“மக்கள் ஆணையை குழப்ப எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” – டில்வின் சில்வா
“மக்கள் ஆணையை குழப்ப எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” –
எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தவும், அரசின் செயற்பாடுகளுக்கு தடையாக செயல்படவும் முயற்சித்து வருவதாகவும், அதற்கு எதிராக மக்களின் உண்மையான ஆற்றல், விருப்பம் மற்றும் மக்கள் வழங்கிய அதிகாரம் எங்கு உள்ளது என்பதை நாட்டுக்கும் உலகிற்கும் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணயின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (29) பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
சமீபத்தில் ஏற்பட்ட “டிட்வா” போன்ற கடுமையான இயற்கை பேரழிவுகளின் போது அரசாங்கம் திறம்பட செயல்பட்டதாகவும், அதனை மக்கள் நன்றாக அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களை இலங்கை அரசு விரைவாக கையாள முடிந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஊழல் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, வரி வசூலை முறையாக மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் புரிதல் இழந்த நிலையில் இருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் போராட்டத்தின் மூலம் பதவி விலகச் செய்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் அரசை கவிழ்க்கலாம் என்ற தவறான எண்ணத்தில் சிலர் செயற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
வீட்டு முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தாலே அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற நிலை தற்போது இல்லை என்றும், மக்கள் இத்தகைய தவறான அரசியல் முயற்சிகளை ஏற்கமாட்டார்கள் என்பதையும் தெளிவாக காட்டி வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு நிலைநிறுத்தப்பட்டு, உலக அரங்கில் மரியாதைக்குரிய நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், பழைய அரசியல் நடைமுறைகளை மீண்டும் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், அந்த முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மே தினக் கொண்டாட்டங்கள் குறித்து அறிவிப்பு
எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, இம்முறை கொழும்பிற்கு பெருமளவு மக்களை அழைத்து வருவதில்லை என தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என்று டில்வின் சில்வா தெரிவித்தார்.
இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 21 மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மே தினக் கூட்டம் நடைபெற்றதை நினைவுகூர்ந்த அவர், இம்முறை எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக நிகழ்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் நீண்ட தூர பயணங்களால் ஏற்படும் எரிபொருள் செலவை குறைத்து, அரசாங்கத்தின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இம்முறை மே தினம் “ஜனநாயத்திற்கான மக்கள் ஆற்றல்” என்ற தலைப்பில் கொண்டாடப்படும் என்றும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Editor