நன்னீர் மீன்வள அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி
நன்னீர் மீன்வள அபிவிருத்தி!
கிழக்கு மாகாணத்தில் தீட்வா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் கடந்த 29ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கையெழுத்திடப்பட்டன.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திட்டத்தின் தொழில்நுட்ப ஆதரவை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கவுள்ளது. இதன் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் கூண்டுகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கங்களுக்குத் தேவையான தடுப்பணை வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இங்கினியகல மீன் இனப்பெருக்க மையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான ஹார்மோன்கள் மற்றும் இரசாயனங்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், மீன்பிடி சங்கங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு மீன் கூண்டு வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களும் நடத்தப்படவுள்ளன.
முதல் கட்ட வளர்ப்பிற்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் இலவசமாக வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம், தீட்வா புயலால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் பொருளாதார மீட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Editor