இலங்கை மத்திய வங்கியின் 2025 பொருளாதார அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
2025 பொருளாதார அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் “2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார விளக்கவுரை” மற்றும் “2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள்” ஆகிய இரண்டு முக்கிய அறிக்கைகளும் இன்று (20) திங்கட்கிழமை ஜனாதிபதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க குறித்த அறிக்கைகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஜனாதிபதியிடம் வழங்கினார்.
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் முதன்மை வெளியீடான 2025 ஆம் ஆண்டுப் பொருளாதார அறிக்கை, “2025-ஆம் ஆண்டில், தொடர்ச்சியான பேரியல் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நடைபெற்று வரும் கொள்கை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் ஆதரவுடன், வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் போக்குகள் தொடர்பான உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இலங்கை பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தத் தயாராக உள்ளது” எனக் கணித்துள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பாதகமான வானிலை மற்றும் பேரழிவுகரமான இயற்கைச் சீற்றங்களின் தாக்கம் இருந்தபோதிலும், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் மீள்திறனுடன் இருந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேம்பட்ட பேரியல் பொருளாதார நிலைமைகள் மற்றும் கொள்கை நிலைத்தன்மையை மேம்படுத்துதல், அதன் மூலம் முதலீட்டு நம்பிக்கையை அதிகரித்தல் ஆகியவை, அதிர்ச்சிகளை மிகவும் திறம்படச் சமாளிக்கத் தேவையான காப்பு நிதிகளை உருவாக்கும் பொருளாதாரத்தின் திறனை மேம்படுத்துவதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்நிகழ்வில் தொழிலாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் பிரதி அமைச்சருமான டி.கே. அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் டி.கே. ஹர்ஷனா சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
Editor