காரைக்குடியில் சீமான் : கணிக்க முடியாத அரசியல் களம்

காரைக்குடியில் சீமான் கணிக்க முடியாத அரசியல் களம்

காரைக்குடியில் சீமான் : கணிக்க முடியாத அரசியல் களம்

சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இந்த முறை கடுமையான நான்குமுனை போட்டியால் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால், இத்தொகுதி “நட்சத்திரத் தொகுதி”யாக மாறியுள்ளது.

காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் மருத்துவர் பிரபு உள்ளிட்டோர் களமிறங்கியுள்ள நிலையில், வெற்றி யாருக்கு என்பதில் தெளிவான கணிப்பு எதுவும் இல்லை.

சீமான் மீது கவனம்

முந்தைய தேர்தல்களில் வெளிமாவட்டங்களில் போட்டியிட்ட சீமான், இந்த முறை தனது சொந்த மாவட்டத்தில் களம் காண்கிறார். ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கிய நாம் தமிழர் கட்சி, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் கட்சியின் வேட்பாளர் 23,872 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த முறை சீமான் போட்டியிடுவதால் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என கட்சியினர் நம்புகின்றனர். ஆனால் கூட்டணி இல்லாமை மற்றும் சில கொள்கை நிலைப்பாடுகள் அவருக்கு சவாலாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மாங்குடி – சாதனைகளும் சவால்களும்

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி, மினி விளையாட்டரங்கு, டைடல் பூங்கா போன்ற திட்டங்களை கொண்டு வந்தது அவரின் பலமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், திமுகவினரின் அதிருப்தி மற்றும் சில பகுதிகளில் வளர்ச்சி குறைவு போன்றவை அவருக்கு எதிர்மறை அம்சங்களாகக் கூறப்படுகின்றன.

தேர்போகி பாண்டி – கூட்டணியின் பலம்

அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, கடந்த தேர்தலில் 44,864 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் பாஜக வேட்பாளர் பெற்ற 54,365 வாக்குகளுடன் சேர்த்து பார்க்கும்போது, இந்த முறை கூட்டணி பலம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.

ஆனால், முந்தைய அனுதாப வாக்குகள் இம்முறை கிடைக்காது என எதிரணி தரப்பினர் வாதிடுகின்றனர்.

பிரபு – புதிய முகம், புதிய முயற்சி

தவெக வேட்பாளர் மருத்துவர் பிரபு, ஓராண்டாக மக்கள் தொடர்பில் ஈடுபட்டு வருகிறார். அவரது குடும்ப பின்னணி மற்றும் கட்சி தலைவர் விஜய்யின் பிரச்சாரம் அவருக்கு ஆதரவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும், கூட்டமாகும் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

காரைக்குடி தொகுதியில் நான்குமுனை போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி பலம் மற்றும் பலவீனங்கள் காணப்படுகின்றன. இதனால், இறுதி முடிவு வரை கணிக்க முடியாத தொகுதியாக காரைக்குடி மாறியுள்ளது.