பௌத்த குருமார் வேடமா? மூடிமறைப்பா?
பௌத்த குருமார் வேடமா?
* பொலிஸ் ஊடகப் பிரிவு சொல்வது என்ன?
* 22 பேரையும் 7 நாள் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு...
* மகாநாயக்க தேரர்கள் கண்டனம்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான 22 நபர்களும் உண்மையான பௌத்த குருமார்களா, அல்லது விகாரைகளின் பெயர்களைப் பயன்படுத்தி போலி வேடமிட்டுச் சென்றார்களா என்பது தொடர்பாக விசாரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனால், இப் பாரிய போதைப்பொருள் கடத்தல் திட்டத்தை வழி நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், ஒரு பௌத்த குரு என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், கம்பஹா, மீகஹவத்தை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதான, இந்த பௌத்த குருதான், விமான ரிக்கெட் மற்றும் பயணச் செலவுகளை ஒரு "நிதியுதவி வழங்குநர்" (Sponsor) ஒருவர் ஊடாக ஏற்பாடு செய்துள்ளார் என விசாரணை நடத்தும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (Police Narcotics Bureau - PNB) விசாரணைகளை நடத்துவதாக நியூஸ் வயர் (NewsWire) செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பேரும் "பௌத்த குரு வேடத்தில் இருந்த நபர்கள்" (individuals appearing to be monks) என்று பொலிஸாரின் முதற் கட்ட விசாரணை அறிக்கை கூறுகிறது.
22 சந்தேகநபர்களையும் மே மாதம் 3 ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதானவர்கள்,19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், அம்பாறை, ஹோரண, கொழும்பு போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைதான 22 பேரும் உண்மையான பௌத்த குருமாராக இருந்தால், அவர்கள் முறைப்படி அந்தஸ்து நீக்கம் (Defrocked) செய்யப்படுவார்கள் எனவும் விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கைதான ஒவ்வொரு நபர்களும், 5 கிலோகிராம் போதைப்பொருளை பயணப் பொதிகளின் இரகசிய அறைகளில் (False walls) மறைத்து வைத்திருந்தனர்.
பாடசாலை உபகரணங்கள் - இனிப்புப் பெட்டிகளுக்குள் மறைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, தாய்லாந்திலிருந்து வந்த 22 பேரும், 110 கிலோகிராம் (242 பவுண்ட்) எடையுள்ள 'குஷ்' (Kush) மற்றும் 'ஹாஷ்' (Hashish) வகை போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
இந்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் (ரூ.110 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய 'குஷ்' போதைப்பொருள் தொகை என விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, கைதானவர்கள் பௌத்த குருமார் எனவும் ஆனால், சில பௌத்த அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, போலியான பௌத்த குருமாராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கியதாகவும் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.
மகாநாயக்க தேரர்கள் இன்று விடுத்த விசேட கூட்டு அறிக்கையில், "பௌத்த குரு வேடமிட்டவர்கள்" (monk impersonators) பௌத்த மதத்தின் புனிதத்தைப் பாதிக்கும் வகையில் ஈடுபட்டுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்ப் ரூடே (Gulf Today) பிரான்ஸ் செய்தி நிறுவனமான ஏப்பி (AFP) பிபிசி (BBC) போன்ற சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் 22 பேர் கைதான செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor