அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு போரும் பகிரங்கப்படும் உண்மைகளும்!
அமெரிக்க - இஸ்ரேல் போர்
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு போரும். பகிரங்கப்படுத்த உண்மைகளும்!
*ஈரான் போரில் கிளஸ்டர் குண்டுகள்
* கிளஸ்டர் தடை ஒப்பந்தத்தில் அமெரிக்கா - ஈரான் -ரசியா கைச்சாத்திடவில்லை.
*முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கியது யார்?
* சர்வதேச போர் விதிகளை பின்பற்றமாட்டோம் என்கிறார் ட்ரம்ப்.
ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்க, இஸ்ரேல் அரசுகள் கூட்டாக நடத்தும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா- ரசிய அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஈரான், போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள், குண்டுகள் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பல கேள்விகளை முன்வைத்துள்ளன.
இப் போரில் சீன – ரசிய நாடுகள் அமைதிகாக்கின்றன என்று சொன்னாலும், ஈரான் பயன்படுத்தும் ஆயுதங்களின் பின்னால் அல்லது அந்த ஆயுதங்கள் - குண்டுகள் உற்பத்தியின் மூளையாக சீனா – ரசிய நாடுகள் இருக்கின்றன என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு.
குறிப்பாக ட்ரோன்களை (Drone) வழங்கியது ரசியா தான். ஆனாலும் ஈரான் அணு ஆயுத உற்பத்தியிலும், நவீன ரக ஆயுதங்களை கையாள்வதிலும் ஆற்றல் மிக்க நாடு என்பது உலகம் அறிந்த உண்மை தான்.
ஈரான் என்றொரு நாட்டை அழிக்க வேண்டும் என அமெரிக்கா கங்கணம் கட்டியமைக்கும் அதுவே பிரதான காரண காரியம். இப்பின்னணியில் போர் ஆரம்பித்தும், அதாவது அதி உயர் தலைவர் கொல்லப்பட்டபோது, ரசியா ஈரானுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவி செய்யாதது ஏன் என்று கேள்வி எழுந்தது. இதற்கு ரசியா பதில் வழங்கியுமுள்ளது.
இஸ்ரேல் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ஈரான் ஷாஹெத் ரக ட்ரோன்களை (Shahid-class drone) பயன்படுத்தி வருகிறது. மிகக் குறைவான உயரத்தில் பறந்து இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் இந்த வகை ட்ரோன்கள் ராடரில் சிக்குவதில்லை.
ரசிய ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) இது குறித்து விளக்கம் தருகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் ரசியாவிடம் எந்த இராணுவ உதவியையும் கோரவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ரசியாவிடம் இருந்து எந்த ஒரு இராணுவ உதவியும் கோர வேண்டிய அவசியம் ஈரானுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ரசியா - ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒத்துழைப்பு குறித்த முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தன.
ஆனால், அது இராணுவ ஒப்பந்தம் அல்ல. ஆனாலும் ரசியா - ஈரான் ஆகிய இரு நாடுகளும் இராணுவ கூட்டுச் செயற்பாடுகள் பற்றி தேவைப்படும் நேரத்தில் பேசப்படும் என்பது தொடர்பான இணக்கப்பாடு ஒன்று உள்ளது.
இப் பின்புலத்தில் தற்போது ஈரான் அரசுக்கு ரசியா மறைமுக ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைளை வழங்கி வருவதாக அக்சியோஸ் (Axios) என்ற ஆங்கில செய்தித் தளம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஆனால் ரசிய ஊடகங்கள் இந்த இராணுவ ஒத்துழைப்பு அல்லது ஆயுத விநியோகங்கள் பற்றி எதுவும் வெளியிடவில்லை. ஆனால் ஈரான் ஆயுதங்களை கையாள்வதில் ஆற்றல் மிக்க நாடு என ரசிய ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன.
இப் பின்னணியில் ஈரான் பயன்படுத்தி வரும் வித்தியாசமான வெடிகுண்டுகள் பற்றி பல கேள்விகள் - சந்தேகங்களை இந்திய ஊடகங்கள் எழுப்பியுள்ளன. குறிப்பாக ரசியா மற்றும் சீனாவின் இரகசியத் தொடர்பாடல் இருக்குமோ என்ற சந்தேகங்கள் வலுப் பெற்றுள்ளன.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பற்றி அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலில், ஈரான் முதன் முறையாக கொத்துக் குண்டு எனப்படும் (Cluster Munitions) என்ற வகை குண்டுகளை பயன்படுத்தியது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி மத்திய இஸ்ரேலில் இத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த ஏவுகணை, 8 கி.மீ. சுற்றளவில் 20 குண்டுகளை வீசி தாக்கியது.
6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக ரொய்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்கப்பட்ட இடத்தில் இருந்து 7 கி மீற்றருக்கு மேல், இது ஏழு குண்டுகளாக பிரிந்து சென்று வெடிக்கக் கூடிய தன்மை கொண்டதாக ரொய்டர் செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் இதற்கு முன் 2025 ஜூன் மாதம் 2000 கி.மீ. வரம்புள்ள 'ஸோல்ஃபாகர்', 'காதர்', 'கோரம்ஷார்' (Zolfaghar, Qader and Khorramshahr Missiles) ஏவுகணைகளில் இவற்றைப் பயன்படுத்தியுள்ளது.
இதில் 'கோரம் ஷார்' 80 குண்டுகளைக் கொண்டு செல்லக் கூடியதாகும்.
உக்ரெய்ன் போரின் போது ட்ரோன் பரிமாற்றங்கள் மூலம் ரசியா ஈரான் உறவுகள் வலுப்பெற்றன. ஈரானிடம் ரசிய கேம்எம்ஜியு (KMGU) மற்றும் கொத்தாக வெடித்துச் சிதறும் கிளஸ்டர் குண்டு ஏவுகணைகள் உள்ளன.
அதேநேரம், சீனாவின் பட்டுப்பாதை திட்டதுடன் (Belt and Road Initiative - BRI) ஈரானுடன் இராணுவத் தொடர்புகள் இருக்கிறது. இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் ஈரானின் 'குவாடர் எஸ் எஸ்' (Qadr S) கொத்துக் குண்டு திறனுடன் இந்திய ஊடகங்கள் ஒப்பிட்டு அவதானிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள சூழலில், ஏனைய நாடுகளிடம் இருந்து ஈரான் ஆயுதங்களைப் பெற வாய்ப்பில்லை எனவும், சீன - ரசிய நாடுகள் மறைமுகமாக ஒத்துழைப்பதாகவும் ரைம்ஸ் ஒப் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால், குளோபல் ரைம்ஸ் (globaltimes) என்ற சீன அரச ஊடகம், ஈரான் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள்- குண்டுகள் பற்றி எந்த ஒரு விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை.
அதேநேரம், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தும் போரை சீனா – ரசியா ஆகிய இரு நாடுகளும் பார்வையாளர்கள் என்ற தொனியில் இருக்கின்றன.
ஆனாலும், அமெரிக்கா போரை நடத்தும் முறைமை சர்வதேச சட்ட விதிகளுக்கு மாறானது என்ற கண்டனங்களை சீன ஊடகங்கள் முன்வைக்கின்றன.
ஆனால் கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்துவது பற்றி, சீன ஊடகங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
2008 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் 111 நாடுகள் கிளஸ்டர் எனப்படும் கொத்து குண்டுகளை தடை செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கைச்சாத்திடவில்லை.
2023 ஆம் ஆண்டு ரசிய - உக்ரெய்ன் போரில், உக்ரெய்ன் நாட்டுக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளை வழங்கியிருந்தது. இதனால் கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் அப்போது எழுந்தன.
ஆனால் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை கிளஸ்டர் குண்டுகள் எதனையும் பயன்படுத்தியதாக செய்திகள் வெளிவரவில்லை.
ஈரான் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழும் பின்னணியில் ரசியா மீது சந்தேகங்கள் எழுகின்றன.
எவ்வாறாயினும், சர்வதேச விதிகளின் பிரகாரம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த முடியாது.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் கொத்துக் குண்டுகள் என அழைக்கப்படும் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது.
போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களில் பலரும் அதற்கான ஆதாரங்களை முன்வைத்தனர்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை சபைக்கும் அது பற்றிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனாலும் இன்று வரையும் அந்த ஆதாரங்களை ஏற்க ஐ.நா. தயங்குகிறது.
முள்ளிவாய்க்கால் போருக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், இலங்கை அரசாங்கத்துக்கு அப்போது முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. அப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா நாடாளுமன்றத்தில் இந்த நாடுகளுக்கு நன்றியும் கூறியிருந்தார்.
ஆனால் இந்தியாவை விடவும், அமெரிக்காவே புலிகளுக்கு எதிரான போரை முன் நின்று நடத்தியிருந்தது.
இப்பின்னணியில் ரசியாவுடனான போரில் உக்ரெய்னுக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளை வழங்கியதாக சந்தேகம் எழுந்திருந்தது. இந்திய ஊடகங்கள் அந்த சந்தேகத்தை வெளியிட்டிருந்தன.
ஆனால், இப்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தும் கூட்டுப் போரில், ஈரான் கிளஸ்டர் குண்டுகளை இஸ்ரேல் நாட்டை தாக்கப் பயன்படுத்துவதாகவும், ரசியா அதனை வழங்கியிருக்கலாம் என்றும் இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றன.
முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில், ஈரான் - ரசியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது என கூறப்பட்டாலும், அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.
ஆனால் இப்போது அந்த கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக வெளிவரும் சந்தேகங்களும் உக்ரெய்னுக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளை வழங்கியதாக இந்திய ஊடகங்கள் எழுப்பும் விமர்சனங்களும் எதைப் பகிரங்கப்படுத்துகின்றன?
புலிகளுக்கு எதிரான போர் சாட்சியம் இன்றி நடத்தப்பட்டதாக 2010 ஆம் ஆண்டு, அமரர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் நடத்தும் போரும் சாட்சியங்கள் இன்றியே நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், சர்வதேச சட்டங்கள் - நியமங்கள் எதனையும் அமெரிக்கா பின்பற்றவே இல்லை. விதிகளுக்கு மாறான போர் என்று அக்சியேஸ் என்ற செய்தித் தளம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதேநேரம் ஈரானுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகள் எதுவும் பின்பற்றப்படாது என டொனால்ட் ட்ரம் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இப்பின்னணியில், அரசு அற்ற ஒரு இனமாக அரசியல் விடுதலை கோரிப் போராடிய புலிகள் இயக்கம் 2009 இல் அழிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இறைமை உள்ள அரசாக ஈரான் இருந்தாலும், அங்கு தாங்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைக்க அமெரிக்கா முற்படுகிறது. ஈராக் நாட்டிலும் 2003 ஆம் ஆண்டு இப்படித்தான் நடந்தது.
இந்த இடத்தில் சர்வதேசச் சட்டங்கள், சர்வதேச மனித உரிமைகள், அரசற்ற ஒரு தேசிய இனத்தின் மரபுரிமை அடையாளங்கள் போன்றவற்றை, இலங்கை போன்ற சிறிய அரசுகள், அமெரிக்கா போன்ற பெரிய வல்லரசு நாடுகளிடம் இருந்து எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை.
ஐ நா மற்றும் ஐநாவின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபை தொடர்பாக தமிழர்களுக்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டு வருகின்ற நம்பிக்கையீனங்களும் ஏற்புடையவை.
இந்த இடத்திலே தான், தனிநாடு கோரி போராடும் குர்திஸ் இன போராளிகள் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்தமை, அவர்களுடைய போரியல் அனுபவ அறிவின் பலவீனமாகும்.
2003 ஆம் ஆண்டு, ஈராக் அரசுக்கு எதிரான போரில், அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்பட்டவர்கள் தான் இந்த குர்திஷ் இன போராளிகள்.
“அரசியல் விடுதலை” என்ற ஒன்றைத் தவிர, விடுதலை இயக்கங்கள், யாராலும் பயன்படுத்தப்படக் கூடாது. யாருக்காகவும் பயன்படக் கூடாது.
அ.நிக்ஸன்.
பத்திரிகையாளர்
Editor