போலி குறுஞ்செய்திகள் மூலம் போக்குவரத்து அபராத மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

போலி குறுஞ்செய்திகள் மூலம் அபராத மோசடி:

போலி  குறுஞ்செய்திகள் மூலம்  போக்குவரத்து அபராத மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட சாரதிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்து, இலங்கை பொலிஸார் அனுப்பியது போல் தோற்றமளிக்கும் போலி SMS மற்றும் WhatsApp செய்திகள் அண்மைக் காலமாக பல்வேறு போலி தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த செய்தியைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட குற்றத்திற்கான அபராதத்தை செலுத்துவதற்காக “https://thecourierguy.cu.cc/lk”⁠� என்ற போலி இணையதளத்தை அணுகுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த இணையதளத்தை அணுகும் சாரதிகள் அபராதத் தொகையை செலுத்துவதாக நம்பி அடுத்தடுத்த செயல்முறைகளில் ஈடுபடும் வகையில் அதன் வடிவமைப்பு மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மோசடிக்காரர்கள் அவர்களின் கடன் அட்டை விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை திரட்டிக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “GovPay” இணையதளத்தைப் போன்ற வடிவமைப்பில் இந்த போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் இது முழுமையாக போலியாக தயாரிக்கப்பட்ட இணையதளமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி நடவடிக்கை இலங்கை பொலிஸாரின் நற்பெயருக்கும், பொதுமக்களின் நம்பிக்கைக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, போலி SMS மற்றும் WhatsApp செய்திகளில் உள்ள இணைப்புகளை திறக்காமல் இருக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வரும் இத்தகைய தகவல்களை மிகுந்த அவதானத்துடன் பரிசீலிக்கவும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தற்போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதங்கள், பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றத்தை அறிவித்த பின்னர் “GovPay” செயலியின் மூலம் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அபராத சீட்டின் அடிப்படையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.