தெற்கு சிரியாவுக்குள் இஸ்ரேல் படைகள் ஊடுருவல் !
தெற்கு சிரியாவுக்குள் இஸ்ரேல் படைகள் !
தெற்கு சிரியாவின் குனைத்ரா மாகாணத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ளதாக சிரிய அரச செய்தி நிறுவனம் SANA தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்திற்குள் இப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது இராணுவ ஊடுருவல் இதுவாகும்.
சனிக்கிழமை அதிகாலை, நான்கு இராணுவ வாகனங்களைக் கொண்ட இஸ்ரேல் படைப்பிரிவு அபு மத்ரா பண்ணைப் பகுதிக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சய்தா அல்-கோலான் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
அந்தப் படையினர் ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தி, அங்கிருந்த ஒரு பொதுமகனை கைது செய்து, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குக் கொண்டு சென்றதாக SANA தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு நான்கு இராணுவ வாகனங்களைக் கொண்ட இஸ்ரேல் படைப்பிரிவு அல்-ஆஷா கிராமத்திற்குள் நுழைந்து பல வீடுகளில் சோதனை நடத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய ஊடகங்களின் தகவல்களின்படி, தெற்கு சிரியாவில் இஸ்ரேல் படைகள் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள், திடீர் சோதனைகள், சோதனைச் சாவடிகள் , வீட்டு தேடுதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
2024 டிசம்பர் 8 ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி Bashar al-Assad (பஷார் அல்-அசாத்) ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, 1974 ஆம் ஆண்டு சிரியா-இஸ்ரேல் பிரிப்புக் ஒப்பந்தம் இனி செல்லுபடியாகாது என இஸ்ரேல் அறிவித்தது. பின்னர் இரு தரப்புகளையும் பிரிக்கும் Buffer Zone (இடைப்பட்ட பாதுகாப்பு மண்டலம்) பகுதிக்குள் தனது படைகளை முன்னேற்றியது.
எனினும், சிரியாவின் புதிய நிர்வாகம் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மதித்து கடைப்பிடிப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
சிரியாவின் புதிய தலைமையிலிருந்து நேரடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாத நிலையிலும், இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இராணுவ ஊடுருவல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் இராணுவ தளங்கள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Editor