கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்

கோட்டாபயவின் கைது விவகாரம் !

கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்
கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்
கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்
கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்

* 2009 போர் முடிந்ததும், ஐநாவில் இலங்கை சமர்ப்பித்த பிரேரணை போன்று 2026/ 2027 இல் வரலாம்?

* எந்த முறையிலேனும் கோட்டாபய கைதாக வேண்டும் என்ற புரிதலற்ற தமிழர் மனநிலை!

* சிதறுண்டுள்ள சூழலில், புத்தி சொல்லியும் பயனற்ற தமிழ்த்தரப்பு!

--- --- --- 

ஈழத்தமிழர்களின் எண்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் போராட்டம், 2009ஆம் ஆண்டு மிக வேகமாக சர்வதேச மட்டத்திற்கு நகர்ந்தது.

குறிப்பாக, 2012ஆம் ஆண்டு முதன்முறையாக ஐ நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையும், அதன் மீதான தீர்மானமும் கடந்த 15 ஆண்டுகளில் அதன் உண்மையான உள்ளடக்கத்திலிருந்து படிப்படியாகத் தரம் இறக்கப்பட்டு விட்டன.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்று மார்தட்டிக்கொண்ட மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில், இலங்கை அரசு ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. 

ஆனால், அந்த ஆண்டிலிருந்தே 'தமிழர்களின் அரசியல் விடுதலை - சுயநிர்ணய உரிமை' என்ற பிரதான விவகாரம், ஒட்டுமொத்த இலங்கைத்தீவிற்குமான ஒரு பொதுவான மனித உரிமைப் பிரச்சினையாகத் திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்பட்டது. 

2022 ஆம் ஆண்டளவில் இந்த விவகாரங்கள் வெறும் மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் என்ற எல்லைக்குள் மேலும் சுருக்கப்பட்டன.

இதன் விளைவாக, ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிக்கான கோரிக்கை பத்தோடு பதினொன்றாக முற்றாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

இத்தருணத்தில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படலாம் எனச் செய்திகள் கசிந்துள்ளன. 

இதற்குப் பயந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்யவதைத் தடுக்க கோட்டாபய நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

2009 இறுதிப் போர் காலத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இன அழிப்பு - மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளிலேயே கோட்டாபய உள்ளிட்ட இராணுவ, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சர்வதேசத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், இன்று அக் குற்றச்சாட்டுகள் யாவும் திட்டமிட்டுப் புறந்தள்ளப்பட்டு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் காரணியாக்கி அவரைக் கைது செய்வதற்கான நாடகங்கள் அரங்கேறுகின்றன. 

இந்த அரசியல் நகர்வுகள் எதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்வென்றால், ஈழத்தமிழர் விவகாரம் சார்ந்து எந்தவொரு சிங்கள அரசியல் தலைவரோ அல்லது இராணுவ உயர் அதிகாரிகளோ சர்வதேசத்தின் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தப்படக் கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதப் பொதுப்புத்தி எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதைத்தான்.

வரவிருக்கும் செப்டம்பர் மாத ஐ நா மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய வாய்மொழி மூல அறிக்கை வெளிவரவுள்ள பின்னணியில், இத்தகைய உள்நாட்டுத் திசை திருப்பல்கள் அரங்கேறி வருகின்றன என்பது வெளிப்படை.

ஆகவே, ஈழத்தமிழர் விவகாரத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்திலும் ஊழல் மோசடிகளிலும் தொடர்புடைய பலரைக் கைது செய்துள்ளோம் என்று சர்வதேசத்திற்கு கணக்குக் காட்டுவதே இவர்களின் தற்போதைய புதிய தந்திரோபாயம் ஆகும். 

இதன் மூலம் ஐ நா மனித உரிமைகள் சபையிடமிருந்து வரக்கூடிய மேலதிக அல்லது புதிய அழுத்தங்களைக் குறைப்பதே இவர்களின் பிரதான இலக்கு. 

இச் சிந்தனை அநுரகுமார திஸாநாயக்க என்ற தனிநபருடையது அல்ல, மாறாக, இலங்கை அரசு என்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பொறிமுறை வகுத்துள்ள ஒரு ராஜதந்திர உத்தி. 

போர் இல்லாதொழிக்கப்பட்ட, 2009 மே 28 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் சபையின் சிறப்பு அமர்வில் (Resolution S-11/1) இலங்கை தொடர்பாக முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அது இலங்கைக்கு எதிரானதாக அல்ல... 

மாறாக, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததற்காக அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பாராட்டியும், உள்நாட்டு மறுசீரமைப்புக்கு ஆதரவாகவும் இலங்கை அரசே முன்னின்று கொண்டு வந்த தீர்மானம் அது... 

இந்த உத்தியைத் தான் தற்போது இலங்கை அரசு என்ற பொறிமுறைக் கட்டமைப்பு அநுர அரசாங்கத்தில் 2026 / 2027 இல் நகர்த்தவுள்ளது என்பது பட்டவர்த்தனமாகிறது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் குறித்து, 2011ஆம் ஆண்டு அன்றைய ஐ நா பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை, இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது நிகழ்த்தியது சாதாரண மனித உரிமை மீறல் அல்ல என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்தது. 

அவை திட்டமிட்டு நடத்தப்பட்ட 'போர்க்குற்றங்கள்' (War Crimes) மற்றும் 'மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள்' (Crimes against Humanity) என்பதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது.

"பூச்சியப் பொதுமக்கள் உயிரிழப்பு" (Zero Civilian Casualties) என்று உலகை ஏமாற்றி, இக் கோர தாண்டவத்தை ஒரு "மனிதநேய மீட்பு நடவடிக்கை" எனச் சித்தரித்த இலங்கை அரசின் பொய் வாதங்களை, ஐ நா நிபுணர் குழு அறிக்கை முற்றாக நிராகரித்தது..

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே பேரினவாத சிங்கள அரசின் கட்டமைக்கப்பட்ட கொள்கைகள், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகவே தொடங்கின என்பதையும் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

கல்வி - மொழி சார்ந்த பாகுபாடுகள், குறிப்பாக 1956ஆம் ஆண்டின் 'சிங்களம் மட்டும்' சட்டம் - பல்கலைக்கழக அனுமதித் தரப்படுத்தல் போன்றவை, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அதிருப்தியை ஆயுதப் போராட்டமாக மாற்றியது என்றும் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் இந்த வரலாற்று உண்மைகளும் சர்வதேச நீதிக்கான கோரிக்கைகளும் திட்டமிட்டு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகின்றன. 

தற்போது ஒட்டுமொத்த இலங்கையின் ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் ஆகிய பொதுவான குற்றச்சாட்டுகளுக்குள்ளும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் கைதுகளுக்குள்ளும் ஈழத்தமிழர் விவகாரம் முற்றாகச் சுருக்கப்பட்டு, திசை திருப்பப்படுகிறது.

இதற்குப் பின்னால் மிக முக்கியமான இரண்டு காரண-காரியங்கள் உண்டு...

1) ஈழத்தமிழர் அரசியல் விவகாரத்தை அல்லது போர்க்குற்றங்களை முன்வைத்து கோட்டாபய ராஜபக்சவோ அல்லது பிற சிங்களத் தலைவர்களோ, இராணுவ உயர் அதிகாரிகளோ கைது செய்யப்பட்டால், அது சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் அநுர அரசாங்கத்திற்கு இருக்கும் செல்வாக்கை முற்றாகச் சரித்துவிடும்.

2) ஐ.நாவின் பொறுப்புக்கூறல் விசாரணைப் பொறிமுறையானது பலமுறை கால நீடிப்புச் செய்யப்பட்டு, இலங்கை அரசிற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் காலக்கெடு எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது.

எனவே, இனிமேலும் கால நீடிப்பைப் பெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு என்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக "நாங்கள் உள்நாட்டில் சில சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம்" என்று உலகிற்குக் கணக்குக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆகவே, சர்வதேசத்தை தமக்கு ஏற்றதாக மாற்றி, அதேநேரம் பேரினவாத சிங்களப் பொதுப்புத்தியையும் திருப்திப்படுத்தும் நோக்கில் அரங்கேற்றப்படும் நாடகங்கள் தான் இவை என்பதை ஈழத்தமிழ் மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய கோட்டாபய, ஏதாவது ஒரு உள்நாட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டாலே போதும் என ஈழத்தமிழர்கள் விரும்புவது - நம்புவது மிகத் தவறான மனநிலையாகும். 

ஏனெனில் இது, 1920களில் இருந்தே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட 'இலங்கை அரசு' என்ற பேரினவாதக் கட்டமைப்பானது, காலத்திற்கேற்பத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நகர்த்தும் ஒரு பாதுகாப்பு உத்தி... 

இந்த இரகசிய உள்ளடக்கத்தைத் தமிழர்கள் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

இத்தகைய இக்கட்டான, அரசியல் சூழலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? 

தமிழ் மக்களின் நீதிக்கான குரலைச் சர்வதேச மட்டத்தில் எவ்வாறு தக்கவைக்க வேண்டும்? 

சிதறுண்டுள்ள சூழலில், இதற்கு மேல் அவர்களுக்கு எவருமே புத்தி சொல்ல வேண்டிய அவசியமில்லை, வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து அவர்களே திருந்திச் செயலாற்ற வேண்டும்.

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்