பூமிக்கு வந்த புதிய ஆபத்து: உலகமே வெப்பமடையும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

பூமிக்கு வந்த புதிய ஆபத்து:

பூமிக்கு வந்த புதிய ஆபத்து: உலகமே வெப்பமடையும்  விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

 அட்லாண்டிக் மெரிடியோனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன்' (AMOC) என்பது கடலுக்கு அடியில் இயங்கும் ஒரு பிரம்மாண்ட கன்வேயர் பெல்ட் போன்ற நீரோட்ட அமைப்பாகும்.

உலகெங்கும் உள்ள பெருங்கடல்கள் அனைத்தும் புவி வெப்பமயமாதலால் வேகமாக வெப்பமடைந்து வரும் நிலையில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டும் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்து வருகிறது. கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளுக்கு தெற்கே உள்ள ஒரு குறிப்பிட்ட கடல் பகுதி மட்டும், மற்ற இடங்களுக்கு மாறாக தொடர்ந்து குளிர்ந்துகொண்டே போகிறது.

விஞ்ஞானிகளால் 'கோல்ட் பிளாப்' (Cold Blob) அல்லது 'வார்மிங் ஹோல்' (Warming Hole) என்று அழைக்கப்படும் இப்பகுதி, கடந்த 1900-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 1 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ந்துள்ளது.

பூமியின் மிக அபாயகரமான காலநிலை மாற்றப் புள்ளியை நோக்கி நாம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த மர்மமான குளிர் பகுதி காட்டுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

இந்தக் கடல் பகுதி ஏன் குளிர்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே நீண்ட நாட்களாக விவாதம் நடந்து வந்தது. கடல் மட்டத்திற்கு மேலே வீசும் பலத்த காற்று மற்றும் மேகக் கூட்டங்களால் கடலின் மேற்பரப்பு வெப்பத்தை இழப்பது இதற்குக் காரணமா? அல்லது கடலுக்கு அடியில் வெப்பத்தைக் கடத்தும் முக்கிய நீரோட்ட அமைப்பு பலவீனமடைவது காரணமா? என்ற கேள்வி நீடித்தது.

தற்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வு, இரண்டாவது காரணத்தை உறுதி செய்துள்ளது. அதாவது, கடலுக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணம் என்று அது கூறுகிறது.

ஆபத்தில் இருக்கும் 'கடல் கன்வேயர் பெல்ட்'

'அட்லாண்டிக் மெரிடியோனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன்' (AMOC) என்பது கடலுக்கு அடியில் இயங்கும் ஒரு பிரம்மாண்ட கன்வேயர் பெல்ட் போன்ற நீரோட்ட அமைப்பாகும். இது வெப்பமண்டலப் பகுதியிலிருந்து உஷ்ணமான நீரை வடக்கு அரைக்கோளத்திற்குக் கொண்டு செல்கிறது. அங்குச் சென்றதும் அந்த நீர் குளிர்ந்து, அடர்த்தியாகி, கடலின் ஆழத்திற்குச் சென்று மீண்டும் தெற்கு நோக்கிப் பாய்கிறது.

மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் காரணமாக, பனிப்பாறைகள் உருகி பெருமளவில் நன்னீர் (Freshwater) கடலில் கலக்கிறது. இது கடலின் வெப்பம் மற்றும் உப்புத்தன்மையின் சமநிலையைக் குலைப்பதால், ஏ.எம்.ஒ.சி. (AMOC) நீரோட்ட அமைப்பு பலவீனமடைந்து வருகிறது. இந்த நீரோட்டம் பலவீனமடைவதால், வடக்கு நோக்கிச் செல்லும் வெப்பத்தின் அளவு குறைந்து, அந்தப் பகுதியில் 'கோல்ட் பிளாப்' எனப்படும் குளிர் பகுதி உருவாகியுள்ளது.

ஜெர்மனியின் போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் கடலியல் பேராசிரியரான ஸ்டீபன் ரஹ்ம்ஸ்டோர்ஃப் (Stefan Rahmstorf) இது குறித்துக் கூறும்போது:

"கடலின் மேற்பரப்பில் நடக்கும் காற்றோட்ட மாற்றங்களால் மட்டும் இந்த அளவுக்குக் குளிர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. கருவிகள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தக் குளிர்ச்சி கடலின் ஆழமான பகுதியிலும் நடக்கிறது. இதற்குக் காரணம் அட்லாண்டிக் மெரிடியோனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் (AMOC) நீரோட்டம் பலவீனமடைந்து, வெப்பத்தைக் கடத்தும் திறனை இழப்பதுதான்."

அட்லாண்டிக் நீரோட்ட அமைப்பு கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் உலகிற்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

இந்த (AMOC) நீரோட்ட அமைப்பு முழுமையாக முடங்கினால், அது உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்:

*வெப்பத்தைக் கொண்டு வரும் நீரோட்டம் நின்று போனால், ஐரோப்பிய நாடுகள் உறைபனி குளிரில் மூழ்கும்.

*அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடல் மட்டம் மிக வேகமாக உயரும்.

*ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் பருவமழை பொழியும் முறை மாறி, கடுமையான மற்றும் நீண்ட கால வறட்சி ஏற்படும்.

யுட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் கடல் ஆராய்ச்சியாளர் ரெனே வான் வெஸ்டன் மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் டேவிட் தார்னலி ஆகியோர், இந்த ஆய்வு அட்லாண்டிக் மெரிடியோனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் (AMOC) பலவீனமடைவதை வலுவாக நிரூபித்தாலும், கடலில் இருந்து இன்னும் துல்லியமான மற்றும் கூடுதல் தரவுகள் நமக்குத் தேவை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், அட்லாண்டிக் கடலில் தோன்றும் இந்த நீல நிறக் குளிர் புள்ளி, பூமிக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு தீவிரமான எச்சரிக்கை மணி என்பதில் விஞ்ஞானிகளுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நன்றி: tamil.indianexpress.com