தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் பாரதிராஜா...

தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் ...

தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் பாரதிராஜா...
தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் பாரதிராஜா...
தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் பாரதிராஜா...
தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் பாரதிராஜா...
தமிழ் சினிமாத் துறையின் பாடப்புத்தகம் பாரதிராஜா...

* ஈழத்தமிழர் அரசியல் நியாயங்களை நன்கு அறிந்தவர்

* ஈழத்தமிழர் போராட்டம் பற்றி எழுதிய கதை, அரசியல் பின்னணிகளால் முழுமை பெறவில்லை...

* சென்னை பட அரங்கில் இருந்து, கமராவை முதன் முதலில் கிராமத்துக்குள் கொண்டு சென்றவர்...

இந்திய தமிழ் சினிமா துறையின் பாடப் புத்தகம் பாரதிராஜா, வெறுமனே உணர்ச்சிப்பூர்வமான ஆதரவாளராக மாத்திரம் அல்ல, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை அரசியல் ரீதியாக ஆழமாக அறிந்தவர்.

30 வருட ஆயுதப் போராட்டத்தின் நியாயங்களையும், ஈழத்தமிழ் மக்களின் தியாகங்களையும் தமிழ்நாட்டில் - உலக அரங்கில் உரக்கச் சொன்னவர் பாரதிராஜா.

ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் மிக எளிதாகச் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள்.

சர்வதேசத்தில் பரந்துள்ள ஈழத்தமிழர்கள் தங்களுக்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கிக் கொண்டு உலகை வெல்ல வேண்டும் என்று மனதார வாழ்த்தியவர், மூத்த இயக்குநர் பாரதிராஜா.

போராளிகளின் தியாகமும், மண்ணுக்காக சிந்தப்பட்ட குருதியும் ஒருபோதும் மறையாது. இறுதி இலக்கான ”அரசியல் விடுதலை” - ”உரிமைக்கான நியாயங்கள்” ஆகியவற்றை ஈழத்தமிழர்கள் உறுதியோடு நின்று ஒரு நாள் நிச்சயம் நிறுவுவார்கள் என்ற நம்பிக்கையை பலமாக முன்வைத்தவர்.

தமிழ் நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் வெறுமனே மொழியால் இணைந்தவர்கள் அல்ல, ஒரே குருதியும், ஒரே கலைப் பாரம்பரியமும், ஆழமான உணர்வும் கொண்ட உறவுகள் எனவும் உளப்பூர்வமாக கருத்திட்டிருந்தார். 

2004 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்ற பாரதிராஜா, அங்கு நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு போராளிகளின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் தனது வணக்கத்தைச் செலுத்தினார். 

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய பாரதிராஜா, ஈழப் போராட்டத்தின் உண்மை வரலாற்றை உலகிற்குச் சொல்லும் கடமை தனக்கு இருப்பதாக கூறிப் பெருமைப்பட்டார். 

மரணமடையும் வரை நேரடியாக முழு நீளப் படமாக ஈழப் போராட்டத்தை இயக்கவில்லை. 

இருந்தாலும், ஈழப் பின்னணியை மறைமுகமாகவும், ஈழப் போராட்டப் படைப்புகளுக்கு ஆதரவாகவும் செயற்பட்டார். 

1992 ஆம் ஆண்டு வெளியான 'கப்டன் மகள்' படத்தின் பிரதான கதை ஒரு இராணுவ அதிகாரியின் மகளைச் சுற்றிய காதல் மற்றும் குடும்ப விடயமாக இருந்தது. 

ஆனாலும் அக் கதையின் பின்னணியில், இலங்கை இனப் பிரச்சினை மற்றும் 1987 இந்திய அமைதிப்படை காலத்துச் சூழல்கள் மறைமுகக் குறியீடுகளாகவும், அரசியல் உரையாடல்களாகவும் ஆங்காங்கே தொட்டுச் செல்லப்பட்டிருக்கும்.

தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தபோது, ஈழப் போராட்டம் குறித்து ஒரு காவியப் படைப்பை உருவாக்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம், போராளிகளின் விடுதலை வேட்கை போன்றவற்றை மையப்படுத்தி, பாரதிராஜா ஒரு பிரம்மாண்ட திரைக்கதையை எழுதினார். 

ஆனால், அரசியல் காரணிகள் - பின்னணிகள் ஒரு முழுமையான படம் ஒன்றை எடுக்கத் தடையாக இருந்தது. 

மரணிக்கும் வரை அவருக்கு அது மாறாத வரலாற்றுச் சோகமாகவே இருந்திருக்கும்...

அதேநேரம், ஈழத்தமிழர் வாழ்வியலையும், போருக்குப் பிந்தைய அவலங்களையும் பேசிய 'சினம்கொள்' என்ற ஈழத்தமிழ் சுயாதீனத் திரைப்படத்தை நேரில் பார்த்து பாராட்டி உலகளவில் கொண்டு சேர்க்க பாரதிராஜா, பெரும் ஆதரவாளராக - ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

ரஞ்சித் ஜோசப் 2020 ஆம் ஆண்டு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்கள் சிலர் எடுத்து வரும் குறுந்திரைப்படங்களை பாரதிராஜா வரவேற்றார், ஊக்கப்படுத்தினார்.

1970 களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் சென்னை படப்பிடிப்பு அரங்குகளுக்குள் (Studio Set) செயற்கையாக காட்சி அமைத்து எடுக்கப்பட்டன. 

ஆனால், அந்த மரபை உடைத்து, படக் கருவிகளை (Video Camera) கிராமத்து மண்ணுக்கும், திறந்தவெளி இயற்கைக்கும் கொண்டு சென்றவர் பாரதிராஜா. 

கிராமியத் தன்மையோடு கூடிய இவரது படங்களில் 'மண்வாசனை' மிக அழுத்தமாக வீசியது. "என் இனிய தமிழ் மக்களே..." என்ற அவரது காந்தக் குரல் கலந்த அறிமுக உரை அவரது படங்களின் தனித்துவ அடையாளமாகும்.

ஏறத்தாள 50 ஆண்டுகால திரையுலக வாழ்வில், 40 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும், மனித உணர்வுகளையும், வாழ்வியல் அறங்களையும் படங்கள் ஊடாக ஆழமாகக் காண்பித்தவர் பாரதிராஜா.

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்