இலங்கையின் நடுநிலைமை சீர்குலைய இடமளிக்க முடியாது - ஜனாதிபதி
இலங்கையின் நடுநிலைமை சீர்குலைய இடமளிக்க முடியாது
சர்வதேச மோதலின் போது இலங்கை நடுநிலை வகித்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகள் இரு தரப்புக்கும் மறுக்கப்பட்டதன் மூலமே இந்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக உலக நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு நிலைமைகள் குறித்து பாராளுமன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பவற்றை நாம் எமது நடுநிலைமையைப் பாதுகாப்பதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். எனவே, எந்தவொரு அழுத்தத்தின் மத்தியிலும் இந்த நடுநிலைமை சீர்குலைய நாம் இடமளியோம்" என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தரப்பிற்குச் சார்பாகச் செயற்படுவதாகவும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றும் முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக நிகழ்வுகளை விளக்கிய அவர், கடந்த மாதம் 26 ஆம் திகதி ஈரானின் இரண்டு கப்பல்களை இலங்கைக் கடற்பரப்புக்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நல்லெண்ண விஜயமாக அந்தக் கப்பல்கள் வர விரும்புவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறினார்.
அந்தக் கோரிக்கைக்கான அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்த அதே மாலையில், அமெரிக்காவும் தனது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்களை மட்டால விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
"நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? நாம் மிகவும் தெளிவான முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. எமது நாட்டின் நடுநிலைமையைக் கருத்திற்கொண்டு, நாங்கள் அந்த இரண்டு தரப்பினருக்குமே அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை" என்று அவர் கூறினார்.
ஈரானியக் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்தால் ஒட்டுமொத்த நடுநிலைமையும் சீர்குலைந்திருக்கும் என்றும், ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்படுவதாகக் கருதப்படும் அல்லது மற்றைய தரப்பிற்கும் அனுமதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
"அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் மட்டால விமான நிலையத்திற்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் அருகாமையில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை" என்று அவர் முடித்துக் கூறினார்.