அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் தகவலின்படி, கடந்த 4 நாட்களில் (ஏப்ரல் 10 முதல் 13 வரை) மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளன.
இதன் மூலம் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய தெரிவித்தார்.
அதிகபட்ச வருமானம் ஏப்ரல் 10 அன்று: அன்றைய தினம் மாத்திரம் 5 கோடி 98 லட்சத்து 15,450 ரூபா வருமானம்1,61,847 வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியுள்ளன
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியமையே இந்த வருமான அதிகரிப்பிற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.
சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்துச் சேவையின் கீழ், கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:"கடந்த 11ஆம் திகதி மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றில் ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும்"
என்று குறிப்பிட்டுள்ளார்.புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்களுக்காக விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக இந்த வருமானம் கிடைத்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களிலும் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, புத்தாண்டு கால விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் புத்தாண்டு காலத்தில் மக்களின் பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதில் வெற்றி கண்டுள்ளதுடன், வரலாறு காணாத வருமானத்தையும் ஈட்டியுள்ளன