முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: உலக நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் – எலைன் பியர்சன்
முள்ளிவாய்க்கால் 17ஆவது நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் அனுசரிப்பு
2009ம் ஆண்டு மே மாதம், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி அனுசரிக்கப்பட்டு வரும் 17ஆவது நினைவேந்தல் நாள் இன்று (18.05.2026) முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை முதல் உணர்வெழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்:
"இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றைக் கோரி, உலக நாடுகள் இலங்கை அரசுக்குக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்."
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
"கடந்தகால கொடூரமான மீறல்களால் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்த தமிழ் மக்களுடன் தோளோடு தோள் நிற்பதற்கும், இந்தத் துயரமிகு தருணத்தை நினைவுகூருவதற்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இங்கே நேரில் நிற்பது மிக அவசியமானதாகும்.
இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். 17 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படவில்லை. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாது தவிக்கும் குடும்பங்கள், குற்றவாளிகள் ஒருநாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என இன்றும் நம்புகின்றனர்.
பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அவை மட்டுமே போதுமானதாக இல்லை. உலக நாடுகள் இணைந்து வலுவான சர்வதேச பொறிமுறைக்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தற்போதைய அரசு, ஆட்சிப் பீடமேறுவதற்கு முன்பு பொறுப்புக்கூறல் குறித்துப் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இதுவாகும். 17 ஆண்டுகளின் பின்னராவது ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இலங்கை வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயத்திலிருந்து நாடு முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அரசு இந்த விவகாரத்துக்கு முதன்மை முன்னுரிமை அளிக்க வேண்டும்." என்று எலைன் பியர்சன் உறுதியாகத் தெரிவித்தார்.
Editor