தையிட்டி விகாரை காணிகள் மீள ஒப்படைப்பு: 17ஆம் திகதி முதல் அளவீட்டு பணிகள்
தையிட்டி விகாரை காணிகள் மீள ஒப்படைப்பு:
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “மக்களின் காணி மக்களுக்கே” என்ற அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்கள், கடற்றொழில் அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கிடையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நீண்டகாலமாக நிலவி வந்த காணி உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தையிட்டி விகாரை காணிகளை மீட்கும் முயற்சியில் அரசு பல கட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, கொழும்பில் நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகளுடன் பலமுறை ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் காணிகளை உரிமையாளர்களிடம் மீள வழங்க வேண்டும் என்ற உறுதியான முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 17 காணி உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காணி எல்லைகளைத் தெளிவுபடுத்தி சரியான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்த கட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமான காணி அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள் நேரடியாக பங்கேற்று தமது காணி எல்லைகளைத் தெளிவாகக் காட்டி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அளவீட்டு பணிகள் நிறைவடைந்த பின்னர் ஒவ்வொரு காணிக்கும் துல்லியமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, உரிமை உறுதிப்படுத்தப்பட்டவர்களிடம் சட்டரீதியான முறையில் காணிகள் மீள கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்றும், காணி உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்பு அருகில் கிடைக்கப்போகிறது என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
Editor