தமிழக சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்களும் ஒரே நாளில் மனுதாக்கல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல்
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் வேட்புமனுக்கள் தாக்கல் தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக என இரு முக்கிய கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தேர்தல் களத்தில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், கடந்த முறை 8% வாக்குகளைப் பெற்று மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, இம்முறையும் எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிடுகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவித்தார். அந்த வகையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அக்கட்சியின் அனைத்து 234 வேட்பாளர்களும் (117 ஆண்கள், 117 பெண்கள்) ஒரே நாளில் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வரும் நாம் தமிழர் கட்சி தங்களின் செயல்பாடுகளில் ஒவ்வொன்றிலும் தங்களது கொள்கைகளை வெளிப்படுத்துவது வழக்கம். மேலும் சமீபத்தில் இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து “மரங்களின் மாநாடு, மாடுகளின் மாநாடு, மலைகளின் மாநாடு, கடலம்மா மாநாடு” உள்ளிட்ட நூதன மாடுகளை நடத்தி அக்கட்சி கவனம் பெற்றது.
மேலும், விவசாயம் மற்றும் கிராமிய வாழ்வாதாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல வேட்பாளர்கள் நூதன முறையில் மனுதாக்கலில் ஈடுபட்டுள்ளனர். சங்கரகிரி தொகுதி வேட்பாளர் நித்யா அருள் ஏர்க்கலப்பையைச் சுமந்தபடியும், மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் கையில் வேலுடனும், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சத்யா தேவி மாட்டுவண்டியில் ஏர்க்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாவுடனும் சென்று மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தனித்துவமான மனுதாக்கல் நிகழ்வுகள் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றுள்ளதோடு, வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் எவ்வாறு அமையும் என்பதற்கான எதிர்வுக் கூறாகவும் அமைந்துள்ளது.