தவெகவால் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?" – குஷ்பு விமர்சனம்

தவெகவால் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?"

தவெகவால் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?" – குஷ்பு விமர்சனம்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ராமலிங்கம், ராஜ்பவன் தொகுதியில் களமிறங்குகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை மேரி ஹால் நகராட்சி கட்டிடத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக தமிழக துணைத் தலைவர் குஷ்பு ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மீண்டும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசை சுட்டிக்காட்டிய அவர், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. ஆனால் புதுச்சேரியில் பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது. பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது,” என்று கூறினார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜயின் தவெக தனித்துப் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, “வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். 234 தொகுதிகளுக்கும் அவருக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்பது சின்ன சந்தேகம்தான்,” என்று குஷ்பு விமர்சனம் செய்தார்.

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் தமிழகத்தில் போட்டி என விஜய் கூறியிருப்பதற்கு, “என் வழியில் நான்தான் ராஜா எனக் கூறிக்கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை விஜய்க்கும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது. எங்கள் கூட்டணி சார்பில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமர்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என அவர் பதிலளித்தார்.

தானும் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்ற கேள்விக்கு, “கட்சிக்காக வேலை செய்கிறோம். கட்சி சொல்வதைத்தான் கேட்போம்,” என்றார். மேலும், தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைந்தால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு, “இதனை முடிவு செய்ய கட்சி மேலிட பொறுப்பாளர்கள் உள்ளனர்,” என்று பதிலளித்தார்.