நாட்டுக்கு தேவை பொறுப்பான எதிர்க்கட்சி: தற்போதைய கார்ட்டூன் எதிர்க்கட்சி அல்ல - சரத் பொன்சேகா விமர்சனம்!
நாட்டுக்கு தேவை பொறுப்பான எதிர்க்கட்சி !
ஊழல்வாத அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் தற்போதைய அரசுக்கு தனது ஆசீர்வாதம் உண்டு; அரசை கவிழ்க்க எந்தக் குழுவோ அமைப்போ முயன்றாலும் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டிற்கு தேவையானது நாட்டை நேசிக்கும் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியே அன்றி, தற்போது உள்ள எதிர்க்கட்சி ஒரு “கார்ட்டூன் எதிர்க்கட்சி” போல் செயல்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். அந்த மக்கள் ஆணையின் அடிப்படையில் ஊழல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு நாங்கள் எமது ஆசீர்வாதத்தை வழங்குகிறோம்.
அரசாங்கத்தை கவிழ்க்க எந்தக் குழுவோ அல்லது அமைப்போ முயற்சி செய்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசாங்கம் தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியை முழுமையாக மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக இந்த அரசாங்கத்தை தொடர வைத்திருக்க வேண்டுமா அல்லது வேறு ஒரு குழுவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் நல்ல திசையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.” என்றார்.
Editor