத்துறைத் தரவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் விசேட இராணுவப் பயிற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பெற்றதன் மூலமே, இலங்கை இராணுவத்தினால் விடுதலைப் புலிகளின் முப்படை மரபுவழிக் கட்டமைப்பை முறியடித்து வரலாற்று வெற்றியைப் பெற முடிந்தது என்ற தொனியில் அன்று நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் பெருமைப்பட்டனர். 

இராணுவத்தின் 53 ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய "ரோட் டு நந்திக்கடல்" (Road to Nandikadal) என்ற நூல், ஈழப்போர் குறித்த தகவல்கள் உண்டு. 

அதாவது, அமெரிக்க- இந்திய அரசுகளின் குறிப்பாக சீன - ரசிய நாடுகளின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், போரில் புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியாது என்ற கருத்தியலுக்கு குணரட்ன தனது நூலில் கற்பிதம் செய்கிறார். 

குறிப்பாக, சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்கிய உளவு மற்றும் விநியோக ஒத்துழைப்புகள் குறித்தும், விடுதலைப் புலிகளின் அதிநவீன தாக்குதல் திறன்கள் மற்றும் மரபுவழி இராணுவக் கட்டமைப்புகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஒத்துழைப்புகள் (International Cooperation) இலங்கை இராணுவம் போர்க்களத்தில் முன்னேறியபோது, சர்வதேச நாடுகள் பின்னணியில் நின்று எவ்வாறு உதவின என்பதை அவர் விவரித்துள்ளார். 

சர்வதேச கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை (Floating Armories) அமெரிக்கா மற்றும் இந்தியா வழங்கிய செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இலங்கைக் கடற்படை துல்லியமாக அழித்ததை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் புலம்பெயர் தமிழர்களின் நிதிப் பின்னணியை முடக்கியதால், புலிகளால் புதிய ஆயுதங்களள் வாங்க முடியாமல் போனது போரின் போக்கை மாற்றியது என குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தாக்குதல் திறன்கள் (LTTE's Offensive Capabilities) விடுதலைப் புலிகளை ஒரு சாதாரண கொரில்லா அமைப்பாகப் பார்க்காமல், அவர்கள் ஒரு முழுமையான மரபுவழி இராணுவமாக (Conventional Army) வளர்ந்திருந்ததை கமால் குணரத்ன தனது நூலில் ஒப்புக்கொண்டுள்ளார்.

யதார்த்த அரசியல் பேசுவதாகக் கூறிக்கொண்டு, சிங்கள ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வைக்கும் சில போலி முற்போக்குத் தமிழர்கள், யதார்த்த அரசியல் பேசுவோம் என்று கூறுகிற தமிழர்கள், 'புலிகளை எந்தவொரு நாடும் ஆதரிக்கவில்லை' என்று கூறி ஒட்டுமொத்தப் போராட்ட வலிமையையும் மலினப்படுத்தி வருகின்றனர். 

ஆனால், உண்மை அதுவல்ல. அன்றைய காலகட்டத்தில் நிலவிய உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் மற்றும் இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே வல்லரசுகள் காய்களை நகர்த்தின. 

அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குள் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், தமது சொந்த அரசியல் மற்றும் மூலோபாய நலன்களுக்காக அந்த முரண்பாடுகளைக் கைவிட்டு, 'முரண்பாட்டில் உடன்பாடு' என்ற அடிப்படையில் போட்டிப் போட்டுக் கொண்டு இலங்கை அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கின. 

எதிர்காலத்தில், உலகில் எந்தவொரு ஒடுக்கப்பட்ட இனமும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தங்களின் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுவிடக் கூடாது என்ற சர்வதேச உதாரணத்தை நிறுவுவதற்காகவே, புலிகள் இயக்கம் மிக மோசமான முறையில் உலக நாடுகளால் கூட்டாக ஒழிக்கப்பட்டது என்பதே நேரடி உண்மையாகும்.

ஆனால், இதில் வேதனையான உண்மை என்னவென்றால் — யுத்தம் முடிவடைந்தவுடன் தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு பெற்றுத்தரப்படும் என அமெரிக்காவும் இந்தியாவும் உறுதியாக நம்பியிருந்தன. 

இதனை, 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் இரா. சம்பந்தன், 'தானும் இதனை முழுமையாக நம்பியிருந்ததாகவும், ஆனால் போருக்கு முட்டுக்கொடுத்த இந்த நாடுகள், ஒரு தசாப்தம் கடந்துவிட்ட பின்னரும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை' என்றும் மிகுந்த ஏமாற்றத்துடன் பதிவு செய்திருந்தார். 

போரின் பின்னர், நிலையான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தங்களிடம் உறுதியளித்துள்ளது என்றும், அதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும்' என்றும் கொழும்பில் இருந்த அமெரிக்க - இந்தியத் தூதுவர்கள் தன்னிடம் நேரில் கேட்டுக்கொண்டதாக சம்பந்தன் அங்கு விவரித்திருந்தார்.

(சம்பந்தன் கூறிய இந்த விடயத்தை எனது முன்னைய கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்)

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தம் மிகத் தெளிவானது, அதாவது 'புலிகளை அழிக்க சர்வதேச ஒத்துழைப்பு வேண்டும். 

ஆனால், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்க உள்நாட்டுப் பொறிமுறை போதும்' என்பதே இலங்கை அரசின் மாறாத நிலைப்பாடாகும். 

ஆனால் இன்றுவரை மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தத்தைக் கூட நடைமுறைப்படுத்த சிங்களத் தலைமைகளுக்கு மனம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அதேநேரம், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையோ அல்லது இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையோ, ஏன் தொடர்ந்து தட்டிக்கழிக்கப்பட்டு, வருகிறது என்பது இப்போது புரிகிறதா? 

அன்று போர்ப் பிரதேசத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்த வல்லரசுகள், இன்று தங்களின் சொந்த புவிசார் அரசியல் நலன்களுக்காகவும், தங்களின் முகமூடிகள் கழன்றுவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்த சர்வதேச நீதிக்கான நியாயங்கள் திட்டமிட்டு முடக்கப்படு வருகின்றன.

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்