மத்திய கிழக்கு மோதல்களின் தாக்கம்: இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அவசியம் - ரணில் விக்கிரமசிங்க

மத்திய கிழக்கு மோதல்களின் தாக்கம்

மத்திய கிழக்கு மோதல்களின் தாக்கம்: இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அவசியம் - ரணில் விக்கிரமசிங்க

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடுவது முக்கியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது சிறப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்திய நாடுகள் மீது குண்டுவீச்சு நடத்துகின்றன. ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்குகிறது. நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் மூலம் அமெரிக்கா ஈரானிய கப்பலை மூழ்கடித்துள்ளது. இத்தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்காததால் அங்கீகாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து உரையாடி வருவதாகவும், ஆனால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இதுபோன்ற உரையாடல்கள் இல்லாததால் தேவையான ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி அரசியல், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். கொழும்பு பாதுகாப்பு உரையாடல் அமைப்பு இருந்தும் அரசியல் கண்ணோட்டத்தில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய விவகாரங்களில் இருந்து அமெரிக்கா விலகும் இந்த சூழலை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான ஒரு திட்டத்தை வகுக்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.