ஈரான்-இஸ்ரேல் மோதல்: ஆன்மிக அதிகாரமும் புவிசார் அரசியலும்
ஈரான்-இஸ்ரேல் மோதல்
ஈரானின் உச்ச ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ள செய்தி உலகையே அதிர வைத்துள்ளது. எண்பத்தேழு வயதான இந்த ஆன்மிகத் தலைவரின் மறைவு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு வெறும் ஒரு தலைவரின் மரணம் மட்டுமல்ல; அது ஈரானின் அரசியல் கட்டமைப்பு, அதன் ஆன்மிக அதிகாரம், மேற்குலகுடனான அதன் உறவு, மற்றும் பிராந்திய புவிசார் அரசியல் ஆகிய அனைத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியமான திருப்புமுனையாகும்.
ஈரானின் அரசியல் கட்டமைப்பு: ஜனாதிபதியும் ஆன்மிகத் தலைவரும்
ஈரானில் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நாட்டின் முழு அதிகாரமும் உச்ச ஆன்மிகத் தலைவரிடமே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 1979ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், ஜனாதிபதி அரசுத் தலைவராக இருந்தாலும், அனைத்து முக்கிய முடிவுகளுக்கும் ஆன்மிகத் தலைவரின் ஒப்புதல் அவசியம். இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள், மற்றும் முக்கிய கொள்கை வகுப்புகள் அனைத்தும் ஆன்மிகத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
ஆயத்துல்லா கொமேனி: பெயரா பட்டமா?
'ஆயத்துல்லா கொமேனி' என்பது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் மட்டுமல்ல; அது ஈரானின் உயர் மதகுருமார்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய பட்டமாகும். 'ஆயத்துல்லா' என்றால் 'இறைவனின் அடையாளம்' என்று பொருள். 1979ம் ஆண்டு புரட்சியின் போது, ரூஹுல்லா மூசாவி என்ற மதகுரு மக்களைத் திரட்டி ஷாவின் ஆட்சியை வீழ்த்திய போது, அவருக்கு மக்கள் 'ஆயத்துல்லா' என்ற பட்டத்தை வழங்கி மரியாதை செய்தனர். அன்று முதல் அவர் ஆயத்துல்லா கொமேனியாக அறியப்பட்டார். 1989ம் ஆண்டு அவர் மறைவுக்குப் பின் வந்த ஒவ்வொரு ஆன்மிகத் தலைவரும் 'ஆயத்துல்லா கொமேனி' என்றே அழைக்கப்படுகிறார்கள்.
வரலாற்றுப் பின்னணி: 1979 புரட்சி
1979ம் ஆண்டுக்கு முன்னர், ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி செய்த ஷா, மேற்கத்தியமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றினார். ஆனால் அவரது ஆட்சி ஊழலும் சுரண்டலும் நிறைந்ததாக இருந்தது. மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டன. இந்த சூழலில், ரூஹுல்லா மூசாவி என்ற மதகுரு மக்களை ஒன்றுதிரட்டினார். பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், மதப் பிரமுகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்சியில் ஈடுபட்டனர். இறுதியில் ஷா நாடு கடத்தப்பட்டார், ஈரானில் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது.
அணு ஆயுதம் குறித்த ஃபத்வா
ஈரானின் ஆன்மிகத் தலைவர்கள் அணு ஆயுதம் குறித்து தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். சில வருடங்களுக்கு முன்பு, ஆயத்துல்லா கொமேனி ஒரு அதிரடி ஃபத்வாவை (மார்க்கத் தீர்ப்பு) வெளியிட்டார். அதில், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதும், அவற்றைத் தீமையான நோக்கில் பயன்படுத்துவதும் இஸ்லாத்தில் ஹறாம் (தடுக்கப்பட்டது) என்று அறிவித்தார். இந்த ஃபத்வா, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக மேற்குலகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடி மறுப்பாக அமைந்தது. ஆயினும், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்கள் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்தன.
இஸ்ரேலின் அகங்காரமும் அமெரிக்காவின் தூண்டுதலும்
"பிராந்தியத்தில் என்னைத் தவிர யாருக்கும் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. நான் மட்டுமே சக்தி வாய்ந்தவனாக இருக்க வேண்டும். எனக்கு எந்த ஒப்பந்தமும் கட்டுப்படுத்த முடியாது" என்ற நிலைப்பாட்டை இஸ்ரேல் கொண்டுள்ளது. இந்த அகங்காரமே ஈரானுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளுக்கு அடிப்படை. இதற்கு அமெரிக்கா எப்போதும் போல் முழு ஆதரவு வழங்குகிறது. ஜனநாயகம், மனித உரிமைகள், சுதந்திரம் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி ஈரானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த முயல்கிறது.
அமெரிக்காவின் இரட்டை வேடம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக சிகாமணியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, உலகெங்கிலும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறது. ஆனால் அதன் அணுகுமுறையில் அப்பட்டமான இரட்டை வேடம் வெளிப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஜனநாயகமில்லை; அமீரகத்தில் கருத்துச் சுதந்திரமில்லை; குவைத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன. ஆனால் இவை குறித்து அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் ஈரானில் மட்டும் ஜனநாயகம் தழைக்க வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இது அவர்களின் மூலோபாய நலன்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் கொள்கையையே வெளிப்படுத்துகிறது.
பொருளாதாரத் தடைகளும் உள்நாட்டுக் கொந்தளிப்பும்
அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அந்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன. பணக்கார எண்ணெய் வளம், வளமான கலாசாரப் பின்னணி, கல்வியறிவு பெற்ற மக்கள் தொகை ஆகியவற்றைக் கொண்ட ஈரான், இன்று பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இந்த சூழலைப் பயன்படுத்தி, மக்களைத் தூண்டி அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது. இது அந்நாட்டின் இறையாண்மையில் நேரடித் தலையீடாகும்.
ஒப்பீட்டுப் பார்வை: லிபியாவின் சோகம்
செல்வச் செழிப்பில் திளைத்த லிபியா, ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குலகமும் நடத்திய தலையீட்டால் எவ்வாறு மக்கள் வாழ முடியாத பாழ் நிலமாக மாறியது என்பதை உலகம் பார்த்தது. முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்ட பின்னர், லிபியா இன்று பல்வேறு பிரிவுகளாக சிதறுண்டு, உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கிறது. இதே கதி ஈரானுக்கும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவே அமெரிக்காவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
தாக்கத்தின் தீவிரம்: ஈரானின் எதிர்வினை
இதர அரபு நாடுகளின் கோழைத்தனமான ஆட்சியாளர்களைப் போல அல்லாமல், ஈரான் தனது இறையாண்மைக்காக தொடர்ந்து போராடி வருகிறது. ஆன்மிகத் தலைவரின் மரணம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தங்களின் அடுத்த ஆன்மிகத் தலைவரை அவர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த போரின் போதே, தனக்குப் பின்னர் யார் பொறுப்பேற்பது என்பது குறித்த திட்டத்தை மறைந்த தலைவர் வகுத்து வைத்திருந்தார். எனவே அங்கு அதிகார வெற்றிடம் ஏற்பட வாய்ப்பில்லை. கொமேனியை மீறி ஈரானின் அரச இயந்திரத்தில் எந்த இலையும் அசையாது என்பது நிரூபணமான உண்மை.
பிராந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்
ஈரான்-இஸ்ரேல் மோதலின் பாதிப்பு இரண்டு நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படவில்லை. அது முழு மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும், அதன் வழியாக உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். நேற்று முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளன. பிரதான போக்குவரத்து மையமான டுபாய் விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கை வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை போன்ற பொருளாதார ரீதியாக மீள எழும்பும் நாடுகளுக்கு இந்த யுத்தம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுலாத் துறை, ஏற்றுமதி, இறக்குமதி, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் அனைத்தும் பாதிக்கப்படும். எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், வர்த்தகச் சமனிலை சரிவு போன்ற பல்வேறு பாதிப்புகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்.
டொனால்ட் ட்ரம்பின் பங்கு
மூளை பிறழ்வு கொண்ட கிழடு என்று விமர்சிக்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது வரிக் கொள்கைகள் மூலம் ஏற்கனவே உலக வர்த்தக சமனிலையை சிதைத்து வந்தார். இந்நிலையில், 87 வயதான ஈரானின் ஆன்மிகத் தலைவரை கொன்றதை ஒரு பெரும் வெற்றியாக அவர் கருதுகிறார். இது அவரது தனிப்பட்ட அகங்காரத்தின் வெளிப்பாடாகும்.
முடிவு
ஈரானின் ஆன்மிகத் தலைவர் மரணம் மத்திய கிழக்கில் புதியதொரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஈரானின் பதிலடி எவ்வாறு இருக்கும், இஸ்ரேல் எந்த அளவுக்கு மேலும் செல்லும், அமெரிக்கா எந்த வகையில் தலையிடும் என்பதைப் பொறுத்து இந்த மோதலின் தீவிரம் அமையும். ஆனால் ஒன்று உறுதி: ஈரான் தனது இறையாண்மைக்காக தொடர்ந்து போராடும். தனக்கென ஓர் அடையாளத்தையும் சக்தியையும் கொண்ட இந்த நாடு, மேற்குலகின் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கிறது. இந்த மோதல் யாரால் நிறுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இலங்கை போன்ற சிறு நாடுகள் இந்த யுத்தத்தின் பின்விளைவுகளை சந்திக்க தயாராக வேண்டிய நேரம் இது.
Editor