ஜப்பான் மற்றொரு போரை தூண்டுகிறதா?
ஜப்பான் மற்றொரு போரை தூண்டுகிறதா?
*சீன அரச ஊடக ஆசிரியர் தலையங்கத்தின் கடும் எச்சரிக்கை!
*ட்ரம்பை சந்திக்கிறார் ஜப்பான் பிரதமர்.
*இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் போர் மூழுமா?
அமெரிக்க தேசிய பாதுகாப்பு அறிக்கையை, ட்ரம்ப், 2025 நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின் உள்ளடக்கம் பல எச்சரிக்கைகளை வழங்கியாக எனது முன்னைய அரசியல் பத்தியில் எழுதப்பட்டிருந்தது.
குறிப்பாக, இந்தோ - பசுபிக் பிராந்தியம் அமெரிக்காவின் பிரதான இலக்கு என்ற தொனியில் எழுதியிருந்தேன்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் ஈரான் கப்பல் தாக்கப்பட்ட நாள் முதல், சீன ஊடகங்கள் இது பற்றிய விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.
ஜப்பான் சில நாட்களாக கனரக ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகளை எல்லைக்கு நகர்த்தி உள்ளது எனவும், படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் சீன அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) குற்றம் சுமத்தியுள்ளது.
குளோபல் ரைம்ஸ் இன்று வெள்ளிக்கிழமை எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் (Editiorial) ஜப்பான் படைகளை தயார் நிலையில் இருப்பது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் ஒரு தொகுதி அமெரிக்க ரொமாஹாக் (US Tomahawk) குரூஸ் ஏவுகணைகளை அமெரிக்கா, ஜப்பானுக்கு வழங்கவுள்ளது எனவும் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 19-ஆம் திகதி ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வோஷிங்டனில் சந்திப்பார் என ஏசியா ரைம்ஸ் (asiatimes) என்ற ஆங்கில ஊடகம் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்ற பெரிய - சிறிய நட்பு நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஜப்பான் அமெரிக்காவின் நட்பு நாடாகவே தெரிவதாகவும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.
நீண்ட காலமாக, ஜப்பான் தனது பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது. பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பது, கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குதல் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்தல் போன்ற ஏற்பாடுகளில் ஜப்பான் தீவிரமாக ஈடுபடுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்கு உதவுதல், அஸ்திரேலியாவுக்கான நாசகாரக் கப்பல்களை உருவாக்குதல், அமெரிக்க மற்றும் ஏனைய நாட்டு இராணுவங்களுடன் பயிற்சிகளை நடத்துதல் ஆகிய செயற்பாடுகளிலும் ஜப்பான் ஈடுபடுகிறது.
சில நாட்களாக அமெரிக்க - ஜப்பான் இயங்கு முறைமைகள், பற்றி சீனர்கள் விசனமடைவதாக ஏசியாரைமஸ் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கர்களை ஜப்பானியர்கள் தூண்டுகிறார்கள் என்ற தொனியிலும் அச் செய்தி அமைந்துள்ளது.
அதேநேரம், அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஜப்பானின் அரசியல் யாப்பு அமைதிக்கானது. ஆனால் அந்த யாப்பின் பிரிவு 9 இல் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிப்பாட்டில் இருந்து ஜப்பானின் சமீபத்திய செயற்பாடுகள் விலகிச் செல்வதாக குளோபல் ரைம்ஸ் ஆசிரியர் தலையங்கம் எடுத்துரைக்கிறது.
எண்பது வருடங்களுக்கு முன்னர், ஜப்பானின் இராணுவ ஆதிக்கம், ஆசிய மக்களுக்குப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அந்த அழிவின் அவமானங்களில் இருந்து விடுபட்டு வரும் நிலையில், 80 வருடங்களின் பின்னர் மீண்டும் உருவாகும் அமெரிக்க உறவு, அழிவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை தொனி, அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிகிறது.
அதாவது, ஜப்பான் மீண்டும் சூதாடத் துணிந்தால், விளைவு, அழிவுகரமான தோல்வியாக மட்டுமே இருக்கும் எனவும் சீன ஊடகம் தனது ஆவசத்தை வெளியிட்டிருக்கிறது.
ஆகவே, இச்செய்திகளை அவதானிக்கும் போது மூன்று விடயங்கள் தெரிகின்றன.
ஒன்று -- ஈரான் போர், சவுதி அரேபியாவை மையப்படுத்திய ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (Gulf Cooperation Council - GCC) நாடுகளின் பொருளாதார திட்டங்கள் - முதலீடுகளை அழிப்பது. அந்த முதலீடுகளை மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு வர தூண்டுவது.
இரண்டாவது -- ஜீசிசி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்திய சீன அபிவிருத்தி திட்டங்கள் - முதலீடுகளை இல்லாமல் செய்வது. சீனாவின் எதிர்கால திட்டங்களைத் தடுத்தல்.
மூன்றாவது-- ஈரான் போர் இறுதியாக இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் என்பது புலனாகிறது.
ஆக, ட்ரம்ப் நடத்தும் போரின் பின்னால் அரசியல் - பொருளாதார காய் நகர்த்தல்கள் இருக்கின்றன என்பது பட்டவர்த்தனம்.
இங்கே, ஈரான் இலக்கு அல்ல. ஆனால் ஈரான் போர் ஒரு கருவி மாத்திரமே. அமெரிக்காவின் இந்த உள் நோக்கம் இஸ்ரேலுக்கும் புரியாதது அல்ல.
ஆனால், ஈரான் வல்லரசாக இயல்பாகவே பிரகடனப்படுத்தப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா, இஸ்ரேல் தந்திரோபாயத்தில் விழுந்ததா அல்லது இஸ்ரேல், அமெரிக்க மூலோபாய நகர்வுக்குள் விழுந்ததா என்ற கேள்வி எழுகிறது.
அ.நிக்ஸன் பத்திரிகயாளர்
Editor