ஹோர்முஸ் நீரிணை ஆண்டுக்கு $15 பில்லியன் வருமானம் – ஈரான் திட்டம்

ஹோர்முஸ் நீரிணை ஆண்டுக்கு $15 பில்லியன்

ஹோர்முஸ் நீரிணை  ஆண்டுக்கு $15 பில்லியன் வருமானம் – ஈரான் திட்டம்

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணங்களை உள்ளூர் நாணயமான ரியால் மூலம் செலுத்தும் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு $10 முதல் $15 பில்லியன் வரையில் வருமானம் ஈட்ட முடியும் என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினரான அஹ்மத் நாடெரி, இந்த திட்டம் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கத்தை அதிகாரப்பூர்வமாக்குவதோடு, நாட்டின் நாணயமான ரியாலின் மதிப்பை பிராந்திய வர்த்தகத்தில் உயர்த்தும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கடல் போக்குவரத்து கட்டணங்களை ரியாலில் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சில இடங்களில் பேசப்படும் அதிக வருமான மதிப்பீடுகள் “மிகைப்படுத்தப்பட்டவை” என்றும், உண்மையான நிலவரத்துடன் பொருந்தாதவை என்றும் அவர் எச்சரித்தார். இத்தகைய “உணர்ச்சி வசப்பட்ட மற்றும் நிஜமற்ற” கணிப்புகள் வெளிப்புற அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கடற்படை தடையை அறிவித்ததையடுத்து, இந்த முக்கிய நீரிணையில் பாதுகாப்பு சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20% இந்த நீரிணை வழியாக தினமும் கடந்து செல்கிறது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகள், கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்பீட்டு செலவுகள் அதிகரித்துள்ளன.