விக்டர் ஜவன்: ஊடகத் துறையில் ஒரு சமூகப் பொறுப்பின் அடையாளம்       

விக்டர் ஜவன்: ஊடகத் துறையில் ஒரு சமூகப் பொறுப்பின் அடையாளம் 

விக்டர் ஜவன்: ஊடகத் துறையில் ஒரு சமூகப் பொறுப்பின் அடையாளம்       

ஒரு மனிதனின் மிகப்பெரிய அடையாளம் அவன் வகித்த பதவியோ, எழுதிய புத்தகங்களோ மட்டுமல்ல; அவனுடன் பழகிய ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அவன் விதைத்த நினைவுகளே ஆகும். விக்டர் ஜவன் அவர்களைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், 2000 ஆம் ஆண்டு மகரகமவில் உள்ள 'ராவய' அலுவலகத்தில் நடைபெற்ற எங்களின் முதல் சந்திப்புதான் ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று வெள்ளை உடையில் மெலிந்த உருவுடன் காட்சியளித்த அந்த மனிதரின் இடது கை முழங்கைக்குக் கீழே வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டிருந்தது; வலது கை விரல்கள் வளைந்திருந்தன. ஆனால் அந்த வலது கை விரல்களுக்கிடையே 'பால்பாய்ண்ட்' பேனாவை வைத்து, அதை வாயருகே கொண்டு வந்து மூடியை அகற்றி எழுதப் பழகுவதற்கான அவரது உறுதியும் உற்சாகமுமே அப்போது அதிகமாக வெளிப்பட்டன. உடல் அங்கவீனம் இலக்குகளுக்குத் தடையல்ல என்பதை அவரது வாழ்க்கையே நிரூபித்தது. 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியில் இழந்த உறுப்பு அது. அந்தக் காட்சி முதலில் விநாடி நேர ஆச்சரியத்தைத் தந்தாலும், அடுத்த கணமே அவரது முகத்தில் ஒளிர்ந்த புன்னகையும், கண்களில் தெரிந்த தீட்சண்யமும் என்னை அசர வைத்தன.

நேரடியாகப் பேச்சைத் தொடங்கிய அவர், "ராவய வெளியிடவிருக்கும் தமிழ் பத்திரிகையில் வேலை செய்ய விருப்பமா?" என்று கேட்டார். சில விநாடிகள் நான் பதில் சொல்லாமல் திகைத்து நின்றேன். அவர் மீண்டும் புன்னகையுடன் என்னையே பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு வழிகாட்டியின் தெளிவும் நம்பிக்கையும் இருந்தன. நான் சுதாரித்து, "தங்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறேன்" என்றேன். அவர் வெறுமனே "சரி" என்று சொல்லிவிட்டு, அடுத்த கட்ட வேலைகளைப் பேசத் தொடங்கினார். சம்பிரதாயங்களின்றி, ஒரு மனிதனின் வார்த்தையையே போதுமான ஆவணமாகக் கருதினார். அன்று அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தைதான், என் வாழ்க்கையின் திசையை மாற்றியது. இப்படித் தொடங்கிய எங்கள் உறவு 21 ஆண்டுகள் நீடித்து, முதலாளி-ஊழியர் உறவாக மட்டுமின்றி குரு-சீடன் பிணைப்பாக வலுப்பெற்றது.

ஆரம்ப வாழ்க்கையும் அரசியல் பின்னணியும்
தனது அரசியல் வாழ்க்கையை இளைஞராக, ஜே.வி.பி.யின் மூலக் குழுவின் அங்கத்தினராக ஆரம்பித்த அவர், பின்னர் ‘பொடி அதுல’ என்று அழைக்கப்பட்ட விக்டர் ஐவன் ஆவார். எரிகுண்டு தயாரிக்கும் ஒரு தோல்வியுற்ற முயற்சியில் தனது கையை இழந்த அவர், பல ஆண்டுகள் அரசியல் கைதியாகக் கழித்தார். இந்தச் சிறைக்காலத்தை, இளம் செயற்பாட்டாளர்கள் 1971 எழுச்சி பற்றி தங்களுக்குள் விமர்சன ரீதியாகப் பேசிக்கொண்ட ஒரு வகைப் 'பல்கலைக்கழகமாக' அவர் அடிக்கடி விவரித்தார். இந்த அனுபவங்களே அவரைப் பத்திரிகைத் துறையில் நுழைய வழிவகுத்திருக்கலாம். அவரது பார்வையில் "உண்மை வெளிப்பட வேண்டும்" என்ற உறுதியான நோக்கம் எப்போதும் தெளிவாக இருந்தது. உடல் அங்கவீனம் இலக்குகளுக்குத் தடையல்ல என்பதை அவரது வாழ்க்கையே நிரூபித்தது. தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை அளவிடற்கரியது.

இலாபமா? சமூகத் தேவையா?
அவருடன் பணியாற்றியபோது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அவர் ஒருபோதும் "இந்தச் செய்தியால் தனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டு எழுதவில்லை. "இந்தச் செய்தி சமூகத்திற்கு என்ன தேவை?" என்ற கேள்வியே அவரது தொடக்கப் புள்ளியாக இருந்தது. அரசியல், நிர்வாகம், அதிகார அமைப்புகள் தொடர்பான செய்திகள் பிரபலத்துக்காக எழுதப்படும் சூழலில், விக்டர் ஜவன் தனது கவனத்தை மனிதர்களின் வாழ்வில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களிலேயே குவித்தார். ஒரு தொழிலாளி, ஒரு புறக்கணிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பம், ஒரு அநியாயத்திற்கு உள்ளான குடிமகன் – இவர்களின் கதைகளே அவரது பத்திரிகையின் உயிராக இருந்தன

நீதித்துறை மீதான துணிச்சலான விமர்சனம்
அவர் ஏற்படுத்திய தாக்கங்களில் மிகப் பெரியது இலங்கையின் நீதித்துறை மீதான அவரது துணிச்சலான விமர்சனமாகும். அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவால் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ (டோனி) பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட அநீதியான சிறைத்தண்டனைக்கு எதிரான முக்கிய விமர்சகர்களில் விக்டர் ஜவனும் ஒருவர். தனது வழக்கை விசாரிப்பதில் இருந்து பிரதம நீதியரசர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று ஆட்சேபித்தமைக்காக, டோனிக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு, உச்ச நீதிமன்றம் டோனியின் மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்தது.

விக்டர் ஜவனுக்கும் சரத் என். சில்வாவுக்கும் இடையிலான மெய்நிகர் போர், 'ராவய' பத்திரிகையின் ஆசிரியராக அவர் நடத்திய போராட்டங்களை அறிந்தவர்களிடையே ஒரு புராணக்கதையாக நிலைத்துள்ளது. நீதவான் ஒருவர், தனது அறையிலேயே ஒரு கைதியின் மனைவியைப் பலாத்காரம் செய்த சம்பவத்தையும் அவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். இந்தக் குற்றம் குறித்து புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் (Unfinished Struggle) "நோனிமி அரகலய" (2003) என்ற திரைப்படத்தையும் எடுத்தார். இந்த வழக்குகள் அனைத்தையும் அவர் ஆவணப்படுத்தி, புத்தகங்களாக வெளியிட்டார்.

ஊடகம் – ஒரு தொழில் அல்ல; ஒரு பொறுப்பு
ஊடகவியலாளர், எழுத்தாளர், ஊடக சுதந்திரம் மற்றும் நீதித்துறை சுயாதீனத்திற்கான போராளியாக வரலாற்றில் அவரது முத்திரை அழியாமல் பதிவாகி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் அரிது. அத்தகைய வெற்றிடங்களை நிரப்பவும் முடியாது.

விக்டர் ஜவனின் ஊடகப் பணியின் மையமாக மூன்று அம்சங்கள் நிலைத்திருந்தன:
•    ஜனநாயகம்: வாக்குப்பதிவு மட்டுமல்ல; மக்கள் கேள்வி கேட்கும் உரிமை, தகவல் பெறும் உரிமை, உண்மையை அறியும் உரிமை ஆகியவையே ஜனநாயகத்தின் அடிப்படை.
•     ஊடக சுதந்திரம்: விருப்பமானதை எழுதும் சுதந்திரம் மட்டுமல்ல; அதிகாரத்திற்கு எதிராக நிற்கும் சுதந்திரம். 
•     சமூக நீதி: அரங்குகளில் பேசப்படும் சொல் மட்டுமல்ல; அடித்தள மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க வேண்டிய இலக்கு.
அவரது செய்திகளில் அதிகாரம் கொண்டவர்களின் கருத்துக்களைவிட, அதிகாரம் இல்லாத மக்களின் குரலே பிரதானமாக இருந்தது. ஒரு செய்தி உண்மை என்றாலே போதாது; அது மனிதநேயமாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டம், அவர்களின் மரியாதை, அவர்களின் பாதுகாப்பு – இவை அனைத்தும் அவரது செய்தி எழுத்தில் முக்கிய இடம் பெற்றன.                                                                                       
ஒரு தொலைநோக்குப் பார்வையாளர்                                                                                        புலனாய்வுப் பத்திரிகையை இலங்கைக்கு, குறிப்பாகச் சிங்கள மொழிக்குள் அறிமுகப்படுத்திய முதன்மையான பத்திரிகையாளர்களில் ஒருவர் விக்டர் ஜவன். இலங்கையின் பொருளாதாரம் விரைவாகச் சரியும் என முன்னறிவித்து எச்சரித்தவர். அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். குறைந்தது மூன்று தேர்தல்களில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 'ராவய' பத்திரிகை, மிகப்பெரிய அளவிலான காணாமல் ஆக்கப்படல்களை அம்பலப்படுத்தும் பங்கை ஆற்றியது. இனப் பிரச்சினையை இன ரீதியாக அணுகாமல், அதிகார குவிப்பு எவ்வாறு தேசிய இனங்களை ஒடுக்குகிறது, மொழி உரிமை மற்றும் காணி அதிகாரங்கள் பறிக்கப்படுவது குறித்து அவரது எழுத்துக்கள் தென்னிலங்கை மக்களிடையே தெளிவை ஏற்படுத்தின. நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்குப் பதிலாகப் பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் விடயத்தில் ஆர்வமுடன் செயலாற்றினார்.

இளம் ஊடகவியலாளர்களுக்கான பாடம்
இன்றைய இளம் ஊடகவியலாளர்களுக்குத் தொழில்நுட்ப வசதிகள் அதிகம். புதிய தளங்கள், புதிய வடிவங்கள், புதிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஒரு விஷயம் மட்டும் எந்தக் காலத்திலும் மாறக்கூடாது – மனசாட்சி. இந்த மனசாட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கு, விக்டர் ஜவனின் ஊடகப் பயணம் ஒரு நடைமுறைப் பாடமாக நிற்கிறது. ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த இளம் பரம்பரையினரும் புதிய கோணத்தில் உலகைப் பார்க்க வேண்டும். இவர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு கூட்டிணைந்த ஜனநாயகச் சமூகத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட வேண்டும். இன ரீதியான பிரச்சினைகளுக்கு ஊடகங்களும் ஒரு பிரதான காரணம். ஊடகங்கள் சமூகத்துக்குச் சரியான செய்திகளைச் சொல்லுமானால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இந்த 21 ஆண்டுகள் அவருடன் பயணித்தது ஒரு தொழில்முறை அனுபவமாக மட்டுமல்ல; ஒரு மனிதராக வளர உதவிய பயணமாகவும் அமைந்தது. செய்தி எழுதுவது மட்டுமல்ல; சமூகத்தைப் புரிந்துகொள்வது, மனிதர்களை உணர்வது, அதிகாரத்தை விமர்சிப்பதோடு மனிதத்தையும் பாதுகாப்பது – இந்தப் பண்புகளை அவர் தனது செயல்களால் கற்றுத் தந்தார். பொய்கள் வேகமாகப் பரவும் காலத்தில், உண்மை மெதுவாக நகர்கிறது. அந்த மெதுவான உண்மையின் பக்கமே நீண்ட காலமாக விக்டர் ஜவன் நின்றார். அவர் ஒரு ஊடகவியலாளர் என்பதற்கும் அப்பால், ஒரு சமூக மனசாட்சியாக, இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டியாக, மற்றும் உண்மைக்கான போராளியாக விளங்கினார்.

முடிவாக
இன்று அவர் இல்லை. ஆனால், ஊடகத்துறையில் மட்டுமல்ல, என்னைப் போன்று அவரால் வார்த்தெடுக்கப்பட்ட ஏராளமான மனிதர்களின் இதயங்களில் அவர் உயிருடன் இருக்கிறார். "வேலை செய்ய விருப்பமா?" என்று கேட்ட அந்தக் கணம், என் வாழ்க்கையின் பொன்னான தருணம். அன்று தொடங்கிய பயணம் எனக்கு ஒரு தொழிலை மட்டும் தரவில்லை; ஒரு வாழ்க்கை நெறியைக் கற்றுத் தந்தது.
விக்டர் ஜவன் ஒரு ஊடகவியலாளர் மட்டுமல்ல; அவர் ஒரு சமூக மனசாட்சி. ஒரு தலைமுறைக்கான வழிகாட்டி. உண்மையை எழுதுவது எளிதல்ல. ஆனால் உண்மையை விட்டுவிடாமல் எழுதுவதுதான் ஒரு உண்மையான ஊடகவியலாளரின் அடையாளம். அந்த அடையாளத்தைத் தனது முழு வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர்களில் ஒருவராக, விக்டர் ஜவன் இலங்கை ஊடக வரலாற்றில் தனித்த இடம் பெற்றுள்ளார்.
இவை ஒரு அசாதாரண வாழ்க்கை குறித்த சில சிறிய குறிப்புகள் மட்டுமே. இலங்கை வரலாற்றில் மிகவும் இருண்ட காலங்களில் ஒன்றில் அவர் ஆற்றிய பங்கு குறித்து பல பிரதிபலிப்புகள் வெளிவரும். அவரது நினைவுகள் என்றென்றும் நம்முள் வாழும்.          

 தம்பிராசா  நடராசா