மின்சார ஊழியர்களுக்கு 17,000 ரூபா கொடுப்பனவு: 40% சம்பள உயர்வு மின் கட்டணத்தை 100% அதிகரிக்கும் என எச்சரிக்கை

மின்சார ஊழியர்களுக்கு 17,000 ரூபா கொடுப்பனவு: 40% சம்பள உயர்வு

மின்சார ஊழியர்களுக்கு 17,000 ரூபா கொடுப்பனவு: 40% சம்பள உயர்வு மின் கட்டணத்தை 100% அதிகரிக்கும் என எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 59 கோரிக்கைகள் ஆரம்ப கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலுவையில் உள்ள இறுதி இரண்டு கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதே போனஸ் கொடுப்பனவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவாக 11,000 ரூபாவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவையும் சேர்த்து சராசரியாக 17,000 ரூபா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வீத சம்பள உயர்வு என்பது மாதத்திற்கு 1.8 பில்லியன் ரூபா மேலதிக செலவாகும், இது ஆண்டுக்கு 22 பில்லியன் ரூபாவாகும். 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மின்சார சபையின் நட்டம் 35 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தினால், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சுமையை ஏற்றி மின் கட்டணத்தை 100 வீதம் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆகஸ்ட் முதல் நிலவிய 25 வீத சம்பள முரண்பாடு களையப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஏற்கனவே 25 வீத உயர்வைப் பெற்றிருந்த நிலையில், கீழ்நிலை ஊழியர்களுக்கு 7 முதல் 10 வீதம் மட்டுமே கிடைத்திருந்தது. இது 2025 ஜனவரி 1 முதல் சீர்செய்யப்பட்டது. தற்போது இந்தச் சலுகையை 2024 ஜனவரி 1 முதல் அமுல்படுத்துமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அமைச்சரவைத் தீர்மானம் என்பதால், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்ட நிலையில், எதற்காக இந்த வேலைநிறுத்தம் தொடர்கிறது என்பது புரியவில்லை என அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.