தெயட்ட கிருள நிதி முறைகேடு: ஷிரந்தி ராஜபக்ச மீது இலஞ்ச ஆணைக்குழுவில் புகார்!

தெயட்டகிருள’ நிதி முறைகேடு: ஷிரந்தி ராஜபக்ச மீது புகார்!

தெயட்ட கிருள  நிதி முறைகேடு: ஷிரந்தி ராஜபக்ச  மீது  இலஞ்ச ஆணைக்குழுவில் புகார்!

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அம்பாறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற தெயட்ட கிருள' (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது  பெருமளவிலான நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி, முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மனைவி மற்றும் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை, இலஞ்சம்,  ஊழலுக்கு எதிரான சிவில்  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கமந்தா துஷாரா தாக்கல் செய்துள்ளார்.

புகாரின் படி, சம்பந்தப்பட்ட கண்காட்சிகளுக்கான நிகழ்ச்சி முகாமைத்துவ சேவைகள் மற்றும் திடக்கழிவு அகற்றும் பணிகள் முறையான கேள்விப்பத்திர அழைப்பு (டெண்டர்) நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஷிரந்தி ராஜபக்ச 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையையும், அக்காலத்தில் சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய 80 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையையும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து தவறாகப் பயன்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கமந்தா துஷாரா, குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான அனைத்து எழுத்துப்பூர்வ ஆதாரங்களும் ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிலிருந்து கோப்புகள் காணாமல் போகும் அபாயம் இருந்தாலும், தங்களிடம் உள்ள ஆவணங்கள் பல்வேறு பாதுகாப்பான வெளிப்புற இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை தேவையான நேரத்தில் விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி முறைகேடு தொடர்பில் விரைவான, பாரபட்சமற்ற மற்றும் முறையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொது நிதியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் குடிமக்கள் சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.