டிரம்ப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு: அமெரிக்கா முழுவதும் போராட்டம்
டிரம்ப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு: அமெரிக்கா முழுவதும் போராட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈரான் போர் உள்ளிட்ட கொள்கைகளை கண்டித்து, நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். "அரசர்கள் வேண்டாம்" (No Kings) என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்தப் பேரணிகள், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடத்தப்படும் மிகப்பெரிய போராட்டமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (மார்ச் 28) நடைபெற்ற மூன்றாம் கட்டப் போராட்டங்களில் சுமார் 9 இலட்சம் மக்கள் கலந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலுமாக 3,200-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மற்றும் பேரணிகள் திட்டமிடப்பட்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும், "போரை நிறுத்துங்கள்", "ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்னசோட்டாவின் தலைநகர் செயின்ட் பாலில் நடைபெற்ற பேரணியில் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், ஆளுநர் டிம் வால்ஸ், ராக் இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நியூயார்க்கில் நடிகர் ராபர்ட் டி நீரோவும் பங்கேற்றார்.
செனட்டர் சாண்டர்ஸ் கூறுகையில், "இந்த நாட்டை சர்வாதிகாரமோ அல்லது பணவர்க்க ஆட்சியோ வீழ்ச்சியடைய அனுமதிக்க மாட்டோம். நாமே, மக்களே ஆள்வோம்" என்றார்.
இந்நிலையில், இப்சோஸ் (Ipsos) மற்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், டொனால்ட் டிரம்பிற்கான ஆதரவு விகிதம் 36% ஆகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் இது 40% ஆக இருந்தது. அவர் பதவியேற்ற ஆரம்பத்தில் இந்த ஆதரவு 47% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மேலாண்மை குறித்து 29% மக்கள் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர் - இது டிரம்பின் இரண்டு பதவிக்காலங்களிலுமே மிகக் குறைந்த மதிப்பீடாகும். ஈரான் போர் குறித்து 46% மக்கள் இது அமெரிக்காவை நீண்டகாலத்தில் பாதுகாப்பற்றதாக்கும் எனக் கருதுகின்றனர்.
பெரும்பாலான போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றாலும், டல்லாஸ், லாஸ் ஏஞ்சலஸ், புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் சிறிய அளவிலான மோதல்களும் கைதுகளும் பதிவாகியுள்ளன. லாஸ் ஏஞ்சலஸில் இரண்டு கூட்டாட்சி அதிகாரிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Editor